( சித்திரம்: கிரிஸ் ரத்னம், ஆஸ்திரேலியா)
முந்தைய அத்தியாயத்தின் இணைப்பு: அத்தியாயம் 1
திலகம் பேச்சை உடனே முடித்துக் கொண்டு நேரே பார்வதியிடம் வந்தாள். பார்வதி,
அம்மாவின் தோளில் சாய்ந்து விம்மினாள்.
“அம்மா, ‘அஞ்சு வருசமாச்சு ஒன்னுமில்ல, வந்துட்டா ஆரத்தி யெடுக்க’ அப்படின்னு சத்தமா வேற சொல்றாங்கம்மா”
திலகத்துக்கு அடிவயிற்றிலிருந்து ஆத்திரம் பொங்கி வந்தது.
“நான் கேட்கறேன்” என்று கிளம்ப எத்தனித்தாள்.
” இப்போது போய் கேட்டு நாலு பேருக்கு தெரிந்ததை நானூறு பேருக்கு தெரியப்படுத்தப் போறியா” என்று சிதம்பரம் தடுத்தான்.
“இது ஞாயமாடா”
“எதுவாயிருந்தாலும் முருகன் கிட்ட பேசு. அவன் சப்போர்ட் இல்லாம பேசினாயானா
சரிப்படாது”
” ஐயோ.. எம்பொன்னுக்கு இருபத்தாறு வயசுதான ஆவுது…அதக்குள்ளயே பட்டம் கட்ராளே, நல்லாயிருப்பாளா”
பார்வதி தன் கணவனைப் பார்த்து, ” கிளம்புங்க; நமக்கு இங்கென்ன வேலை. அப்படி
நினைக்கறவங்க கூப்பிட்டிருக்கவே கூடாது”
திலகம்,” பார்வதி, யரோ திமிர்க்காரி செய்ஞ்சதுக்கு எல்லாரையும் பேசாத; நீ எங்களுக்கு முக்கியமடா”
“இனி நானில்லை; அதோ அங்க காப்பு போட்டுகிட்டு இருக்காளே, அவதான் உன்னை
பாட்டியாக்கப் போறவ; அவள தலைமேல தூக்கி வச்சுக்க. …ஏங்க இன்னும் என்ன வாய்
பாத்துகிட்டு இருக்கீங்க; எந்திரிங்க.” என்ற கணவன் பக்கம் பார்த்து கத்தினாள்.
திலகத்தின் கணவர் தன் மாப்பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டு என்னென்னவோ
சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் பார்வதி வலுக்கட்டாயமாக தன் கணவனை
கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். என்ன செய்வதென்று அறியாமல் திலகம் கையை பிசைந்தபடி பின்னாலேயே ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.
அவர்களோ திரும்பியும் பாராமல் லிஃப்டில் ஏறிப் போய் விட்டார்கள்.
சாப்பாடு பந்திக்கு எல்லாரையும் வந்து அழைத்தார்கள்.. இவர்கள் எழுந்து போகாமல்
உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு பந்தி முடிந்த நிலையில் தன்னுடைய அம்மா அப்பா மாமா இன்னும் சாப்பிடவில்லை என்பதை அறிந்து அவர்கள் இருக்குமிடம்
தேடிவந்தான்.
“அப்பா வாங்க , சாப்பிடப் போகாமல் ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று கூப்பிட்டான்.
“முருகா, அக்கா அத்தானை சாப்பிட கூட்டியாடா” என்று அம்மா கூறினாள்.
அப்போதுதான் அவர்கள் அங்கு இல்லை என்று கவனித்து,
“ஆமாம், பார்வதி எங்கே காணோம்” என்று கேட்டான்.
“ஏன்டா உனக்கு ஏதுமே தெரியாதா? அவள் கோபித்துக் கொண்டு போய் விட்டாளடா” என்று மூக்கை சிந்தினாள்.
“ஏன், என்ன நடந்தச்சு ; சரி நீங்க வந்து சாப்பிடுங்க. நான் அத என்னன்னு பார்க்கறேன்”
என்று அவர்களை சாப்பிட அழைத்துக் கொண்டு போனான்.
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது அம்மாவிடம் நைசாக என்னதான் நடந்தது என்று கேட்டான். அம்மா துக்கம் தொண்டையை அடைக்க அடைக்க எல்லாவற்றையும் சொன்னாள்.
முருகன் மனதார வருந்தினான் என்றாலும் மாமியாரிடம் சண்டை போட்டு சூழ்நிலையை
மோசமாக்கிக் கொள்ள விரும்பவில்லை.
பந்தியெல்லாம் முடிந்ததும் முருகனின் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
முருகனையும் தன்னோடு வரும்படி அவன் மனைவி கூப்பிட்டாள்; ஹோட்டல் கணக்கை
முடித்து விட்டு வருவதாகக் கூறி அனுப்பிவைத்தான்.
அதற்குமேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் சிதம்பரம் கிளம்பினான்.
இரண்டு பேருக்கான சாப்பாடு பார்சல் வாங்கிக் கொண்டான். வரிசையில் இருந்த
பழங்களில் சிலவற்றையும் எடுத்துக் கொண்டான். “அம்மா, நான் பார்வதி வீட்டுக்குப் போய் கொடுத்து விட்டு அப்படியே என் மாமனார் வீட்டுக்குப் போய் விட்டு வருகிறேன். நீங்கள் வீட்டுக்குப் போங்கள் ” என்றான்.
“நாங்களும் கூட வரட்டுமாடா. அவள் அழுது கொண்டே போனது மனதை என்னவோ
செய்யுதடா”
“வேண்டாம்மா, நானே சமாளிச்சிடறேன். நான் சொன்னா அவ நிச்சயம் சமாதானமடைவா”
அதற்கும் மேல் அவனிடம் பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை என்பதை தெரிந்து
கொண்டாள்.
“நீ அங்க போனதும் மறக்காம போன் பன்னுடா”
திலகம் கணவருடன் கிளம்பி வீட்டுக்குப் போனாள். அவள் கணவர் வீடு போய் சேரும் வரை எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை.
வீடு போய் சேர்ந்ததும் திலகமே ஆரம்பித்தாள்.
“அது என்ன அந்த அம்மாவுக்கு அப்படி ஒரு ஆணவம்.
“அவங்க ஆணவம் இப்பத்தான் உனக்குத் தெரியுதா”
“இல்லை…”
“திலகா, நம்ம தகுதிக்கு மீறின எடத்துல பெண் எடுத்ததுதான் தப்பு.”
” எனக் கென்னமோ முன்னாடி நான் செஞ்ச தப்பெல்லாம் என் பெண்ணுக்கு தண்டனை
தருதோன்னு தோனுதுங்க”
“இப்ப நெனைச்சு வருந்தி என்ன பிரயோசனம், திலகா”
“என்னை தயவுபன்னி அங்க அழைச்சுக்கிட்டு போறீங்களா”
சிதம்பரம் வீட்டுக்கு போற வழியில போகாம வேற வழியில போறதைப் பார்த்த அவன்
மனைவி கேட்டாள்; வழியில் ஒருத்தரைப் பார்த்துட்டு போகலா மென்று கூறினான்.
கடைத்தெருவில் பழம் பூ ஸ்வீட் எல்லாம் வாங்கிக் கொண்டான்.
வண்டி நேரே அவன் பெரிய அக்கா தேவிகா வீட்டுக்குப் போனது. தம்பியைப் பார்த்ததும்
தேவிகாவுக்கு ஒரே ஆச்சரியம். அவள் இடுப்பிலேயே தூக்கிக் கொண்டு அலைந்த
பிள்ளையல்லவா அவன்.
கண்களைத் துடைத்துக் கொண்டே, “வாடா” என்ற ஒற்றை சொல்லில் வரவேற்றாள்.
உட்கார்ந்து அத்தானோடு பேசிக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு காபி போட உள்ளே போய் விட்டாள். அவளுக்குத் தெரியும், இருந்தால் உடைந்து போய் அழுதுவிடுவாள்.
நாளை தொடரும்….
பிள்ளை இல்லாத பெண்களுக்கு பெண்கள் தான் எதிரியாக இருக்கிறார்கள்.
LikeLike
இது போல நிறைய மனிதர்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்; என்ன செய்வது. காலம்தான் அவர்களுக்கு நல்ல பாடத்தை கற்பித்து திருத்த வேண்டும்.
LikeLike