( சித்திரம்: கிரிஸ் ரத்னம், ஆஸ்திரேலியா)
திலகம் காலையிலேயே மிகவும் சுறுசுறுப்பாக எழுந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள். இன்று அவளுடைய மருமகள் குறிஞ்சிக்கு வளைகாப்பு. மகன் முருகனுக்கு திருமணமாகி பத்து மாதமே ஆகிறது; மருமகளுக்கு இது ஏழாவது மாத கர்ப்பம். இந்த செய்தியால் திலகத்துக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.
தாமதம் மட்டும் ஆகி இருந்தால் இந்த உலகம் ,
” என்ன ஒன் மருமக சும்மாதான் இருக்காளா” என்று ஆளாளுக்கு கேட்டே நோகடித்து விட்டிருக்கும்; நல்ல வேளையாக அந்த இக்கட்டிலிருந்து தப்பித்தாள்.
சம்மந்தி பெரிய இடம் என்பதால் ஒரு ஹோட்டலில் பார்ட்டி ஹால் ஏற்பாடு செய்திருக்கிறான் முருகன். வெரைட்டி ரைஸோடு வடை பாயாசம் சாப்பாடு.
பகல் பன்னிரண்டுமுதல் ஒரு மணி வரை வளைகாப்பு. சடங்கு முடிந்ததும் ஒருமணிக் கெல்லாம் பந்தி பறிமாறிவிடுவார்கள்.
பத்து மணிக்கே கிளம்பி ஹோட்டலுக்கு போக வேண்டுமாம்; மேக்கப் காரர்கள் வந்து விடுவார்களாம்; முருகன் பரபரத்தான். திலகமும் கணவரும் அவன் ஆட்டிய படியெல்லாம் ஆட வேண்டியதுதான்; ஓரே மகனாச்சே.
“என்னங்க, நாம இப்பவே கிளம்பரதால பார்வதியையும் மாப்பிள்ளையையும் போய் அழைத்துப் போக முடியாது, அவங்களை நேரே ஹோட்டலுக்கே வந்திடச் சொல்லிடுங்க” என்று தன் மகளுக்கு தகவல் கொடுத்திடச் சொன்னாள். அவர்கள் நால்வரும் ஹோட்டலுக்கு கிளம்பி போனார்கள். யாருமே பேச்சு துணைக்கு இல்லாமல் திலகமும் கணவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
நேரம் நகர மறுத்து மெல்ல மெல்ல தவழ்ந்து கொண்டிருந்தது. கடிகாரத்தின் ஓட்டத்தைவிட மனவோட்டம் அதிகமாக இருந்ததால் கடிகார முள் மிகவும் பின் தங்கி வந்து கொண்டிருந்தது. திலகத்தின் தம்பி சிதம்பரம் தன் மனைவியோடு வந்தான். அவன் வந்ததும் அவளுக்கு ‘அப்பாடி’ என்றிருந்தது. சிதம்பரம் வந்ததும் வராததுமாக சுற்றமுற்றும் ஏதோ தேடுபவன் போல் தெரிந்தது; அவளுக்கு என்னவென்று தெரிந்தாலும் கேட்டால் சொல்லிக் கொள்ளலா மென்றிருந்து விட்டாள். அடக்கமாட்டாமல் சிதம்பரம் கேட்டேவிட்டான்.
“என்ன இன்னும் தேவிகா அக்காவைக் காணோம்”
” கூப்பிட்டால்தானே வரும்”
“ஏன், கூப்பிடலையா நீ”
இல்லை என்பது போல திலகம் தலையசைத்தாள்.
“என்ன இருந்தாலும் நமக்கு மூத்தத கூப்பிட்டிருக்கனுமில்ல”
திலகம் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். சிதம்பரமும் மேற்கொண்டு ஏதும் கேட்க வில்லை.
திலகத்தின் கவலை வேறு விதமாக இருந்தது. மகள் பார்வதியை போய் அழைத்து வராமல் நேரே ஹோட்டலுக்கு வரச் சொன்னதில் கோபித்துக் கொண்டு வராதிருந்து விட்டால் என்ன செய்வது என்பதே அது.
அவள் பயந்தபடி ஏதும் நடக்க வில்லை. மகள் பார்வதியும் மாப்பிள்ளையும் வந்து விட்டார்கள். வாயெல்லாம் பல்லாகச் சென்று அவர்களை வரவேற்றாள். வேகமாக மகனிருக்குமிடம் சென்று,” முருகா, பார்வதியும் மாப்பிள்ளையும் வந்து விட்டார்கள்; வாடா.. வந்து ஒருவாய் ‘ வாங்கோ அத்தான்’ என்று கூப்பிடு” என்றாள்.
முருகன், ” நீ போம்மா, நான் வர்ரேன்” என்றான். திலகம் தொங்கிய முகத்தோடு திரும்ப வேண்டியதாயிற்று.
பார்வதியும் மாப்பிள்ளையும் சிதம்பரத்திடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
மணி சரியாக பதினொன்று முப்பதுக்கு முருகனின் மாமனார் விட்டு சனங்கள் திபுதிபுவென வந்தார்கள்.
முருகன் பரபரப்பாக அவர்களை வரவேற்பதும், அசடு வழிய சிரிப்பதுமாக இருந்தான். வளைகாப்பு வைபவம் களை கட்டத் தொடங்கியது. பிள்ளைதாச்சிப் பெண் உட்கார மனை போடப்பட்டது; எதிரே முக்காலி வைத்து அதில் சந்தனம் குங்குமம் பன்னீர் சொம்பு எல்லாம் வைத்தார்கள். நலங்கு இடுவதற்கான வற்றை சிறிய தாம்பாளங்களில் அடுத்தடுத்து வைத்திருந்தார்கள். பக்கவாட்டில் குத்து விளக்கேற்றி வைத்தார்கள். அதற்கெதிரே வரிசை சாமான்கள், வளையல் எல்லாம் வைத்தார்கள்.
முருகனின் மனைவி குறிஞ்சியை மனையில் உட்கார்த்தி புறங்கையில் சந்தனம் குங்குமம் வைத்து நெற்றியில் பொட்டிட்டார்கள். வேம்புக்காப்பு, வெள்ளிக்காப்பு, பொன் காப்பு அணிவித்து வளையல் அணிவித்தார்கள். திலகம் பார்வதியை அழைத்துச் சென்று நாத்தனார் காப்பு அணிவிக்கச் செய்வதற்குள் கூட்ட மிகுதியால் ஒரே தள்ளு முள்ளு ஆகிவிட்டது. அப்போது திலகம் பார்வதியிடம் ஒரு செய்தியைக் கூறி ” நான் அப்போது எங்கிருப்பேனென்று தெரியாது; மறந்துவிடாதே” என்றாள். பெரும் பரபரப்பாக நிகழ்வு முடிந்து கடைசியாக ஆரத்தி எடுக்கும் கட்டம் வந்தது.
அதில் மூன்று பேரில் ஒருவராக பார்வதி நின்று கொண்டிருந்தாள். கற்பூரம் கொளுத்துவற்கு முன் முருகனின் மாமியார் வந்து,” தள்ளு” என்று பார்வதியை விலக்கிவிட்டு தன் வயதொத்த முதிய பெண்மணியை ஆரத்தி எடுக்கச் சொன்னாள். கண்களில் நீர் முட்ட பார்வதி அங்கிருந்து நகர்ந்தாள். உறவுக்காரர்களிடம் பேசியபடி இருந்த திலகம் எதேச்சையாகத் திரும்பியவள் இதைப்பார்த்து அதிர்ந்து சிலையானாள்.
நாளை தொடரும்….
Leave a Reply