(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
என்னுடைய பள்ளி நாட்களில் ஒவ்வொரு வருடமும் அரையாண்டு விடுமுறையில் கிராமத்து பாட்டி வீட்டுக்கு போவது வழக்கம். காவிரி பாயும் அழகிய ஊர்; நீர்வளமும் நிலவளமும் நிறைந்திருக்கும். நன்செயும் புன்செயும் செழித்திருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்றிருக்கும்.
வரதராஜப் பெருமாள் பெருமாள் கோவில் பிரசித்தம்.
‘கூற்றமும் சாரா
கொடுவினையும் சாரா” என்று திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஆலயம்.
மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் அக்கிரகாரத்து ராஜாமணி ஐயங்கார் தலைமையில் பெருமாள் கோவிலிலிருந்து பஜனை கோஷ்டி கிளம்பி நான்கு வீதியும் சுற்றி வந்து கோவிலிலேயே முடியும். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் ‘ஜிஞ்சா’ போட தாளம் எல்லாருக்கும் கிடைக்காது. ஒரு சில நாட்களில் யாருமே இல்லாமல் ஐயங்காரும் அவர் மகனும் மட்டுமே பாடிக் கொண்டு போவார்கள். நானும் பஜனையில் போவேன். ஒவ்வொரு பஜனை பாடல் முடிந்ததும் நின்று
“ஹரி ஹரி கோவிந்தநாம சங்கீர்த்தனம்”
“கோவிந்தா கோவிந்தா” என்றும்
“நமப்…பார்வதி…… பதயே”
“அரகர மகாதேவா” என்றும் ஜெய கோஷம் போடுவார்கள். அப்போது ஒருவன் சங்கொலி எழுப்புவான்.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அழகு மயில்களான பெண்கள் புள்ளி வைத்து கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். பாவாடை தாவணியை தூக்கி சொருகிக் கொண்டு குனிந்து புள்ளிவைப்பதும் கம்பி இழுப்பதும் பார்த்த இளவட்டங்கள் பாடலும் பாடாமல் தாளமும் தட்டாமல் மந்திரிச்சு விட்டது போல போவார்கள். கடுமையான மார்கழி குளிரிலும் இளவட்டங்கள் உடலும் உள்ளமும் கொதிக்கக் கொதிக்க சூடாக நடப்பார்கள். எனக்கென்னமோ பஜனைக்கு இவர்கள் வருவதே இதற்காகத்தான் என்று தோன்றுகிறது.
பஜனை முடிந்ததும் மடைப்பள்ளி ரங்கன் எல்லாருக்கும் ‘சுடச்சுட’ பொங்கல் தருவான். நந்தவனத்து வாதாம் மரத்து இலை பறித்து வந்து அதில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆவிபறக்கும் சூடு இலையையும் தாண்டி கையைச் சுடும். இரண்டு இலை வைத்திருப்பவர்கள் தப்பித்தார்கள். அப்போதும் ஓரத்திலிருந்து ஒவ்வொரு விரலளவாக எடுத்து வாயில் வைத்து ‘உஸ்…ஆ’ என்றபடியே சாப்பிடுவார்கள். பின் நேரே காவிரிக்கு ஓட்டம். தழைந்து காவிரி நீரின் மேல் வளைந்து நிற்கும் நுணா மரத்தில் ஏறி தண்ணீரில் ‘தொபீர்..தொபீர்’ என்று குதித்துக் குளியல் போட்டு விட்டு ஈர கால் சட்டையோடு குளிரினால் பற்கள் தந்தியடிக்க வீட்டுக்கு ஓட்டம்.
அதன் பின் கோவில் நந்தவனத்தில் ஆட்டம். அதிலுள்ள தங்க அரளி, ஒற்றை நந்தியாவட்டை, அடுக்கு நந்தியாவட்டை எல்லாவற்றையும் பறித்து வந்து நான் பாட்டியிடம் தருவேன். பாட்டி அதையெல்லாம் நெருக்கமாகத் தொடுத்து சாயங்காலம் கோவிலுக்கு கொடுத்தனுப்புவாள்.
மார்கழி மாதம் அதிகாலையில் திருப்பாவை எச்எம்வி ரெக்கார்டு போடுவார்கள். எம் எல் வசந்தகுமாரி வெளுத்து வாங்குவார். அவர் கூடவே சேர்ந்து அக்கிரகாரத்து மாமிகளும் அவரவர் வீட்டில் இருந்தபடியே பாடுவார்கள். சில நாளில் அந்த பாட்டு போடுபவர் நேரத்தை மிச்சம் பிடிக்க ஒரு ரெக்கார்டு ப்ளேட்டை தவிர்த்து விட்டு போகும் போது மாமிகள் கண்டு பிடித்து வீட்டிலுள்ள பிள்ளைகளை அனுப்புவார்கள்.
“அண்ணா நாலு திருப்பாவை விட்டுட்டீங்க” ன்னதும் விடுபட்ட ரெக்கார்டை மறுபடி போடுவார். இது அடிக்கடி நடக்கும்.
அநேக நேரமெல்லாம் வாகன மண்டபத்தில்தான் நான் இருப்பேன், அதன் கேட்டுக்கு பூட்டு கிடையாது. கோவில் ராஜ கோபுரத்துக்கு வெளியேதான் வாகன மண்டபமும் மடைப்பள்ளியும் இருக்கும். மடைப்பள்ளியின் இன்னொரு வழி ராஜ கோபுரத்துக்கு உள்ளே மகா மண்டபத்தில் போய் முடியும். அங்குதான் மனவாளமாமுனிகள், ராமானுஜர் சன்னதியெல்லாம் இருக்கும். அந்த மகா மண்டபத்திலிருந்து மூன்று படியேறினால் அர்த்த மண்டபம் போக கதவு.
அதிக பாதுகாப்பு மிக்க கதவு. வெளியே பெரிய திண்டுக்கல் பூட்டு தொங்கும்; பூட்டு உள்ளே நுழைந்து திறக்கும் சாவியின் அந்த பாகம் மட்டும் இரண்டு அங்குல நீளமும் ஒரு அங்குல அகலமும் இருக்கும். கதவுகளின் நடு உள் தாழ்ப்பாள் வித்யாசமாக இருக்கும். அரையடி கனம் உள்ள சட்டம் வலம் இடமாக நகரும்படி அமைக்கப் பட்டிருக்கும். அதில் ஒரு கனமான கம்பி ஆனி போல பெருத்தியிருப்பார்கள். அந்த சட்டம் இடப்பக்க கதவில் உள்ள ப வடிவ கொண்டியில் போய் நுழைந்து தாழ் போடும். வலப்பக்க கதவில் இரண்டு அங்குல விட்டமுள்ள துவாரம் இருக்கும். கேள்விக் குறி போன்ற வளைந்த கம்பியை வெளியில் இருந்தபடியே அதன் வழியே உள்ளே விட்டு திருப்பினால் சட்டத்தில் உள்ள கம்பியில் பொருந்தி இடம் வலமாக நகர்த்தும்.
அர்த்த மண்டபத்தில்தான் பஞ்சலோக உற்சவ மூர்த்திகள் பாதுகாப்பாக கம்பிகளுக்குள் சிறை வைத்தது போல இருக்கும். எதிரே கர்பகிரகம், அதற்கும் ஒரு கதவு. இடப்புறம் அதாவது வடக்கு பக்கம் ஒரு பெரிய கதவு; அதுதான் சொர்கவாசல் கதவு. வைகுண்ட ஏகாதசிக்கு மட்டும் திறப்பார்கள்; மற்றபடி உள் தாழ்ப்பாள் போட்டபடியே இருக்கும். ராஜ கோபுரக் கதவில் ஒரு திட்டிவாசல் இருக்கும். அதாவது ஒருவர் உடலைக் குறுக்கி உள் நுழைந்து செல்லும்படியான கதவு; உள்பக்க மாக இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு மூடிவைத்திருப்பார்கள். அந்த சிறிய கதவின் மகத்துவம் மூன்று நாளில் தெரிந்தது.
தொடரும்……
மார்கழி இப்போதே பிறந்து விட் டது போல் இருக்கிறது.
அந்தக் கால மார்கழியை அப்படியே கண்முன் நிறுத்தி விட்டீர்கள். பெருமூச்சு விட்டுக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
LikeLike
மார்கழியை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.
அக்கால மார்கழி கண் முன்னே நிற்கிறது .
LikeLike
பசுமரத்தாணி போல பதிந்தவை. இத்தனை நாள் நீருபூத்த நெருப்பாயிருந் திருக்கிறது. மேய்ந்து விட்டு வந்து ஓய்வாகப் படுத்து அசை போடும் மாடு போல போட்டுக் கொண்டிருக்கிறேன்.
LikeLike