Image source: ashokism
இது ஒரு அறிமுகமே; முழு ஆய்வு அல்ல; ஆர்வமுள்ளவர்கள் வலைகளிலும், நூல்களிலும் தேடித்தெளியலாம்
தமிழகத்தின் தொன்மையான இசைக்கருவி பறை எனப்படும். பறை என்றால் பேசு என்று பொருள்படும். தோல் கருவிகளில் முதலில் தோன்றியது பறையென்றால் மிகையாகாது.
பறைக்கு மற்றொரு பெயர் தப்பு என்பதாகும்.
கற்காலத்தில் பறைதான் முதலில் செய்தித் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டது. வேட்டையாடும் மனிதர்கள் ஒன்று கூடவும், விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பறையோசை பயன்பட்டது.
வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தை உண்டுவிட்டு காய வைத்திருக்கும் தோலை தட்டி ஒலி எழுப்பியதிலிருந்து பறை உருவானது எனலாம்.
தமிழகத்தில் ஐவகை நிலங்களின் பெயரால் குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தல்பறை, பாலைப்பறை என இருந்ததாக தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் தீட்டைப்பறை,தொண்டகச்சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறு பை, மென் பறை, இன்னிசைப் பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை என்ற பெயர்களில் குறிக்கப்பட்டுள்ளது.
பறை மக்களின் வாழ்வோடு கலந்தது. சங்ககாலம் முதல் பறை இசைக்கப்பட்டதற்கு சான்றுகள் ஏராளம் உள்ளன. மன்னரின் அறிவிப்புகள் முரசரைந்தோ பறையடித்தோதான் சொல்லப்படும்.
போர் புரிகையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களை வெளியேற்ற | வெள்ளம் வந்தால் அடைக்க |
உழவர்களை ஒன்றினைக்க | போருக்கு வீரர்களை திரட்ட |
வெற்றி தோல்வியை தெரிவிக்க | கழனி வேலை செய்பவர்க்கு உற்சாகமூட்ட |
விதைக்கும் காலத்தில் | அறுடைக் காலத்தில் |
விங்குகளை விரட்ட | மன்னரின் அறிவிப்புகளை வெளியிட |
இயற்கை வழிபாடுகளில் | கூத்து நடக்கையில் |
விழாக்களில் | இறப்புகளில் |
பறை இவை போன்ற வாழ்வியலோடு இணைந்து கிடந்தது.
காலப்போக்கில் பறை ஒரு இனத்தின் இசைக்கருவியாகி அடிமையின் சின்னமாகிப் போனது வேதனை.
தற்போது பறை பண்பாடு, சமூக விடுதலை ஆகியவற்றின் அடையாளமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான குழுக்கள் தோன்றி செயல்படுகின்றன. அதனால் கோவில் விழாக்கள், வாழ்க்கை வட்ட நிகழ்வுகள், அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை இடம் பிடித்துள்ளது.
பறையோடு இணைந்த தோல் பட்டையை இடது தோளில் மாட்டி, பறையை வயிற்றுப் பகுதியில் அழுத்தி வைத்துக் கொள்வார்கள். இதனால் இலகுவாக நடக்கவும், நடனமாடவும் முடியும். மூங்கிலிலான ஒன்றரை அடி நீளமும் அரை செ.மீ அகலமும் உள்ள சிம்பு குச்சி அல்லது சுண்டு குச்சியால் பறையின் மேல்புறம் அடிப்பார்கள். அடிக்குச்சி அல்லது உருட்டுக் குச்சி என்ற பூவரசமரக் குச்சியால் பறையின் அடிப்பகுதியில் அடிப்பாரகள். சிம்பு குச்சி ‘த’ என்றும் அடிக்குச்சி ‘கு’ என்றும் ஒலிக்கும். இந்த ‘த’வும்’கு’ வும் வெவ்வேறாக சேர்ந்து சொற்கட்டுகளை உருவாக்குகிறது.
( ‘கட்ட வண்டி’ என்ற ஒரு சினிமா பாடலில் “தய்….த த கு… த த கு..த த கு..த த கு…த த த” என்ற சொற்கட்டை கேட்கலாம்)
உணர்ச்சிளை வெளிக்காட்டவும், வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கும் என தனித்தனி அடி வகைகள் உள்ளன. சப்பரத்து அடி, டப்பா அடி, சினிமா அடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிக்கட்டு அடி, ஒத்தைஅடி,மாரடிப்பு அடி, வாழ்த்தடி போன்றவற்றை அவ்வாறு கூறலாம்.ஆட்டத்தில் நேர் நின்று, எதிர்நின்று ,வளைந்து நின்று ஆடுவார்கள். ரசிக்கத் தக்க விதமாக அடி முறைகளை மாற்றி ஆடுவார்கள்.
தஞ்சாவூர்,மதுரை,திண்டுக்கல் மாவட்டங்களில் இக்கலைஞர்கள் அதிகம் வாழ்கிறார்கள். தற்போது ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் பங்கு பெற்று ஆடுகிறார்கள்.
பறை இன்று பண்பாட்டின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது; மேடையிலாடப் படுகிறது. வட தமிழ்நாட்டிலும் இது ஒரு மக்கள் கலையாக பரவத் தொடங்கியுள்ளது.
எல்லா நிகழ்வுகளிலும் பிற மாநிலங்களின் இசை கருவிகளுக்கு பதில் ‘தஞ்சாவூர் தப்பாட்டம்’ இசைக்கும் நாளே தமிழிசைக்கான நாளாகும்.
Leave a Reply