(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
முந்தைய அத்யாயங்களின் இணைப்பு: அத்தியாயம் 1, அத்தியாயம் 2
கேட்கதவுக்கு கொஞ்சம் முன்னே வந்துதான் நின்றார்கள். குனிந்து முழங்காலைப் பிடித்தபடி சற்று நேரம் நின்றார்கள்.
“எலே முருகா, பேயோட சிரிப்பு சத்தமாடா அது”
“அங்க சிரிக்க வேற யார்டா இருந்தா”
“எனக் கென்னமோ அது மருதைய்யா சாமி சிரிச்சா மாதிரிதான் தெரியுது” என்று சுப்பிரமணி கூறினான்.
“நீ இதுக்கு முன்னாடி மருதைய்யா சிரிப்பை கேட்டிருக்கியா”..முருகன்.
“இல்லைடா”..சுப்பிரமணி
” பின்ன தெரிஞ்சா மாதிரி சொல்ற”
” எலலாம் ஒரு யூகம் தான்டா”
“எலேய்.. மருதையாகிட்ட இந்த வெளையாட்டெல்லாம் வச்சுக்காத, நெசமா அது பேயோட சிரிப்பாயிருந்தா என்னா பண்ணுவ”
” அத்தோட அத வுட்டுடு, தெரியாமத்தான பேசின, மருதையா மன்னிச்சிடுவாரு.”
தோப்புக்கு வெளியே வந்தவர்கள் கேட்கதவை சாத்தி பூட்டினார்கள். ஓடி வந்த களைப்பு தீர அடிபம்பில் தண்ணீர் அடித்து குடித்தார்கள். ஒருவர் அடிக்கும் போது மற்றவர் நீர் வெளியே கொட்டுமிடத்தில் இரண்டு கைகளையும் வைத்து, அதில் விழும் நீரை ஆடு மாடு மாதிரி உறிஞ்சிக் குடிப்பார்கள். அப்படித்தான் இருவரும் மாறி மாறி தண்ணீர் குடித்தார்கள்.
நேரே நாட்டாண்மைக் காரரிடம் போய் தாங்கள் கண்ட காட்சியைக் கூறினார்கள்.
“எலே முருகா, என்னடா கதை விடுரீங்களா, பூசை போடன்னு யாரும் கேட் சாவி வாங்கி கிட்டு போகலையேடா”
“நாங்களும் அதையேதான பேசிக்கிட்டு வந்தோம்”
” அண்ணே, அது மட்டுமில்ல; பயமுறுத்துறாப்ல பேய் வேற எப்படி பயங்கரமா சிரிச்சது தெரியுமா” இது சுப்பிரமணி.
நாட்டாமைக்காரர் யோசிக்க ஆரம்பித்தார். இவர்கள் ஏதோ கற்பனையில உளறுவதாக நினைத்தார். வேற இரண்டு பேரை அனுப்பி இதை உறுதிப் படுத்திக் கொள்ள விரும்பினார்.
“எலே மருதமுத்து, நீயும் தொரையும் போய் இது உண்மையா இல்லையான்னு பார்த்துட்டு வாங்கடா” என்று வேறு இரண்டு பேரை அனுப்பினார்.
புதிய இரு நபர் ஆய்வுக்குழு சாவியுடன் மருதையா தோப்பு நோக்கி நடந்தது.
“தொரை, இவனுங்க சொல்ரதை நீ நம்புரீயா”
” இவனுங்க உள்ளேயே போயிருக்க மாட்டானுவ; சரியான தொடை நடுங்கிப் பசங்க மாமா” என்று தன் தீர்ப்பை வாசித்தான் தொரை.
இரண்டு பேரும் மருதையா இருக்கும் மாமரத்தை நோக்கி பேசிக் கொண்டே நடந்தார்கள்; அதற்கு காரணம் உண்டு. பேசிக் கொண்டு நடப்பதால் பயம் தெரியாமல் இருக்கும். என்னதான் பேசிக் கொண்டே நடந்தாலும் அவர்களுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கவே செய்தது; ஒருவருக்கொருவர் பலகீனத்தை காட்டிக் கொள்ளாமல் சென்றார்கள்.
ஒருவழியாக மருதையா சிலை இருக்குமிடத்தை அடைந்தார்கள். பெரிய வாழையிலை, அவல், பொரி, வெல்லம், எரிந்து அப்போதுதான் அணைந்திருக்கும் ஊது பத்தி எல்லாம் பார்த்தார்கள். மாமரத்தை ஒரு சுற்று சுற்றி வந்தார்கள். எந்த முடிவுக்கும் அவர்களால் வர முடிய வில்லை. பூசை பொருள்களை தொடப் பயந்தார்கள். செய்வினை ஏதாகிலும் இருந்தால் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என்பதுதான் அதன் காரணம். அவர்கள் பயத்துடனே யோசித்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் பயந்தது நடந்து விட்டது.
திடீரென்று பேய்ச்சிரிப்பு கேட்டது. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தார்கள். ஆட்கள் யாரையுமே காணோம்; ஆனால் சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை இழந்து கொண்டிருந்தார்கள்.
“டேய் தொரை, இதுதான் அவங்க சொன்ன பேய்ச்சிரிப்பு டா”
“…………………..” தொரை கிட்ட இருந்து பதிலே இல்லை.
பேய்ச்சிரிப்பு திடீரென்று நின்று போனது. இரண்டு பேரும் நிம்மதி பெருமூச்சு விடத் துவங்கும் போது மீண்டும் அதே பேய்ச்சிரிப்பு ஆரம்பித்தது.
“ஓடியாடா தொரை” என்று கத்தியபடியே மருதமுத்து திரும்பி ஓடத் தொடங்கினான்; தொரையும் அவனைத் தொடர்ந்து ஓடினான்.
“ஒருவேளை மருதைய்யாதான் சிரிச்சாரோ” என்று பேசிக் கொண்டே ஓடினார்கள்,
” யாருமே இல்லாத இடத்தில் அவர்தான் சிரித்தது”
மீண்டும் மீண்டும் கேட்ட சிரிப்பொலி அவர்களை துரத்தவே இன்னும் வேகமாக ஓடினார்கள். கேட்டுகதவை பூட்டக்கூட மறந்தவர்களாக ஓடினார்கள். தெரு மக்களெல்லாம் ‘ஏனிப்படி தலை தெறிக்க ஓடுகிறார்கள்’ என்று குழம்பியபடி பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
தொடரும்……