(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
முந்தைய அத்யாயங்களின் இணைப்பு: அத்யாயம் 1
இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்களே, அதற்கேற்றபடி சிறுவர் பட்டாளம் அங்குதான் கூட்டமாக வந்து விளையாடும். அதுவும் யாரும் அந்தப் பக்கம் வர பயப்படும் உச்சி நேரம்தான் அங்கு கூடுவார்கள்; அப்போதுதான் அதை யாரும் பார்க்க மாட்டார்கள்.
மருதையா தோப்பில் விழுந்து கிடக்கும் தேங்காய்களை பொறுக்கிக் கொண்டு வருவார்கள். அதை நார் எடுத்து வெறும் ஓடு மட்டும் இருக்கும் படி உறிப்பார்கள். மூன்று கண்களில் ஒன்றைத் திறந்து பாதியளவு தண்ணீரை வைத்துக் கொண்டு மீதியை வடித்து விடுவார்கள். அதற்கு உள்ளே வெல்லம், பொரி, அவல்,பொட்டுக்கடலை, ஏலக்காய் எல்லாம் போட்டு நிரப்புவார்கள். பச்சை மூங்கில் மரத்திலிருந்து மூங்கில் முள்ளை அடிக் கொண்டையோடு வெட்டி வருவார்கள். கொண்டை பகுதியில் மூன்று அங்குலம் அளவோடு வெட்டி எடுத்துக் கொள்வார்கள். திறந்து வைத்த தேங்காய் கண்ணுக்குள் நுழையும் அளவுக்கு மூங்கில் முள்ளை சீவி , அதை தேங்காய் கண்ணில் சொருகி இறுக்கமாக அடித்து மூடிவிடுவார்கள்.
எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை தேங்காய்கள் தயார் செய்வார்கள். காய்ந்த சுள்ளிகளையும், காய்ந்த மாட்டு சாணங்களையும் பொறுக்கிக் கொண்டு வந்து தீ மூட்டுவார்கள். அதில் தேங்காய்களை வரிசையாக வைத்து வேக விடுவார்கள். அவை நன்றாக வெந்தும் ‘டப்’ என்ற சப்தத்துடன் வெடிப்பு விடும். எரியும் தேங்காய் ஓட்டின் கருகல் மணமும், வெந்த தேங்காய் உள்ளிருக்கும் பொருள்களின் மணமும் கலந்து வீசும்.
பக்கத்தில் உள்ள வாழைத் தோட்டத்தில் இருந்து வெட்டி வந்த முழு வாழை இலையை பரப்பி வைப்பார்கள். நெருப்பிலிருந்து தேங்காய்களை எடுத்து ஓடுகளை நீக்கி இலையில் வைப்பார்கள். அங்கு சாமி கும்பிட வந்தவர்கள் கொளுத்தி எரியாமல் விடுபட்ட ஊதுபத்தி, கற்பூரத்தை யெல்லாம் எடுத்து கொளுத்துவார்கள். ஆளுக்கு ஒரு தேங்காயை எடுத்துக் கொள்வார்கள். தேங்காயையும் உள்ளிருப்பதையும் சேர்த்து சாப்பிடுவார்கள். சந்தோசமாக சுடுதேங்காய் வைபவத்தை கொண்டாடிவிட்டு போவார்கள். இப்படி அடிக்கடி நடக்கும்.
மருதையா தோப்பு சாமி மாமரத்தை நெருங்கிய முருகன், சுப்பிரமணி இரண்டு பேரும் ஒருகணம் அப்படியே நின்று விட்டார்கள்; ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
” எலேய் முருகா இதெல்லாம் என்னாடா”
“சுப்ரமணி யாரோ வந்து ரகசியமா பூசை போட்டுருக்காங்கடா”
“நாட்டாமைக்காரர் கிட்ட சொல்லிட்டு கேட்கதவு சாவி வாங்க யாருமே வரலைடா. அப்பறம் எப்புடிடா உள்ள வரமுடியும்”
“இதபாருடா.. வேலி இங்க ஒடைஞ்சு கெடக்கு; இது வழியா ஆடு மாடு மனுசங்க எதுவேணாலும் வரலாம் “
“இதப் போயி நாட்டாமக்காரர்கிட்ட சொல்லி வேலியடைக்க சொல்லனும்.”
“சொல்லலாம். ஆனா இங்க என்னா நடந்திருக்கு” முருகன் கேட்டான்.
மீண்டும் அதையெல்லாம் நோட்டமிட்டார்கள். மருதையா சிலைக்கு பத்தடி முன்னால் ஒரு முழு வாழை இலை தரையில் இருந்தது. அதில் சின்னச்சின்ன தேங்காய் சில்லு சிதறிக் கிடந்தது. பொரி, பொட்டுக் கடலையும் கிடந்தது. வெல்லம் சிதறிக்கிடந்தது. இது என்ன புது வகை நைவேத்தியமா. அதென்ன சாமி சிலைக்கு பக்கத்தில் ஒரு செங்கல்லில் நிறைய ஊதுபத்தி புகைந்து கொண்டிருக்கிறது. ஊது பத்திகள் காற்றில் பறந்து போகாதிருக்க ஊதுபத்தி அடிப்பகுதி மேல இன்னொரு அரைக்கல் வைத்திருக்கிறது.
இன்னும் வேறென்னவெல்லாம் இருக்கிறது என அவர்கள் பார்க்கறபோதுதான் அது நடந்தது. திடீரென்று ஒரு பேய்ச்சிரிப்பு சத்தம் கேட்டது. பயந்து போன இருவரும் பார்த்துக் கொண்டார்கள். மீண்டும் அதே பேய்ச்சிரிப்பு. ஒருவர் மற்றவர் பற்றி கருதாமல் திரும்பி ஓடினார்கள். அவிழ்ந்த வேட்டியைக் கட்டக்கூட முடியாமல் அதைக் கையில் பிடித்தபடியே ஓடினார்கள்.
தொடரும்……
சுடு தேங்காய் பிரமாதம்
சிறு வயதில் மாமாவின் கிராமத்திற்கு விடுமுறையில் செல்லும் போது நடந்த நிகழ்வுகளை அப்படியே கண்முன் நிறுத்தியது.
கடைசியில் ஒரு திகிலுடன் நிற்கிறது. பார்ப்போம்……
LikeLiked by 1 person