(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
முந்தைய அத்யாயங்களின் இணைப்பு: அத்யாயம் 1, அத்யாயம் 2, அத்யாயம் 3
அவளுடைய தம்பி ஒரு வயது சிறியவன் நிலைமையை ஊகித்துவிட்டான். தன் அக்கா அருகில் வந்து,”ஒன்னுமில்லை. இது நம் குலதெய்வக் கோயில். இந்த எல்லையிலேயே துஷ்ட ஆவிகள் வரமுடியாது. ஐயனார் பொல்லாதவர்; அதனால் நீ தைரியமா இரு” என்றும் இன்னும் சில புத்திமதிகளையும் சொன்னான். அவள் மெல்ல மெல்ல அமைதியாகி அடங்கிப் போனாள். மனதை ஒருநிலைப் படுத்த வைத்தான். கோவிலில் அபிசேக ஆராதனை எல்லாம் நல்லபடியா முடித்து வந்தார்கள்.
அன்றிரவு நடு ஜாமத்தில் உடுக்கடி துவங்கிவிட்டது. வீட்டு வாசலில் காய்ந்த தென்னை ஓலைகள் வைத்தார்கள். வாணியை கிணற்றடியில் வைத்து தலைமேல் தண்ணீர் ஊற்றி அழைத்து வந்தார்கள். வாயிற்படி அருகில் வந்ததும் தென்னை ஓலையை கொளுத்திவிட்டு அதைத்தாண்டி உள்ளே வரும்படி அழைத்துப் போனார்கள். அப்போது ஒரு எலுமிச்சம்பழமும், ஒரு சேவல் கோழியையும் அறுத்து காவு கொடுத்தார்கள். இதனால் அந்த பேய் அதை ஏற்றுக்கொண்டு வாசலோடு நின்றுவிட்டதாம்.
அத்தோடு முக்கால் அடி நீளமுள்ள மெல்லிய வேப்பங் குச்சிகளை வீட்டு முன் வாசல், பின் வாசல் இரண்டு பக்கமும் குங்குமம் தடவி அடித்து வைத்தார்கள். பேயைக் கட்டுமானம் செய்தாகி விட்டது.
உள்ளே பேய்க்கு சாந்தி கழிக்க வைத்த பொருள்களை எடுத்துக்கொண்டு போய் ஊரின் கடைசியில் ஒரு முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி வந்து கை கால்ளை சுத்தம் செய்து கொண்டு உள்ளே வந்தார்கள். பேய்க்கு சாந்தி செய்து அனுப்பி விட்டார்கள்.
உள்ளே சென்ற வாணியை மீண்டும் வேறொரு பூசை செட்டப்பில் உட்காரவைத்து, இளையான் உடுக்கை அடித்து, குல தெய்வத்தை அழைத்து, அம்மன் சாமியை அவள்மேல் ஆவாகனம் செய்தார். அவ்ளவுதான் இனி எந்த பேயும் அவளை அண்டாது. அம்மன் அவள் மேல் குடி கொண்டுள்ளதால் சில ஆசார அனுஷ்டானங்களை கூறி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென்றார். தவறும் பட்சத்தில் அம்மனின் சீற்றத்துக்கு ஆளாக வேண்டும் என பயம் காட்டினார் இளையான்.
இதற்குப்பின் வேறு விஷயங்கள் அரங்கேறின. அக்கம்பக்க பெண்கள் வீட்டு விலக்கு நாட்களில் கொல்லைக் கதவு வழியே நுழைந்து புழக்கடை ரேழி வரை வந்தால் கூட வாணியின் ராவடி தாங்காது.
” ஏய்…ஏய்…” என்று அப்பெண்னை விரட்டி விட்டுதான் மறுகாரியம் பார்ப்பாள். வந்த பெண்னோ அலறி அடித்து ஓடிப் போவாள்.
கவலை விட்டது; இனி வாணிக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்; தேட ஆரம்பித்தார்கள். செய்தியறிந்த இளையான் வீட்டுக்கு வந்தார்.
இளையான் வந்து கூறியதைக் கேட்ட வாணியின் அப்பா தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். இளையான் கூறியது இதுதான்:
“பாப்பா மேல அம்மன் இருக்குது; இந்த நிலையில கல்யாணம் எப்படி செய்யறது?”
நாளை தொடரும்……..