(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
முந்தைய அத்யாயங்களின் இணைப்பு: அத்யாயம் 1, அத்யாயம் 2
“உங்களோட குல தெய்வத்த அழைக்கப் போறேன். அந்த ஐயனார் எம்மேல வந்து கேள்வி கேக்கறப்ப எந்த கொம்பனாலயும் தப்பிக்க முடியாது” என்று தன் திட்டத்தைக் கூறினார்.
எழுந்து வெற்றிலை சீவலை துப்பிவிட்டு வாய் கொப்பளித்து முகம் கை கால் கழுவி வந்து உட்கார்ந்தார்; எதிரே வாணி.
பூசையில் அவர் ஈஸ்வரன் ஈஸ்வரி அருகருகே அமர்ந்த வெங்கல சிலை, ஐந்தங்குல உயரம் கொண்டது வைத்திருந்தார். அதன் மீதிருந்த பூவை அகற்றி புதிதாக வேறு பூ சூட்டினார். புதிதாக கொஞ்சம் ஊதுபத்தி கொளுத்தி வைத்தார். இடக்கையால் மணியடித்தபடியே தூபக்காலில் நெருப்பு வாங்கி அதில் சாம்பிராணியைத் தூவி சாமிக்கு காட்டினார். கற்பூரமும் ஏற்றிக் காட்டி மணியை ஓரம் வைத்தார். வீடே ஒரே சாம்பிராணி புகை மண்டல மணமும், கற்பூர மணமுமாக இருந்தது. இப்போது உடுக்கை எடுத்து அடிக்க ஆரம்பித்தார். ஐயனார் உடுக்கடியில் அழைக்கப்பட்டார். அவர் சாமானியமாக வரமாட்டார். முதல் நாளில் உடுக்கையை கிழித்து விட்டார். அவர் ஐயனாரை தன் மீது ஆவாகனம் செய்யும்படியான பாடல்களைப் பாடி உடுக்கை அடித்தார். ஆனால் மறுநாளும் தொடர்ந்த முயற்சியில்தான் வந்தார். தன்னோட குடிகளுக்காக மனமிரங்கி இளையான் மீது வந்திறங்கினார். அதுமுதல் இளையானின் செயல்பாடு மாறியது; குரல் மாறியது; பார்வை மாறியது; வேற ஆளாகத் தெரிந்தார். இப்போது அவர் வாணியைப் பார்த்த பார்வை அவளை என்னவோ செய்திருக்க வேண்டும்.
“என்கிட்ட உண்மையச் சொன்னா நல்லது; இல்லாட்டி உனக்கு அதே வெனையாப் போயிடும்” மிரட்டல் விடுத்தார்.
வெலவெலத்துப் போன வாணி முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தாள். ‘உஸ் உஸ்’ என்ற ஓசை அவளிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அப்படியே பின் புறமாகச் சாய்ந்து விட்டாள். முகத்தில் நீர்தெளித்து எழுப்பி உட்கார வைத்தார்கள்.
இளையானில் இருந்த ஐயனார் தொடர்ந்தார்.
“நீ யாரு, ஆணா பொண்ணா’
“………………..”
கையில் விபூதியை எடுத்து வாணி மண்டையில் அடித்து, ஒரு உலுக்கு உலுக்கினார். வாணியிடம் ஆட்டம் தொடர்ந்தது.
வாணியை பிடித்துள்ள பேய் யாரென்று கேட்டார். அது எப்படி வாணியை பிடித்தது என்ற கதையெல்லாம் கேட்டார். அவர் கூப்பிட்டதில் வந்தது படு கொலை செய்யப்பட்டவன், பட்டகொலைகாரன். படு கொலை செய்யப் பட்டு செத்தவர்களை பட்டகொலைக்காரன் என்றே சொல்வார்கள்.
ஐப்பசி முதல்நாள் முதல் முழுக்கு, கடைசிநாள் கடைமுழுக்கு, கார்த்திகை முதல்நாள் முடவன் முழுக்கு. காவிரிக்கரையோரம் உள்ள ஊர் மக்கள் மாதமுழுதும் காவிரியில் காலைக் குளியலைக் கடைபிடிப்பார்கள். ஏனென்றால் எல்லா நதிகளும் ஐப்பசி மாதம் காவிரியில் வந்து கலக்குமாம்.
அப்படி ஒரு நாள் முழுகிவிட்டு வரும் போது இந்த பட்டகொலைக்காரன் ஒரு வைக்கோலாக வாணியின் காலில் சுற்றிய வண்ணம் அவளை பற்றிக் கொண்டானாம். இந்த அரிய உண்மையை இளையான் கண்டறிந்து வாணியிடம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்.
பின்னர் பேயுடன் சமாதானப் பேச்சு வார்த்தை. அது ரெண்டுநாள் வரை நீடித்தது. அதற்கு காவு கொடுத்து சாந்தி செய்தால் வாணியின் உடலை விட்டு வெளியேற உடன்பட்டது.
இந்நிலையில் மீண்டும் வாணி குடும்ப குலதெய்வத்தை அழைத்து அவரிடம் உன்னுடைய குஞ்சுகளை (குடிகளை) நீதான் காக்கவேணும் என்ற கோரிக்கை வைத்தார். பேயை விரட்டிய வுடன் ஐயனாருடைய பத்தினி பூர்ணாவை வாணியின் மீது இறங்கச் செய்ய உறுதி வாங்கினார். இதனால் எந்த கெட்ட ஆவியும் அவளை நெருங்க முடியாதாம்.
உமையாள்புத்தில் உள்ள குலதெய்வம் ஆபத்துக்காத்த ஐயனார் கோவிலுக்கு வாணியை கூட்டிப் போனார்கள். ஐயனார் அங்கே ஒருகாலை மடித்து ஒருகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். கையில் அரிவாளுக்கு பதில் சாட்டையை வைத்திருப்பார். சன்னதியின் முன்னே பெரிய யானையும் குதிரையும் நிற்க தலவிருட்சம் இரண்டு பிரிவாக தழைத்திருக்கும். அதில் பெரிய சங்கிலி, ஒவ்வொரு கரனையும் ஒரு கிலோ இருக்கும். இந்த கோவில் ராமானுஜபுரம் தாண்டியதும் பேருந்து செல்லும் சாலையிலேயே இடப்புறமாக உள்ளது. இந்த கோவில் உமையாள்புரம் எல்லையில் உள்ளதால் ஊரின் எல்லைக் காவல் தெய்வமும் இதுதான்.
ஐய்யனார் கோவிலில் நுழைந்ததும் வாணி உஸ்..உஸ்சென்று பெரிய பெரிய மூச்சாக விடத் தொடங்கினாள். துணுக்குற்ற அவள் தம்பி பயத்துடன் அவளைத் திரும்பிப் பார்த்தான்; “ஐயோ இதென்னடா சோதனை” என்று கலங்கினான்.
நாளை தொடரும்….
பேய் பிடித்தல் பூசாரி பேய் விரட்டுதல் கிராமத்து நிகழ்ச்சிகளை கண்முன்னே நிறுத்து கிறது. நல்ல விறுவிறுப்பு டன் போகிறது குறுந்தொடர் .
LikeLike
பேய் ஓட்டுவதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும். குறுந்தொடர் தப்பித்துக் கொண்டது அறிய மகிழ்ச்சி.
LikeLike
பேய்…. என்று ….. ஒன்று ….. உலகத்தில் உள்ளது என்று இக் கதை முடியுமா…. அல்லது ஹிஸ்ட்டீரியா வியாதி என்று முடிவு வருமா….. பார்ப்போம்…..
LikeLike
இரண்டுநாள் பொறுத்திருங்கள், தெரிந்து விடும்.
LikeLike