(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
55 ஆண்டுகளுக்குமுன் நான் சிறுவனாகக் கண்டவை:
எந்த கிராமத்திலும் பெண்களுக்கு மட்டும் சுதந்திரம் 1947 க்கு பிறகும் வழங்கப்பட வில்லை. பகல் நேரத்தில் அவர்கள் வீட்டினுள்ளேயும், கொல்லைப் புறத்திலுமே புழங்க வேண்டும். பக்கத்திலுள்ளது சித்தப்பா வீடென்றாலும் கொல்லைப் புறமாவே போகவேண்டும். இரவு ஆறு மணிக்கு மேல் நன்றாக இருட்டினப்புறமே தெரு வாசலை எட்டிப் பார்க்கலாம்.
சாயங்கலமானதும் ஹமாம் அல்லது ரெக்சோனா போட்டு (கழுத்தை ஒட்டி ரவிக்கை பகுதி நனைய நனைய) முகம் கழுவி, ரெமி (பூதர மாவு) பவுடர் பூசி, நெற்றியில் சாந்து பொட்டு வைத்து, கண்களுக்கு கரிசலாங்கண்ணி இலையில் சொந்தமாக செய்த கண்மை தீட்டி, தலையில் நேர் வகிடு எடுத்து இரண்டு பக்கமும் சைடுஊசி குத்தி ஜடை பின்னி முடிவில் கலர் ரிப்பன் பூ போட்டு வைத்த அலங்காரம், பூக்காரரிடம் பூ வாங்கி சூடியதும் முடிவடையும். அக்கம் பக்கத்து வீட்டு தேவதை களெல்லாம் ஒரு வீட்டில் கூடிடும்.
உள்ளூர் கோல்டன் டாக்கீஸில் செகண்ட் ஷோவில் பார்த்த சினிமாவின் கதை, பாட்டு, காமெடி, கிளைமேக்ஸ் எல்லாம் அந்த மகிளா சபா அலசும்.
அந்த வாரத்தின் குமுதம், ஆனந்த விகடன், கல்கி , ராணி வாராந்தரிகளின் கதைகள், ஜோக்குகள், துணுக்குகள் எல்லாமும் பகிரப்படும்.
ஒரே கூத்தும் கும்மாளமும் தான். அர்த்தமே இல்லாத கெக்கே பிக்கே சிரிப்புகள். இவையெல்லாம் அந்நேரம் யார் வீட்டில் ஆண்களில்லையோ அங்கே அரங்கேறும்.
அந்த நேரம்தான்,
” பாப்பா..பூவும்மா..பூவு ” என பூ விற்பவர்கள் கூவிக் கொண்டு வருவார்கள்.
நம்முடைய சிவன் கோவில் தெருவுக்கு வாடிக்கை பூ வியாபாரி 45 வயதுடைய ஆண். வழியில் விற்றது போக இரண்டு பந்து பூ வைத்திருப்பார். காந்திமதி, பானுமதி, வாணி, அலமேலு இன்னும் சிலர் அடங்கிய மகளிர் சபை ஒரு பந்து பூவை போணி பண்ணிவிடும். மீதி ஒரு பந்து பூவுக்கு வழியில் கிராக்கி ரெடி யென்பதால், கொஞ்சம் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு அவருடைய கதைகளில் ஒன்றை அன்றைய தினமும் அவிழ்த்து விட்டார்.
பூக்காரர் இதைப்போல பல கதைகளை அவிழ்த்து விடுவார். அவர் சொல்கிற பாணி கேட்பவர்களை அப்படியே கட்டிப் போட்டு விடும். கிராமங்களில் இவர் போன்ற கதை சொல்லிகள் பலர் உண்டு. ஆனால் ஒவ்வொருவரும் ஒரு கரு வைத்துக் கொள்வார்கள். இவர் கொலையை கருவாக வைத்திருந்தார்.
காவிரிக் கரையோரமாக உள்ள ஈச்சங்குடி எனும் குக்கிராமத்தில் ஒரு பெண் பித்தன் இருந்தான். அவனால் பல பெண்கள் அந்த ஊரிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் பாதிக்கப்பட்டார்கள். ஊர் பஞ்சாயத்துக் கெல்லாம் அவன் கட்டுப்படவேயில்லை. போலிஸ்காரர் களாலும் அவனைக் கைது செய்ய முடிய வில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேலாக தப்பித்து வந்த அவன் வகையாக ஒருநாள் மாட்டிக் கொண்டான். சுற்றி வளைத்த அவ்வூர் இளைஞர்கள் அவனை சரமாரியாக வெட்டித் தீர்த்தார்கள். அவன் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கையில்,” டேய் , ஒங்களால என்னை அழிக்க முடியாது; நான் ஆவியா வந்து இதவிட அதிகமா ஆடப்போறேன் பாருங்க”
என்று சபதம் செய்து விட்டு உயிர் விட்டான். இதைக் கேட்ட ஊர் மக்கள் திகைத்து நின்றார்கள்.
நாளை தொடரும்….