(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
படிக்கிற பருவத்தில்தான் கற்பனை வளம் அதிகமிருக்கிறது. நண்பர்கள் தோதாக கிடைத்து விட்டால் போதும் கதை, கட்டுரை, நாடகம், கவிதை என களைகட்டும்.
அப்படியொரு நண்பர் கூட்டம் அறுபதின் பின் பகுதியிலும் எழுபதுகளிலும் பாபநாசத்தில் ஜோராக இயங்கி வந்தது.
அரங்கண்ணல், நேப்பியர், சிவா இன்னும் சிலர் சேர்ந்து தமிழ்க்கோயில் என்ற கையெழுத்து பிரதி நடத்தி வந்தார்கள். ஓவியம் எல்லாம் நேப்பியர்தான். நாடகம் ஒன்று போட்டேயாகவேண்டும் என்று கிளம்பிவிட்டார்கள்.
அரங்கண்ணலின் பயோடேட்டா: அவர் வீட்டுக்குப்பின் நாட்டு செக்கு உள்ளது. கடைத் தெருவில் எண்ணெய்கடை உள்ளது.(நாடகத்தில் எஸ்டேட் கணக்கப் பிள்ளை.)
நேப்பியர்: தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியர். தேர்தல் நேரத்தில் சுவற்றில் கட்சி சின்னம் பாகுபாடு இல்லாமல் வரைவார்.(கதையில் நாயகன்)
வனராஜன்: பிசிஎஸ் என்ற கூட்டுறவு பண்டக சாலையில் பொட்டலம் மடிப்பவர்.(கதையில் வில்லன்)
சிவா: தனியார் வங்கியில் காசாளர். கவிகள் எழுதுவார்.(ப்ராம்ட்டர்)
பாபநாசத்தில் மேலவீதியும் வடக்குவீதியும் சந்திக்குமிடத்தில் உள்ளது இரட்டைபிள்ளையார் கோவில். அந்த முக்கு இன்று அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டுள்ளது. அங்கு ஒரு பெரிய மேடை அமைக்க ஏற்பாடு நடக்கிறது. இன்று இரவு அதில் நாடகம் நடக்கப் போகிறது. தமிழ்க்கோயில் நண்பர்கள் நடத்துகிறார்கள். அரங்கண்ணல் நாடகத்தை எழுதி இயக்கியுள்ளார்.
அந்த இடத்தை அவர்கள் தேர்வு செய்ததே மாலையில் கோவிலுக்கு வரும் கூட்டத்தை நம்பித்தான்.
நாடகத்துக்கு கதாநாயகி தஞ்சாவூரிலிருந்து லக்ஷ்மி என்ற தொழில் முறை நடிகையை ஒப்புகை செய்திருந்தார்கள். அந்த பெண் ஒத்திகைக்கெல்லாம் வரவேயில்லை. கேட்டதற்கு, “ஒத்திகையெல்லாம் உங்ளைப் போன்ற அப்ரண்டிஸ் (அப்ரசண்டி) களுக்குத்தான் வேண்டும். எனக்கெல்லாம் தேவையில்லை” என்று கூறிவிட்டாள். ஆனால் இன்று மதியமே வந்து ஸ்கிரிப்ட், வசனம் எல்லாம் வாங்கி தயார் படுத்திக் கொண்டிருந்தாள். மீதி பேர்களெல்லாம் அமெச்சூர், அதாவது அப்பரசண்டிகள்; அவர்களுக்குத்தான் ஒத்திகை எல்லாம் நடந்தது.
இரட்டை பிள்ளையார் கோவிலில் கும்பல் இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக நாடகம் ஏழு மணிக்கெல்லாம் ஆரம்பமாகிவிட்டது. அரங்கனிடம் ட்யூஷன் படிக்கும் பெரிய பசங்கள்தான் வாலண்டியர். ஊரிலிருக்கும் நண்டு சுண்டு எல்லாத்தையும் மேடைக்கு முன்னால் உட்கார வைக்க பெரும் பாடு பட்டுக்கொண்டிருந்தார்கள்.
திரை விலகியது. அரங்கண்ணல் – அவர்தான் எஸ்டேட் கணக்கப்பிள்ளை- முதலில் வந்தார். மேக்அப், காஸ்ட்யூம் எல்லாத்தையும் மீறி முன் வரிசை சிறுவர்கள் அவரை கண்டு பிடித்து விட்டார்கள்.
“டேய், நம்ப எண்ணெய்க்கட செட்டியார் டா” என ஒருத்தன்.
“ஆமான்டா.” மற்றவன்
“என்ன செட்டியாரே சவுக்கியமா ” என இன்னொருத்தன்.
“செட்டியாரே, கடலெண்ண என்னா வெலை” என நான்காமவன்.
“செட்டியாரண்ணே, கொஞ்சூண்டு தேங்காயெண்ண உள்ளங் கைல வுடேன், மண்டைக் காய்ஞ்சு கெடக்கு” என ஒரு ஓசி கிராக்கி.
அரங்கனின் வசனத்தை யாரும் கவனித்தபாடில்லை.
அரங்கன் மூக்குக் கண்ணாடியை துடைத்து மாட்டிக் கொண்டார். காமெடி பண்ணாமலே பெரிய ஒட்டு மீசை வேறு சிரிப்பை வரவழைத்தது. கோபத்தை கட்டுப் படுத்த, சம்மந்மே இல்லாத அளவில் போட்டுக் கொண்டிருந்த கோட் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு மேடையில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார். கவனிக்கப் படாமலேயே அந்த காட்சி முடிந்தது.
அடுத்த காட்சியில் ஒரு சிறுவனுக்கு கடம் கற்றுத்தரும் காட்சி.
சிறுவன்,
“தா..தின்னத்தா..தின்னத்தா”
வித்துவான், “சரி..மேலே..சொல்லு”
சிறுவன்,
“தா….தா….தின்னத்தா….தின்னத்தா…..தின்னத்தா..”
முன் வரிசை வாண்டுகள் எழுந்து விட்டன. கோரசாக,
“தா…தா..தின்னத்தா..தின்னத்தா.”
” தா..தா.. எனக்கும் தா”
என சுரம் பாட ஆரம்பித்துவிட்டன.
காட்சியில் வித்வான் செம்ம கடுப்பாகி,
“இந்தா ” என்று அவர் ஜிப்பா பாக்கெட்டில் இருந்து ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து சீடனிடம் கொடுக்கவே முன் வரிசை எழுந்து
“அப்ப எங்களுக்கு பிஸ்கோத்து “
என இரண்டு கைகளையும் நீட்டி குதிக்க ஆரம்பித்து விட்டன. திரை விழுந்தது.
அடுத்து அரங்கனும், வில்லன் வனராஜனும் இடம் பெறும் காட்சி. வனராஜன் பிசிஎஸ் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை செய்வதால் எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். கட்டுறவுக்கடையில் முதலில் பில் போட்டு பணம் கட்டியபின் உள்ளே பொட்டலம் கட்டுபவர்களிடம் கொடுத்தால் பொருட்களை கட்டித்தருவார்கள்.
வனராஜனைப் பார்த்த முன் வரிசை ரசிகர்கள் குதூகலமாகி விட்டார்கள். ஒவ்வெருவராக எழுந்து,
” வனராஜா, நான்தான் முதல் பில்” என்று ஏதோ ஒரு துண்டுக் காகிதத்தை நீட்டிட ஆரம்பித்தார்கள்.
” வனராஜா, எனக்கு ரெண்டே ரெண்டு சாமான்தான் குடு”
“வனராஜா, அவனுக்காவது ரெண்டு; எனக்கு ஒரே சாமான்தான், சீக்கிரம் குடு”
“எவ்ளோ நேரம் நிக்கறது, அம்மா திட்டும், சீக்கிரம் குடு”
“அம்மா அடுப்புல எண்ண சட்டி வச்சிடுச்சி, அப்பளம் மட்டும் தான கேக்குறேன் குடு சீக்கிரம்”
இப்படி ஆளாளுக்கு எழுந்து கேட்டபடி இருந்தார்கள். வனராஜனுக்கு நடிப்பு வரவில்லை; இறங்கிப்போய் அடிக்க வேண்டுமென்ற துடிப்புதான் வந்தது.
அரங்கனுக்கு கோபம் தலைக்கேறியது.
மேடையின் ஒளி வெள்ளதால் பார்வையாளர்களை சரியாகப் பார்க்க முடியாது. எனவே, அரங்கன் மேடை விளிம்புக்கு வந்து நின்று கொண்டு கண்களுக்கு மேல் நெற்றியில் கைகளை குவித்து வைத்து கூட்டத்தை குனிந்து பார்த்து,
” டேய் பசங்களா, சத்தம் போடாம இருங்கடா. இல்லாட்டி எறங்கி வந்தேன்னா எல்லாறையும் பிச்சுப்புடுவேன் பிச்சு”
“செட்டியார..கோவிச்சுக்காத”
” டேய் எவன்டா அது” என கீழிறங்கப் பார்தவரை பிடித்து உள்ளே அழைத்துப் போனார்கள். திரை விழுந்தது.
கொஞ்சம் அமைதி வந்தாற் போல் தெரிந்தது.
அடுத்து நாயகனும் நாயகியும் சந்தித்து பேசும் காட்சி.
நேப்பியரும் ஓவியராக எல்லாருக்கும் நன்றாக பரிச்சயமானவர்.
“ஓவியரே..எனக்கு உதயசூரியன் வரைஞ்சுதாங்க”
“எனக்கு ராட்டை சின்னம் வரைஞ்சு தா ஓவியரே”
நேப்பியரை தேர்தல் நேரத்தில் சுவற்றில் கட்சி சின்னங்கள் வரையும் போதெல்லாம் கூடவே நின்று பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் தானே இது.
தொழில் முறை நடிகை என்பதால் நாயகி அனாயாசமாக நடித்தார். நம்ப அப்பரசண்டி நாயகர் நேப்பியர்தான் பம்மிக்கொண்டு நடித்தார். நடிகை லக்ஷ்மி வசனம் மனப்பாடம் இல்லாததால் அவ்வப்போது மேடையில் வலது பக்கம் மறைவில் நின்று ப்ராம்டிங் செய்யும் சிவாவிடம் வசனத்தை நண்கு கேட்பதற்காக அந்த பக்கம் அடிக்கடி சாய்வாள். ஒருமுறை அதிகமாக சாய்ந்ததில் சிவாமேலேயே சரிந்துவிட்டாள். அவ்வளவுதான் விசயமறிந்ததும் இளைஞர்களின் விசில் பறந்தது.
“அண்ணே பத்திரம்”
“சிவா அண்ணன் கற்பைக் காப்பாத்த வாங்கடா” என்று சிலர் மேடை நோக்கி நகர்ந்தார்கள். நல்ல வேளையாக சிலர் தடுத்து விட்டார்கள்.
வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தமிழின் முதல் நாவலில் கதாநாயகன் சிலம்பம் பயிற்சி செய்து விட்டு நண்பர்களுடன் வரும் வழியில் ராமாயண கூத்து நடக்கும். ராமன் காட்டுக்குப் போகும் காட்சி; அதில் நுழைந்து ராமனை காட்டுக்குப் போகாமல் தடுத்துவிடுவார்கள்.
“பிதுர் ஆணையை நிறைவேற்ற நான் காட்டுக்குப் போகத்தான் வேண்டும் “என்று கூறும் ராமனிடம்,
” நீ காட்டுக்குப் போவேனென்று அடம் பிடித்தால் உன் காலை உடைத்து விடுவோம். ஒழுங்கா போய் பட்டாபிசேகம் செய்து கொள்கிறாயா காலை உடைக்கட்டுமா” என்று மிரட்டவே மரியாதையாக போய் பட்டாபிசேகம் செய்து கொள்வான்.
“தேவையில்லாமல் சிறுவனான பரதனை பெரும் ராஜ்ய பாரத்திலிருந்து காப்பாற்றி விட்டோம்; கைகேயியின் சூழ்ச்சியை முறியடித்து விட்டோம்” என்று பெருமையாகப் பேசிக் கொண்டே போவார்கள்.
ஏழு காண்டம் கொண்ட ராமாயணத்தை ஒன்றறைக் காண்டமாக ஆக்கியது போல இந்த நாடகமும் ஆகிவிடாமல் தப்பித்தது.
ஆமாம், நடந்தது இதுதான்.
நாடகத்தை பார்க்க வந்த கூட்டத்தில் நேப்பியர் அடுத்த மாதம் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் ரோசியும் அவள் குடும்பமும் வந்து உட்கார்ந்திருந்தது. நேப்பியர் கதாநாயகியுடன் காதல் ரசம் சொட்ட நடிக்கும் காட்சி; இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரோசியும் அவள் அம்மாவும் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்; சங்கடத்தால் நெளிந்தார்கள். இதை ரோசியின் அண்ணனும் அவன் நண்பர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“டேய் மாப்ள, என்னடா உன் தங்கச்சி வருங்கால புருசன் இன்னொரு பொன்ன கட்டிப் புடிச்சி காதல் பன்றான், இத சும்மா வுட முடியாது.”
” இது சும்மா நடிப்புதானடா”
“நடிப்புதான்னு உன்னோட தங்கச்சி இது மாதிரி நடிச்சா ஒத்துக்குவாங்களா”
“அப்போ வாங்கடா போய் என்னான்னு கேட்டுடுவோம்”
என்று கூறிக் கொண்டே மேடையில் ஏறினார்கள். நேப்பியார் திகைத்துப் போய் நிற்கையில்,
” டேய் நேப்பியர் மச்சான், கண்ட பொன்னுங்க கூட வேணாம், என் தங்கச்சிய கூப்புடுறேன், அதுகூட காதல் பன்னு” என்று தகறாறு பன்ன, ரோசியின் அப்பா மேடையிலேறி அவர்களை திட்டி அழைத்துக்கொண்டு கிழிறங்கினார். அவர் மட்டும் தாமதித்திருந்தால் பிரதாப முதலியார் சரித்திரம் கதையில் வந்த ராமாயணக் கூத்தில் நடந்தது போல நடந்திருக்கும்.
முழுக்க முழுக்க இது போன்ற நகைச்சுவைக் காட்சிகளுடன் நாடகம் நடந்து கொண்டிருந்தது.
யாருமே கதாபாத்திரமாக தெரியவில்லை. அவர்கள் எல்லாரும் உண்மையில் அவர்களாகவே தெரிந்தார்கள்.
இதனால்தான் புகழ் பெற்ற சினிமா நாயகர்களெல்லாம் மேக்கப் மூலம் அவர்களின் உண்மை சொரூபம் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் போலும்.
அரங்கண்ணலின் ட்யூசன் மாணவர் சிவமணி தலைமையில் காட்சி மாற்றத்தின்போது மற்ற மாணவர்கள் மேடையில் பொருட்களை வைப்பதும் எடுப்பதுவுமாக இருந்தார்கள். விளக்குகள் அணைந்ததும் இவர்கள் வந்து மேசை, நாற்காலிகளை மாற்றிக் கொண்டு இருந்தார்கள். அப்போது சிவமணியின் அப்பா மேடையில் ஏறி வந்தார். இதைப் பார்த்ததும் காட்சி ஆரம்பித்ததாக நினைத்து திரை விடுபவர் திரையைத் தூக்கி விட்டார்.
“டேய் சிவமணி, பொதுத் தேர்வுக்கு படிக்காம இங்க வந்து நாடகத்துல நடிக்கறீயா”
“அப்பா, நடிக்கல; ஒத்தாசைதான் செய்யறோம்”
“எங்கடா எண்ணெய் கட செட்டியார் மகன்? எல்லாரையும் கூட்டியாந்து கூத்தடிக்கறானா”
சிவமணியின் அப்பா தாவி அவனை சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போனார். இதுவும் ஒரு காட்சி என நினைத்து முன் வரிசை ரசிகர்கள் எழுந்து விசில் ஊதி கொண்டாடினார்கள்.
வில்லன், எஸ்டேட் முதலாளியை கொலை செய்து விடவே வழக்கு நடந்து தீர்ப்பு வாசிக்கும் காட்சி. பிள்ளைகள் பரிட்சை அன்று வயிற்றுவலி என்று லீவு போடுவது போல நீதிபதியாக நடிப்பவர்க்கு வயிற்றுப் போக்கு என்று கூறி வரவில்லை. எப்படியாவது சமாளிக்க வேண்டும். நாடகம் பார்க்க வந்த இளங்கோ என்பவரை நீதிபதியாக நடிக்க வைத்து விட்டார்கள்.
ஆஜானுபாகுவான அவர் நீதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். அவரிடம் பெரிய அளவு நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்ட தமிழ்க்கோவில் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து இருந்தார்கள். இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை பக்கத்தை புரட்டவேண்டும். பின்னனியில் சிவா வாதப் பிரதிவாதங்கள், சாட்சிகள் எல்லாம் குறிப்பிட்டு இந்திய தண்டனைச் சட்டப்படி நீதிபதி வழங்கும் தீர்ப்பை படிப்பார். அது அசரீரி மாதிரி பின்னனியில் ஒலிக்கும். இந்த ஏற்பாடு எல்லாம் சரிதான்.
இளங்கோ இடக்கையை கன்னத்தில் முட்டுக் கொடுத்த வண்ணம் , வலக்கையால் அவ்வப்போது பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தார். பள்ளியிலேயே பாடப்புத்தகத்தையோ, நோட்டுப்புத்தகத்தையோ பிரித்தாலே கொட்டாவி விடும் இளங்கோ படிக்கத் துவங்கினால் தூங்கி விடுவார். அப்படிப்பட்டவர் மூன்றாவது நிமிடத்திலேயே தூங்க ஆரம்பித்ததால் புத்தகத்தை புரட்டுவது நின்று விட்டது. ஒரு கட்டத்தில் கையிலிருந்து தலை கவிழ்ந்தது; நோட்டுப் புத்தகத்தில் வசதியாக தலையை வைத்து படுத்துக் கொண்டார்.
அரங்கன் ஓடி வந்து ,
“இந்த வழக்கின் தன்மை நீதிபதியையே மயக்கமடைய வைத்து விட்டது ”
என்று ஒரு வழியாக சமாளித்து முடித்தார்.
மக்களும் நகைச்சுவையா, சமூகமா, துப்பறிதலா, மர்மமா எனக் குழம்பிக் கொண்டே சென்றார்கள். நாடகத்தில் எழுதாமல் அரங்கேறிய நகைச்சுவைக் காட்சிகளே அதிகமாக ரசிக்கப்பட்டன.
முன் வரிசை ரசிகர்கள் மட்டும்
“நல்ல தமாஷ் நாடகம், ஒரே சிரிப்பா இருந்திச்சில்ல “
என்று பேசிக்கொண்டே சென்றார்கள்.
Podcast
உள்ளுர் சரக்கு விலை போகாது. என்ன தான் வேஷம் போட்டாலும் உள்ளுர் வாசிகள் கண்டுபிடித்து விட்டார்கள். நாடகத்தை விட சம்பவங்கள் நகைச்சுவையாகி விட்டன.
LikeLike
எல்லாம் நாமறிந்த உள்ளூர் சரக்குதான்.
LikeLike
வேம்பு, நானும் அதையேதான் குறிப்பிட்டேன்.
LikeLike
நகைச்சுவை கதை நெடுகிலும் இழையோடி இனிதே நிறைகிறது.
LikeLike
ஒரு மாற்றம் வேண்டுமென கேட்ட நண்பருக்காக எழுதியது.
LikeLike
எனக்கு சிவ என்பவரை நன்றாக தெரியும் .. கதை மிக அருமை
LikeLike
நீங்களெல்லாம் கதை படிப்பதும், படிக்க நேரமிருப்பதும் ஆச்சரியமே! நன்றி.
LikeLike
நீங்களெல்லாம் கதை படிப்பதும், படிக்க நேரமிருப்பதும் ஆச்சரியமே! நன்றி.
LikeLike
உள்ளுர் சரக்கு என்று குறிப்பிட்டது கதையில் நாடக கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் தெரிந்து கொண்டு கலாட்டா பண்ணியதை என்று எடுத்துக் கொள்ளவும்.
LikeLiked by 1 person