பிள்ளைச் சோறு

(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)

என் பெயர் லோகநாயகி. என் கணவர் பெயர் சபாபதி. அன்பு மகள் பெயர் சித்ரா.
அதிகாலை கிளம்பிப் போன கணவர் சபாபதியை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன். தூரத்தில் ஒரு பார வண்டி வருகிறது. வீட்டருகேவந்ததும் நன்றாகவே தெரிகிறது. பார வண்டி என்பது சுமைகளை ஏற்றிச் செல்லும் வண்டி.
ஈன்று ஒரு வாரமேயான கன்று பார வண்டியில் வருகிறது. நிறைய வைக்கோல் போட்டு மெத்துமெத்தென்று செய்து பசுங்கன்றை அதில் படுக்கவைத்து சபாபதியும் வேறொரு நபரும் பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.
தாய்ப் பசு வண்டி பின்னால் வருகிறது. தலையைத் தூக்கிக் கொண்டும், வாயிலிருந்து எச்சில் நூலாகத் தொங்கிக் கொண்டும் இருக்க ஓட்டமும் நடையுமாக வருகிறது. எங்கே தன்னைக் காணாமல் கன்று தேடுமோ என்று எண்ணியதாலோ என்னவோ, வாய்திறந்து “அம்மா” எனக் குரல் கொடுக்காமல் ‘ஹும்…ஹும்…’ என்று செருமிக் கொண்டே தொடர்கிறது.
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து விட்டார்கள். நான் தயாராக கரைத்து வைத்திருந்த ஆரத்தி தட்டை எடுத்து வந்து சூடம் கொளுத்திகாட்டி, பசுவுக்கும் கன்றுக்கும் பொட்டு வைத்து ஆரத்தியை தெருவில் கொட்டி வந்தேன்.

அதற்குள் என் மகள் சித்ரா வெளியில் வந்து விட்டாள், “அம்மா, இவங்க ரெண்டு பேருக்கும் பேர் செலக்ட் பண்ணிட்டியா”
“அதெல்லாம் ரெடியாயிருக்கு. அம்மா பேரு காமதேனு, கன்று பேரு நந்தி தேவ்”

சென்னையில் வேலையிலிருக்கும் எங்கள் மகள் சித்ரா வளைகாப்பு முடிந்து பிரசவத்துக்காக அழைத்து வந்திருக்கிறோம். நிறைமாதமாக இருக்கிறாள். மருத்துவர் சொல்லிய பிரசவ நாளுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

என் கணவர் சபாபதி வண்டிக்காரருக்கும், துணைக்கு வந்தவருக்கும் பணம் கொடுத்து அனுப்பினார். பசுவை தயாராக ஏற்பாடு செய்து வைத்திருந்த தொழுவத்தில் கட்டி கன்றை அதனிடம் விட்டேன். தாய் தன் கன்றை ஆசை தீர நக்கிய வண்ணம் இருந்தது. அரிசி களைந்த கழனித் தண்ணீரை வைத்தேன், பசு ரசித்து குடித்தது.

சித்ரா, “அம்மா உன்னால் இதை சரியா பராமரிக்க முடியுமா?” என்றாள்.
நான், “தாராளமா முடியும். நான்தான் அப்பாவிடம் கேட்டு வாங்கியிருக்கேன்”
“கஷ்டப்பட்டு வேலை செய்யறதுக்கு பாலை விலைக்கு வாங்கிடலாமே”
“சித்ரா, இந்த பசு வாங்கின நோக்கமே வேற. நம்ம பால் தேவைக்காக இல்லை. அக்கம் பக்கத்தில இருக்கிற, தாய்ப்பால் பத்தாத கைப்புள்ள காரங்களுக்காகத்தான். “
“ஓ…உங்களின் ஜீவகாருண்ய சேவையோட அடுத்த பரிணாமமா?”
“இந்த புண்ணியம் எங்களோட பேரப் புள்ளைங்கள காப்பாத்தும்; அதுக்குத்தான்”
உண்மைதான். இது எங்களின் ஜீவகாருண்ய சேவையின் அடுத்த வளர்ச்சிதான்.

“அம்மா, சும்மாவே காக்காவுக்கு சாப்பாடு வச்சப்புறம்தான் எங்களுக்கு சாப்பிடக் கொடுப்பே. இப்பத்தான் பசுவுக்கு தண்ணி வச்சிட்டியே, வந்து எனக்கு காபி கொடேன்.” என்று சொல்லி என் கழுத்தைக் கட்டியபடியே வீட்டுக்குள் அழைத்துப் போனாள். 

எங்கள் வீட்டில் உதவிக்கு என்று ஒரு பெண் வைத்திருக்கிறோம். அதிகாலை ஐந்தரை மணிக்கு வருவாள். தெருப் பெருக்குதல் தொடங்கி, பாத்திரம் தேய்த்தல், வீடு பெருக்குதல் எல்லாம் முடித்து ஏழு மணிக்கெல்லாம் தன் வீட்டுக்கு கிளம்பி விடுவாள். அவளுக்கு காஃபியும் பிஸ்கெட்டும் கொடுப்பதோடு ஒரு இட்லியும் கொடுப்பேன்.

ஒருநாள் கேட்டேன்,”டீ, கமலம் உன் வீட்டுப் பக்கத்தில வேற கைக் குழந்தைக்காரி யாராச்சும் இருக்காங்களா? “
” இருக்காங்கம்மா “
“அவங்களையும் தேவைப் படுறவங்களை இங்க வந்து இட்லி வாங்கிக்கச் சொல்லேன் “
“ஆகட்டும்மா “
நான் கொடுத்த அந்த இட்லி அவளின் கைக்குழந்தைக்கு ஊட்டுவதற்கு. அவள் முலமே இன்னும் சில கைக்குழந்தைக் காரர்களும் வந்து குழந்தைக்கு இட்லி வாங்கிப் போக ஆரம்பித்தார்கள். என் கணவர் கூட கேட்டார், 
“லோகா, இது எந்த வகை புண்ணியம்”
“கேட்டதில்லையா? ஊரார் பிள்ளைய ஊட்டி வளர்த்தா, நம் பிள்ளையை தெய்வம் வளர்க்கும்”
“……………….”
“எல்லாம் ஒரு மனத்திருப்திக்குதான்.”

கும்பகோணத்தில் ஸ்ரீநகர் காலனி அப்போதுதான் உருவாகி வளர்ந்து வந்துகொண்டிருந்தது. சுற்றிலும் கட்டட வேலை, கூலி வேலை செய்பவர்களே அதிகம். அவர்களில் உள்ள சிலர்தான் கைக்குழந்தைக்கு காலை இட்லி வாங்க வருவார்கள்.
என் வீட்டில் ஒத்தாசையா வேலை செய்யும் பெண் மீண்டும் பத்து மணிக்கு வருவாள். அவள் தன்வீட்டு வேலையை முடித்துக் கொண்டு, கைப்பிள்ளைக்கு வேண்டியதெல்லாம் செய்து அவள் அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு வருவாள். மிச்சமீதி பாத்திரங்களை தேய்த்துவிட்டு, துணி துவைத்து காயப்போடுவாள். வெள்ளி செவ்வாயில் வீடு மெழுகிடுவாள். காஃபி கொடுத்தால் சாப்பிடுவாள். எல்லாத்தையும் முடித்துக் கொண்டு பன்னிரண்டு மணிக்கு கிளம்புவாள். அப்போது குழந்தைக்கு கொஞ்சம் பிள்ளைச் சோறு கொடுத்தனுப்புவேன்.
“அடியே, கமலம் இந்தா உன் பிள்ளைக்கு சோறு. காலைல வர்ரப்ப பாத்திரத்தை நெனப்பா கொண்டாந்திடு”
“சரிங்கம்மா”
இந்த உரையாடல் எங்களுக்குள்ள தினமும் வாடிக்கை. இன்று முதல் அவளுக்கு கூடுதல் வேலை. ஊற வைத்த பருத்திக் கொட்டையை வந்து அரைத்துக் கொடுக்க வேண்டும். அதைக்கலந்து கொடுத்தால் பசு பால் அதிகம் கறக்கும்.
ஒருநாள் அவளிடம் கேட்டேன்,
“டீ.. கமலம், காலைல இட்லி வாங்கிப் போறாங்களே, மத்தியானம் சோறு ஊட்டுறதுக்கு என்ன பன்றாங்க “
” தெரியலம்மா கேட்டாத்தான் தெரியும் “
” கேளு. வேண்டியவங்கள பகல் பன்னெண்டு மணிக்கெல்லாம் வந்து சோறு வாங்கிக்கச் சொல்லு .”
” சரிம்மா சொல்றேன் “
அடுத்தநாள் முதல் நாண்கைந்து பேர் பிள்ளைச்சோறு வாங்க வந்தார்கள். அவர்களுக்காகவே நல்லா குழைய சாதம் வைக்கத்தொடங்கினேன்.
இதையெல்லாம் கவனித்த என் கணவர் என்னிடம் கேட்டார்,
“காலைல காக்காய்க்கு வைப்பது போல கைக்குழந்தை களுக்கு இட்லி. இப்போது மதியம் காக்காய்க்கு சாதம் வைப்பது மாதிரி பகலில் பிள்ளைச் சோறு. நல்ல காரியம்தான்”
நான் அவரைப் பார்த்து சிரித்து விட்டுப் போய்விட்டேன்.

குளிப்பற்காக பாத்ரூமில் நுழைந்து தாழிட்டவள், தேம்ப ஆரம்பித்து விட்டேன். சமீபகாலமாகத்தான் நான் பாத்ரூமில் அழாமலிருந்தேன். இன்றென்னவோ கட்டுப்பாட்டை மீறிவிட்டேன்.

ஒருவருடம் ஓடிவிட்டது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த எங்கள் மகன் பேருந்து விபத்தில் சிக்கிவிட்டான். படியில் பயணம் செய்கையில் ஒரு திருப்பத்தில் முன்னால் இருந்த எல்லாரும் இவன் மேல் சாய எடை தாங்க முடியாமல் கீழே விழுந்ததில் தலையில் காயம். உடனே ஆஸ்பத்ரியில் காட்டி எக்ஸ்ரே எல்லாம் எடுத்தோம். ஒன்றுமில்லை என்று கூறி வலிக்கு ஊசி போட்டு, மருந்து தந்தார்கள் வாங்கி வந்தோம். அப்போது,
“ஒரு வாரத்தில் வாந்தி எடுத்தாலோ மயங்கினாலோ உடனடியாக  அழைத்து வாருங்கள்”
என்று சொல்லி அனுப்பினார்கள்.
ஒரு வாரத்தில் அவன் வாந்தி எடுக்கவே ஆஸ்பத்ரியில் சேர்த்தோம். சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, இஇஜி என்று என்னென்னவோ எடுத்தார்கள். ஐசியூ வில் வைத்திருந்தார்கள். இரண்டு வாரத்தில் எதற்கும் குணமாகாமல் எங்கள் செல்லம் எங்களை விட்டுப் போய் விட்டான்.

அதிலிருந்துதான் இரண்டு வேளையும் காக்காவுக்கு முதலில் சாப்பாடு வைத்த பின்தான் நாங்கள் சாப்பிடுவோம். அதன் தொடர்ச்சியே பிள்ளைகளுக்கு காலை இட்லி வினியோகம். இப்போது மதியமும் சாதம்.
இதெல்லாம் என் மகன் எங்கே என்ன பிறவி எடுத்திருந்தாலும், அவனுக்குப் போய்ச்சேரும் என்ற நம்பிக்கை. என் கணவர் மேலும் ஒரு யோசனை சொன்னார்,
“லோகா, இவங்களையெல்லாம் ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் வரச் சொல்லி ஏதாவது தோசை, இடியாப்பம் மாதிரி ஒன்னு செஞ்சு கொடுத்தாலென்ன”
“அடடா, எனக்கிது தோனவேயில்லியே. நாளைக்கே அதையும் ஆரம்பிச்சிடலாம்”
எனக்கு இப்போ மனசு இன்னும் ரொம்ப லேசான மாதிரி இருந்தது. இந்த புண்ணிய மெல்லாம் என் மகனை எந்த பிறவியிலிருந்தாலும் தேடிப்போய்க் காப்பாத்தும்.

அமாவாசை தினத்தில் மதியம் படையல் போட்டு என் கணவர்தான் காக்காவுக்கு சோறு வைப்பார். 
அப்போதெல்லாம்,
“எனக்காக படையல் போட்டு என் மகன் காக்காவுக்கு சோறு வைக்க வேண்டியது போக இப்போது நான் வைக்கிறேனே”
என்று வேதனையோடு கண் கலங்கியபடிதான்
“காகா…காகா”
என்று காக்காவை கூப்பிடுவார்.

என் மகனின் படம் ஒன்று பெரிதாக ஃப்ரேம் போட்டு வைத்திருக்கிறோம். எல்லாரும் அதில் நெற்றியில் பொட்டு வைக்கச் சொல்லியும் நாங்கள் செய்யவில்லை. பொட்டு வைத்தால் பார்க்கும் போதெல்லாம் அவன் உயிரோடில்லை என்ற எண்ணம் வந்து வாட்டும். அதோடு படத்துக்கு பூவும் சூட்ட மாட்டோம். அவன் எங்களோடே இருப்பதாக எண்ணிக்கொண்டே வாழ்கிறோம். அவ்வப்போது மகன் படத்துக்கு முன் நின்று அவனிடம் ஏதாவது பேசுவேன், சண்டை போடுவேன், கொஞ்சுவேன். அவனைப் பொறுத்தவரை நான் லாஜிக் இல்லாமல் பைத்தியம் போல் செய்கிறேன்; இது எனக்கு நல்லாவே தெரியும், அதில்தான் என் ஆன்மாவே அடங்கியிருக்கிறது.

மாலை நேரத்தில் கொஞ்சம் சீக்கிரமாவே இந்த பெண்கள் வந்து விடுவார்கள். வந்தால் சும்மா இருக்காமல் தண்ணியை திறந்துவிட்டு ஹோஸ் பைப் மூலம் செடிகளுக் கெல்லாம் தண்ணீர் பிடிப்பார்கள். வேண்டாமென்றாலும் கேட்க மாட்டார்கள். இந்த கிராமத்து ஜனங்களே இப்படித்தான், பாசத்தை கொட்டிடுவாங்க.
தோட்டத்துல வெளைஞ்ச சுண்டக்காய், முருங்கை, கொய்யாக்காய் முதலான தெல்லாத்தையும் அவங்களுக்கே கொடுத்தனுப்புவேன். ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு பலகாரம் செய்து கொடுப்பேன்; தோசை, இடியாப்பம், இட்லி என ஏதாவது ஒன்று கொடுப்பேன். ஒரு சிலர் என் வீட்டிலேயே ஊட்டிவிடுவார்கள். மாலை நேரம் பெரும்பாலும் என் வீடு குழந்தைகளின் சங்கமமாகவே இருக்கும். பலவித சிட்டுக்களின் “கிரீச்..கிரீச்” குரலாகவே ஒலிக்கும்.

சில நேரங்களில் எனக்கு மகன் பிரிவு தாங்க முடியாத வேதனையைத் தரும். அப்போதெல்லாம் என் கணவரிடம்,
“முன் ஜென்மத்தில் ஏதோ பாவம் பண்ணியிருக்கிறேன்; அதான் என் மகனைக் கொண்டு போய் விட்டது” என்று புலம்புவேன்.
“அப்படிச் சொல்லாதே லோகா. இருபது வருஷம் நம்பகூட இருந்து சந்தோஷத்த குடுத்தவன்தானே நம் பிள்ளை “
” …………………..”
“இப்போ வேற யாரையோ சந்தோஷப் படுத்த போயிட்டான்னு நாம நினைச்சுக்க வேண்டியதுதான். இதோ காமதேனு வந்திருக்கு. பாலைக் கறந்து கைக்குழந்தைகளுக்கு கொடுக்கற புண்ணியம் நம்ப மகனுக்குதான் சேரும், நீ கவலைப் படாதே”
ஏதோ அவர் சொல்றதுக்காக நான் அமைதியடைந்தது போல போய் விட்டேன்.

என் கணவர் சபாபதி பசு கட்டியிருக்கும் கொட்டடியிலேயே நின்று கொண்டிருக்கிறார். பிறந்த குழந்தையை பக்கத்தில் நின்று பார்த்து பரவசமடைவதைப் போல கன்றை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னுடைய நாத்தனார் சித்ராவைப் பார்ப்பதற்காக வந்தார்.
“என்ன அண்ணா, கன்னுக்குட்டியை அப்படியே பார்த்துக்கிட்டு நிற்கறே “
“வாம்மா, சௌக்கியமா “
“என்ன கன்னு” 
“காளைக் கன்னு”
“அப்படிப் போடு. அப்போ சித்ராவுக்கு ஆம்பளைப் பிள்ளைதான் பிறக்கும்”
என் நாத்தனார் சித்ராவைப் பார்த்து பேசப் போய்விட்டார்.

சரியாக மூன்றாவது நாள் சித்ராவுக்கு இடுப்பு வலி வந்து ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அட்மிட் செய்தோம். பதினாறு மணிநேரப் போராட்டத்துக்குப் பின் சித்ரா அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

என் கணவர் வாயெல்லாம் பல்லாக, முகமெல்லாம் சந்தோஷமாக காட்சியளித்தார்.
ஆமாம், அவருக்கு மகன் வந்து மீண்டும் பிறந்து விட்டதாகவே நம்பிக்கை. பால் கறக்க வரும் கோணாரிடம் பக்கத்திலேயே நின்று பால் கறப்பதை கற்றுக் கொடுக்க வேண்டினார்.

இனி எங்கள் வாழ்வு பசுங்கன்று, எங்கள் பேரன் என்ற இந்த இரண்டு பேரோடுதான்.

Advertisement

4 thoughts on “பிள்ளைச் சோறு

Add yours

  1. கதை உணர்ச்சிப் பொங்க இருக்கிறது. ஊரார் பிள்ளைக்கு உணவளிக்கும் தாய்மார்களை வியக்கும் இவ்வுலகம். சோகத்தை மடை மாற்றும் அன்னை. நிஜமும் கற்பனையும்( ஊரும் பெயரும்) கலந்த நல்ல கதை.

    Like

  2. லோகநாயகியின் இதயப் புலம்பலை உணர்வுபூர்வமான எழுத்தாக வடித்தீர்கள். அவளின் சிந்தனை அலைகளில் கதையை நகர்த்தியது அழகு. புள்ளிகளாய் நிற்கும் சம்பவங்கள் – அவற்றை வேதனைக்கோடுகளால் இணைத்து வரைந்த நினைவுக் கோலம் இது.

    சபாஷ்!

    இன்னும் எழுதுங்கள்!

    Liked by 1 person

  3. கதை மெல்ல மெல்ல நகர்ந்து வாசகரின் மனத்தைக் கனக்கச் செய்து , பின் அதன் போக்கில் அதுவே வாசகனைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து நிறைகிறது . அருமையான படைப்பு .

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: