தமிழகக் கோவில்களில் அதிகம் கவனிக்கத் தவறியவற்றை மீண்டும் பார்ப்போம்.
பல கோவில்களில் இசைத்தூண்கள் அமைத்திருக்கிறார்கள்.
முற்காலத்தில் பூசை நேரத்தில் இசையெழுப்ப பயன்பட்டன. நிகழ்ச்சிகள் இதன் மூலம் இசையெழுப்பி நடத்தப்பட்டன.
சில தட்டும்போது இசையெழுப்பும்; சில ஊதினால் இசை யெழுப்பும். சுருதித்தம்பம், கானத்தம்பம், லயத்தம்பம், பிரதார்ச்சணதம்பம் என நாண்கு வகைத்தூண்கள் உண்டு.
இத்தூண்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் பல வகையானது. வட்டம், நெல்லிக்கனி, சதுரம், செவ்வகம், பூரி, பல்கோணம் ஆகியவை சில.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

இக்கோவிலில் மணிமண்டபம் ஒன்றுள்ளது. மண்டப நடுவில் மணி ஒன்று தொங்குவதால் இப்பெயர் வந்தது. நின்றசீர் நெடுமாறனால் கட்டப்பட்டது. ஒற்றைத் தூணை சுற்றி இசைத்தூண்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு 48 தூண்கள் உள்ளன. அவற்றை தட்டும் போது வெவ்வேறு சுருதியில் இசை வருகிறது. இதுவே முதலில் கட்டப்பட்ட இசைத்தூண் என்று கூறுகிறார்கள்.
சுசீந்திரம் தானுமாலயன் கோவில்

கன்யாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகில் உள்ளது சுசீந்திரம். இங்குள்ள தானுமாலயன் கோவிலில் உள்ள குலசேகரமண்டபத்தில் நாண்கு தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சிறுசிறு தூண்களை இணைத்து உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றில் இரண்டு பெரிய தூண்கள் 33 சிறு தூண்களையும், மற்ற இரண்டு தூண்கள் 25 சிறு தூண்களைக் கொண்டது. ஒவ்வொரு சிறிய தூணும் தட்டும் போது விதவிதமான இசையை எழுப்புகின்றன.
மதுரை மீனாட்சியம்மன் கோவில்

வடக்கு ஆடி வீதியில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. ஆயிரம்கால் மண்டபத்தில் இரண்டு இசைத்தூண்கள் உள்ளன. நடுவில் ஒரு தூணைச் சுற்றி பல வடிவங்களில் 22 தூண்களோடு அமைந்த அமைப்பு. வேறுவேறு சுரங்களை உபயோகப்படுத்தி நவரோஸ், குறிஞ்சி ராகங்களை இசைக்கலாம்.
ஆழ்வார் திருநகரி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது நம்மாழ்வார் தோன்றிய குருகூர். இந்த ஆலயத்தில் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. அதில் ஒன்றை தட்டினால் மூன்று சுரங்களை எழுப்புகிறது . மற்றதில் ஊதி இசை எழுப்புவது. இரு துளைகள் உள்ளன. ஒன்றில் ஊதினால் சங்கின் ஒலியும், மற்றதில் ஊதினால் எக்காளம் ஒலியும் கேட்கிறது.
தேனி தாடிக் கொம்பு

சுந்தர ராசப் பெருமாள் ஆலயத்தில் உள்ள விழாக்கால வசந்த மண்டபத்தில் உள்ள இசைத்தூண்கள் வேதம் ஓதுவது போன்ற ஒலியைத் தரும்.
Leave a Reply