காவிரி பாசனப்பகுதியில் விவசாயம் தொடர்பான மாட்டுக்கிடை போடுதல், நல்லேர் (பொன்னேர்) கட்டுதல், நாற்று நடவு பற்றி நாம் பார்த்திருக்கிறோம். இனி அடுத்து களைபறித்தல், அறுவடை பற்றி பார்ப்போம்.
களைபறித்தல்
நடவு முடிந்து இருபது , நாற்பத்தைந்து நாட்களுக்குப் பின் முதல் களையும், இரண்டாவது களையும் எடுப்பார்கள். நெற் பயிரைத் தவிர முளைத்துள்ள எல்லாவற்றையும் களை என பறித்துப் போடுவார்கள். அதில் அரிய மூலிகைகள் நிறைந்திருக்கும். எண்ணெயில் இட்டு காய்ச்சி தலையில் தேய்க்கும் கரிசாலை (கரிசலாங்கன்னி, கையாந்துரை ) மூலிகை அதில் இருக்கும். குளிர்ச்சி தந்து மூளைக்கும் நரம்பு மண்டலத்துக்கும் பலம் தரும் நீர்பிரம்மி என்ற மூலிகையும் இருக்கும். களை பறிக்கும் போதே நெற்பயிரை ஒட்டி கால்களால் மிதித்து விடுவார்கள். இது தூர் இறுகவும் காற்றோட்டம் கிடைக்கவும் வழி செய்யும். களை பறிப்பவர்களில் சிலர் அப்படியே களையை காலால் மிதித்து உள்ளே மூழ்கடித்து விட்டு போங்கு அடிப்பார்கள்.
முகூர்த்தம்
குருவை சாகுபடிக்கான அறுவடை புரட்டாசி மாதம் நடந்தேறும். ஒரு நல்ல நாளில் ஒரு மூலையில் அறுவடைக்கு முகூர்த்தம் செய்து கொஞ்சம் அறுத்து வீட்டுக்கு கொண்டு வருவார்கள். அதைக் கையாலேயே நெறித்து உதிர்த்து உமி நீக்கி அரிசி யெடுப்பார்கள். அதைக் கொண்டு பொங்கல் செய்து சாமிக்கு படைப்பார்கள்.
ஒரு கொத்து நெற்கதிரை வீட்டின் நிலைக்கு கொஞ்சம் மேலே இருக்கும்படி சாணத்தை வைத்து சுவற்றில் ஒட்டி வைப்பார்கள். இதை குருவிகள் வந்து கொத்தித் திண்ணும்.
பெரும்பாலும் புரட்டாசி சனிக்கிழமை தளிகை போடுபவர்கள் இந்த புத்தரிசியில்தான் சமைப்பார்கள்.
அறுப்பு

அறுவடை நாளன்று அதிகாலை சென்று நெற்கதிர்களை அறுத்து வைத்து விட்டு காலை ஏழு மணிக் கெல்லாம் வீடு வந்திடுவார்கள். காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு ஒன்பது மணிக்கெல்லாம் வயலுக்குத் திரும்பி கட்டுகட்டும் வேலையில் இறங்குவார்கள்.
கதிர் நீக்கி பசும் தாளை வைத்து கயிறு திரித்துக் கொள்வார்கள். இதுவே கட்டுகட்டவும், கதிர் அடிக்கவும் ஆகும்.
கட்டு தூக்கல்

ஒவ்வொரு அரியாக எடுத்து, கையால் பிடித்து கட்டடிக்கும் அளவு சேர்ப்பது ஒரு கோட்டு எனப்படும். இப்படி சேர்த்த கோட்டுகளை தலைப்பு மாற்றி அடுக்கி கட்டு கட்டுவார்கள். கட்டு பெரும்பாலும் இடுப்பு உயரமே இருக்கும்.
இந்த கட்டை தூக்கிக் கொண்டு ஈரமான வழுக்கும் சேறு நிறைந்த வரப்புகளில் விரல்களை நன்கு ஊன்றி ஓட்டமும் நடையுமாக செல்வார்கள். வலது இடது என கால்களில் பளு மாறிமாறி வரும்படி லாவகமாக அடியெடுத்து ஓடுவார்கள். பின்புறமாக அவர்களைப் பார்த்தால் அது ஒரு வகை நாட்டியமாக யிருக்கும்.
கட்டடித்தல்
கட்டுகள் களம் வந்து சேர்ந்ததும் அடிக்க ஆரம்பிப்பார்கள். விதை நெல் தேவையென்றால் இரண்டு அடி தனியே அடிப்பார்கள். சாதாரணமாக ஐந்து முறை அடிப்பார்கள். ஐ ஆர் 8 நெல் ரகம் நன்றாக பிடித்துக் கொண்டிருக்கும் என்பதால் பலகை, பாறைகளைப் போட்டு அதில் அடிப்பார்கள். அடித்த கோட்டுகளை அருகிலேயே போராகப் போடும் வேலையும் நடக்கும். அடுத்த நாண்கு நாளில் அவற்றை உதறி மாடுகளை வைத்து போர் அடிக்கும் போது எஞ்சியுள்ள நெல்மணிகளும் உதிர்ந்து விடும்.
கூலி
அடுத்து மூட்டை பிடிப்பார்கள். ஆட்களுக்கு ஒரு மூட்டை கண்டு முதலுக்கு ஆறு படி நெல் என கணக்கிட்டு மொத்தமாக தருவதை தலைக்கு எவ்வளவு எனக் கணக்கிட்டு பிரித்துக் கொள்வார்கள்.
ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழத்தஞ்சையில் நாண்கு படி கூலியை உயர்த்தி ஆறு படியாகக் கேட்டு போராட்டங்களும் சோகங்களும் அரங்கேறின.
ஊர்த்தொழிலாளிகள்
ஊர் தொழிலாளி என்றழைக்கப் பட்ட சலவை, சவரத் தொழிலாளிகள் தலையாறி வெட்டியான் என்ற ஊர்க் காவலாளிகள் வந்து அவர்கள் பங்கினை வாங்கிச் செல்வார்கள்.
களம் கூட்டல்
பண்ணையாளின் மனைவியும் வெட்டியானின் மனைவியும் களத்தை கூட்டி சிதறிய நெல்லை எடுத்துச் செல்வார்கள்.
இந்த நடைமுறைகள் இப்போது பெரும்பாலும் இல்லை யென்றே சொல்லலாம். சமூக நீதி விழிப்புணர்வால் பண்ணையாள், ஊர்த் தொழிலாளர், காவல் தொழிலாளர் எல்லாம் விடை பெற்றுக் கொண்டன.
அடிமைக் கொள்கைகள் மறைந்து வேலை செய்தால் கூலி என்ற ஆரோக்கிய நிலையே நிலவுகிறது.
அறுவடை இயந்திரம்

அறுவடை இயந்திரம் நெல் தனியே, வைக்கோல் தனியே என வயலிலேயே பிரித்துக் கொடுத்து விடுகிறது; மூட்டையாக தூக்கிக் கொண்டு வந்திடலாம். வரப்பு ஓரங்களில் இயந்திரம் நெருங்காது என்பதால் மூன்றடி அளவுக்கு மட்டும் கைகளால் அறுத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாமே இயந்திர மயமாகி விட்டதால் சில சுவாரசியங்களை இழந்து விட்டதென்னவோ உண்மை. பழசை அசை போடுவதும் ஒரு சுகமான அனுபவமே.
Leave a Reply