(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
கடற்கரையில் வலுவாக கால்களை ஊன்றி நின்று கொண்டிருக்கையில், நீரலைகள் கால் மீது வந்து வந்து மோதிச் செல்வது போல வாழ்க்கையில் சில மனிதர்கள் வந்து வந்து போகிறார்கள். இனி பார்க்கவே போவதில்லை என்று முடிவானவர்கள் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் பார்த்துக் கொள்வதென்பது எத்தகைய உணர்வுகளைத் தரும், உணர்ச்சிகளைத் தூண்டும்.
செல்வகுமரன் திருச்செந்தூர் அருகில் உள்ள பரமன் குறிச்சி என்ற தன் சொந்த ஊரில் உள்ள குலதெய்வக் கோவிலில் ஒரு வேண்டுதல் பூசைக்காக குடும்பத்துடன் வந்திருக்கிறான். அவன் மகனுக்கு முப்பது வயது ஆகிறது; மணப்பெண் இன்னமும் அமையவில்லை. குலதெய்வக் கோயிலில் பூசை நடத்தி வேண்டுதல் வைத்தால் விரைவில் கல்யாணம் நடந்தேறும் என்பதால் வந்திருக்கிறார்கள்.
முதலில் இந்த ஊருக்கு தான் வராமலேயே பூசை நடத்த முடியுமா என முயன்றான்; முடியவில்லை. அந்த ஊருக்கு வருவதற்கு தயங்கினான். ஊரின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவன் இரத்த அழுத்தம் எகிறியது. அதற்கு காரணம் உண்டு. அவன் இதயத்தை ஆட்கொண்ட ஒருத்தி அங்குதான் இருக்கிறாள். அவளை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வது, என்ன பேசுவது. அவன் ஒருவித குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டு தவித்துக் கொண்டிருந்தான்.
அடுத்தநாள் பூசை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கோயில் நிர்வாகத்திடம் பணம் கட்டி ரசீது வாங்க செல்வக்குமரனும் அவன் மனைவியும் கோயிலுக்கு வந்திருந்தார்கள். அவன் மனைவி தல விருட்சத்தை சுற்றிவர விரும்பியதால் செல்வக்குமரன் கோயில் மண்டபப்படிகளில் உட்கார்ந்திருந்தான். சுற்றுமுற்றும் அவன் யாரையோ தேடினான். அவன் கண்களில் திடீரென ஒரு மின்னல் பாய்ந்தது. அந்த மின்னலை மீண்டும் பார்க்க விரும்பி கண்களால் துழாவினான். அந்த மின்னல் அம்மனுக்கு எலுமிச்சை தோலில் நெய் விளக்கேற்றிக் கொண்டிருந்தது.
அச்சு அசலாக முப்பத்தைந்து ஆண்டுகள் முன் அவன் பார்த்து ரசித்த சுபத்ரா. எப்படி இது சாத்தியம். இத்தனை ஆண்டுகளாக கொஞ்சம் கூட இளமை மாறாமல் அப்படியே இருக்கிறாள், விந்தையிலும் விந்தை. அவனுடைய எண்ணங்கள் வேறுமாதிரி மாறுவதற்குள் அடுத்ததும் நடந்தது. ஆம், அந்த இடம் நோக்கி சுபத்ரா வந்து கொண்டிருந்தாள். அறுபது வயது தோற்றம் நன்றாகத் தெரிந்தது. அப்போ அந்த இளம் பெண்? …தேடினான்…
சுபத்ராவும் அந்த இளம் பெண்ணும் ஒன்றாக விளக்கேற்றிக் கொண்டிருந்தார்கள். இவள் சுபத்ராவின் மகளா, செல்வக்குமரன் வியந்தான். பரபரப்பானவன், அவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்க நினைத்தான். எங்கே மனைவி எனத் தேடினான். அவள் தல விருட்சத்தை அடிமேலடி வைத்து சுற்றி வந்து கொண்டிருந்தாள்; எப்போது முடிப்பாளோ தெரிய வில்லை. செல்வக்குமரன் இருப்புக் கொள்ளாமல் நெளிந்து கொண்டிருந்தான்.
அப்பாடி, ஒருவழியாக முடித்து இவனை நோக்கி வந்தாள். வந்தவள் வேறு ஏதாவது பாக்கி இருக்கிறது என்று சொல்லி அவனை உட்காரச் சொல்லி விட்டால் என்ன செய்வது. அவன் இப்போதுதான் சாமியை வேண்டினான், ” அம்மா தாயே உடனே கிளம்ப வேண்டும் கருணை காட்டு”
நேரே வந்த அவன் மனைவி அவனை அவசரப் படுத்தினாள்,
“உடனே வீட்டுக்குப் போகனும், கிளம்புங்க”
அம்மனுக்கு ஆயிரம் நன்றியை சொல்லி விட்டு கிளம்பினான்.
செல்வகுமரனின் அப்பா பூர்வீக வீடு எல்லாம் தன்னுடைய சகோதரிக்கு எப்போதோ எழுதிக் கொடுத்துவிட்டார். அந்த வீட்டில்தான் இப்போது வந்து தங்கியிருக்கிறார்கள்.
வீட்டுக்கு வந்ததும் அவன் மனைவி அவசரமாக ஒருவரைப் பார்க்கக் கிளம்பிப்போனாள்.
சுபத்ராவைப் பார்த்ததிலிருந்து செல்வக்குமரனின் நினைவுகள் முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி சென்றது.

செங்கல்பட்டு தாண்டி திண்டிவனம் செல்லும் வழியில் கருங்குழி எனும் ஊர் உள்ளது. அரிசி ஆலைகள் அங்கே அதிகம். செல்வகுமரனின் அப்பா கருங்குழியில் பெரிய அரிசி ஆலை நடத்தி வந்தார். செல்வகுமரன் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு முதுகலை படிக்க ஆசை. ” பிஏ வரைக்கும் படிச்சது போதும், மில்லுக்கு வந்து தொழிலைக் கத்துக்கோ”” அப்பா நான் எம் ஏ ஆங்கில இலக்கியம் படிக்கனும்” ” அதெல்லாம் கரஸ்ல படிச்சுக்கோ” கண்டிப்புடன் சொல்லி விட்டார்.ஐந்து ஆண்டுகள் மில்லிலேயே கிடந்தான். எல்லாவற்றையும் கேட்டுக் கேட்டு கற்றுக் கொண்டான்.ஒருநாள் சிறு தவறுக்காக எல்லார் முன்னிலையிலும் வைத்து திட்டிவிட்டார்.செல்வகுமரன் கோபித்துக் கொண்டு குரோம் பேட்டையில் இருக்கும் அக்கா வீட்டிற்கு வந்துவிட்டான்.
எல் ஐ சியில் கேரீர் ஏஜென்ட் எனும் திட்டத்தில் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து ஏஜென்ட் ஆக்கினார்கள். இதற்கு முதல் வருடம் மாதந்தோறும் முன்னூறு ரூபாய் ஸ்டைபன்டு. அந்த முன்னூறு ரூபாய் அவனை கை நீட்டி அழைத்தது, சேர்ந்துவிட்டான்.
இன்சூரன்ஸ் பற்றி வகுப்பறை கல்வி கொடுத்து பின் லைசென்ஸ் வழங்கி களப்பணிக்கு அனுப்பி விடுவார்கள். முழுமையான தொழில்முறை முகவர் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டுமே; அதனால் மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியே பாலிசி முதிர்வடையும் தொகுப்பு வரும். அதைப் பெற்று அந்த முகவரிக்கு சென்று அவர்கள் முதிர்வுத் தொகை பெற உதவி செய்வார்கள். அப்படியொரு முகவரியை எடுத்துக் கொண்டு பழைய வண்ணாரப் பேட்டை காளிங்கராய முதலி தெருவுக்கு போனான். கதவிலக்கத்தை சரிபார்த்துக் கொண்டு வீட்டின் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்வதற்குள் வீட்டின் உள்ளிருந்து ஒரு பெண் வந்தாள். அவளைப் பார்த்த செல்வக்குமரன் ஒரு நொடி ஆடிப் போய் விட்டான்.வீட்டினுள் ஏதோ வேலை போலும்; வேட்டி மாதிரி புடவையை அந்தப் பெண் மடித்துக் கட்டிக் கொண்டிருந்தாள். முழங்கால் வட்டங்களுக்குக் கீழே இரண்டு இளம் வாழைத் தண்டுகள் போலத் தெரிந்தது. அவன் ஆடிப் போனது அவற்றைப் பார்த்ததனால் அல்ல; அவன் சேர்ந்திருக்கும் எல் ஐ சி கிளையில் வேலை பார்க்கும் அந்தப் பெண்ணைப் பார்த்ததால்தான். நேற்றுத்தான் தனக்கு அதுவரை வரவேண்டிய கமிஷன் தொகைக்கு காசோலைக் கேட்டிருந்தான், அவனுக்கு அவசரம். வரிசைப்படி அவனுக்கு கிடைக்க இரண்டுநாள் ஆகும் என்று இந்த பெண் சுபத்ரா கூறியிருந்தாள். நாளை ஞாயிறு; திங்கள் கிழமையாவது கிடைத்தால் நன்றாயிருக்கும்.
அவசரமாக புடவையை எடுத்து விட்டு சரி செய்து கொண்டாள்,
” என்ன மிஸ்டர் வீட்டுக் கெல்லாம் வந்துட்டீங்க; நான்தான் இரண்டு நாளில் செக் தர்ரேன்னு சொன்னேனில்ல” சுபத்ரா படபடப்புடன் கேட்டாள்.
செல்வக்குமரன் பதறிப் போய்,
” ஐயய்யோ..அதற்கில்லை, நான் ஒரு முகவரி தேடி வந்தேன்”
என்றான்.
” நம்பச் சொல்றீங்களா?”
” இதோ பாருங்கள் இந்த முகவரி நபரைத்தான் தேடி வந்தேன். இவர் பாலிசி அடுத்த மாதம் முதிர் வடையுது, அவருக்கு டிஸ்சார்ஜ் வவுச்சரில் கையொப்பம் பெற்று உதவத்தான் தேடி வந்தேன்” என்று டைரியில் எழுதி வைத்திருந்த விபரத்தைக் காட்டினான்.
அதைப் பார்த்த சுபத்ரா தான் அவசரப்பட்டு விட்டதை உணர்ந்ததால் மனம் சங்கடப்பட்டாள். அதை அவள் முகம் தெளிவாகக் காட்டிக் கொடுத்தது.
” சாரி மிஸ்டர்……….”
“செல்வக்குமரன்”
” ஓ கே…. இவர் மாடிப் போர்ஷனில் இருக்கிறார்; வலப்பக்கம் இருக்கும் படிகளில் ஏறிப் போங்கள்”அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு பாலிசிதாரரைப் பார்க்கப் போனான்.
ஒவ்வொரு நாளும் முற்பகலில் களப்பணி. பிற்பகலில்தான் முகவர்கள் அலுவலகம் வருவார்கள். அப்படி திங்கள் கிழமை அலுவலகம் வந்தவன் சுபத்ரா இருக்கைப் பக்கமே திரும்பாமல் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அவள் அடக்க முடியாத சிரிப்பை தன் இதழைக் கடித்து மறைத்துக் கொண்டிருந்தாள்.
செல்வக்குமரன் முகவர்கள் பகுதியில் மற்றவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது அட்டெண்டர் வந்து அவனை அட்மின் மேனேஜர் கூப்பிடுவதாகக் கூறினான்.
‘இதென்னடா புதுக்தையா யிருக்கு’ என எண்ணியபடியே அட்மின் மேனேஜர் முன் சென்றான்.
” வாங்க குமரன், இப்பதான் செக் இரண்டாவது கையெழுத்துக்கு எங்கிட்ட வந்திச்சு. இந்தாங்க உடனே போய் டெபாசிட் செய்யுங்க. ஒரே வங்கி தான, உடனே உங்க அக்கவுண்டில கிரெடிட் ஆகிடும். டெஸ்பேட்ச் போய் உங்கள் கைக்கு செக் வரதுக்குள்ள வங்கி நேரம் முடிஞ்சிடும். சுபத்ரா உங்கள் அவசரத்தை பற்றி சொன்னதால நானே கொடுத்துட்டேன்” என்று கூறி செக்கைக் கொடுத்தார். அக்னாலெஜ்மன்டில் கையொப்பமிட்டு வாங்கிக் கொண்டு நிமிர்ந்து சுபத்ரா பக்கம் திரும்பி பார்த்தான். அப்போதும் சுபத்ரா உதட்டை சுழித்து சிரிப்பை அடக்கியபடி குனிந்து வேலை செய்து கொண்டிருந்தாள்.
அடுத்த வாரம் பூர்வீக கிராமத்துக்கு எல்லாரும் போய் சாமி கும்பிட வேண்டும். அவன் அப்பா தன் கிராமத்து சொத்துகளை தன் தங்கை பெயருக்கு மாற்றம் செய்து தருகிறார். அதனால் செல்வக்குமரன் கருங்குழி சென்று அவர்களோடு சேர்ந்து கொண்டான். எல்லாரும் பரமன் குறிச்சி வந்து சேர்ந்து விட்டார்கள். மறுநாள் கோவிலில் இவர்கள் அபிஷேகம் ஆராதனை செய்கிறார்கள். கோவிலை பொறுமையாகச் சுற்றி வந்த போது குமரன் கண்ணில் ஒரு ஒளி ஊடுறுவியது. பின் ஒரு நொடி எல்லாமே இருட்டடிப்பு. அவன் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்ததில் நம்பவே முடியவில்லை. சுபத்ரா இங்கே எப்படி?
அவளும் இவனைப் பார்த்து ஸ்தம்பித்து விட்டாள். இரண்டு பேரில் சுபத்ராவே முதலில் மீண்டு வந்தாள்.
” குமரன் நீங்க எப்படி இங்க”
” எனக்கும் அதே கேள்விதான் சுபத்ரா. இது எங்கள் பூர்வீகமான ஊர். கோயில் பூசைக்காக குடும்பமே வந்திருக்கிறது.”
“ஓ… எனக்கும் இதுதான் சொந்த ஊர். என் அய்யன் வீடு இங்குதான் உள்ளது. ஒரு நெருங்கிய உறவினர் கல்யாணத்துக்கு வந்தோம்.”
“இந்த ஊர் மொத்தமும் ஒரே ஜாதி சனங்களாச்சே”
“ஆமாம் “
” எப்போ சென்னைக்கு திரும்பறீங்க, நான் திரும்ப இரண்டு நாளாகும்”
“வந்த கல்யாணம் நேற்றே முடிஞ்சிடுச்சு, இன்னைக்கு ராத்திரி வண்டியில் சென்னை திரும்பறோம்”
” அப்பறம் ‘பார்டி வெயிட்டிங் ‘ போட்டது மாதிரி அந்த செக் அவசரமா கைக்கு கெடைச்சதுக்கு ரொம்ப நன்றி”
“என்னைப் பெறுத்தவரை நன்றி சொல்பவர்களுக்கு இடையில் இடைவெளி அதிகமிருப்பதாக நினைப்பவள்”
செல்வக்குமரன் ‘அப்படியா’ என்பது போல அவளை நேர் கொண்டு பார்த்தான். அவளோ ‘ஆமாம் அப்படித்தான்’ என்பது போல லேசான தலையாட்டலுடன் இரு கண்களையும் மூடித்திறந்தாள். குமரனை பட்டாம் பூச்சி கூட்டம் ஒன்று தூக்கிக் கொண்டு வானில் பறந்து போய்க் கொண்டிருந்தது.
சென்னை வந்தபின் தினந்தோறும் சுபத்ரா இருக்கை எதிரே நாற்காலியில் அமர்ந்து புரபோசல் படிவத்தில் சந்தேகம் கேட்பான். பாலிசி தொடர்பாக நன்றாக தெரிந்தவற்றையே சந்தேகம் என்ற பெயரில் அவளெதிரே அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பான். அவன் போகாத நேரத்தில் எல்லாம் அவளே அட்டெண்டர் மூலம் அவனைக் கூப்பிட்டு பரொபோசல் படிவத்தை கையில் வைத்தபடி ஏதாவது கூறிக் கொண்டிருப்பாள்.
இது அவர்களின் காதல் பசிக்கு சோளப் பொரி போலத்தான். தனிப்பட, மனதோடு ஒன்றிய செய்திகளை பேசவே முடிய வில்லை.
மெல்ல மெல்ல இரண்டு பேரும் அந்த முடிவுக்கு வந்தார்கள். ஐந்து மணிக்கு ஆபிசில் இருந்து கிளம்பி அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தின் கேன்டீனில் புல் தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டே கேரட் வடையோ பீன்ஸ் வடையோ தேங்காய் சட்டினியில் தொட்டு சாப்பிட்டு காபி குடித்து விட்டு கிளம்புவதுதான் அது.
பேசுவதென்றால் அப்படி என்னதான் பேசுவது. இண்டு பேரும் சிறு வயது சேட்டைகள், நினைவுகளை பறிமாறிக் கொள்வார்கள். பார்த்த சினிமா, படித்த கதைகள் பற்றி பேசுவார்கள். சில நேரங்களில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் பற்றி பேசுவார்கள். மொத்தத்தில் ஒருவர் பற்றி மற்றவர் நூற்றுக்கு நூறு அறிந்தவர் ஆனார்கள்.
அவர்களின் அந்த மகிழ்ச்சி நீடிக்க வில்லை. சுபத்ராவின் தாய் வழிப் பாட்டி உருவத்தில் ஆபத்து வந்தது. சுபத்ராவை அவள் தாய் மாமா தங்கப்பாண்டிக்கே கல்யாணம் செய்ய வேண்டுமாம் ; அப்போதுதான் தறிகெட்டலையும் அவன் திருந்துவானாம். அவன் திருந்த சுபத்ரா வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டுமாம், என்ன வேடிக்கை!.
தங்கப்பாண்டி எந்த வேலைக்கும் போகாமல் இருக்கிற வீடுகளில் இருந்து வரும் வாடகையில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவன். அத்துடன் பாரிமுனை, உயர்நீதி மன்றம், எஸ்பிளனேடு சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சிறுசிறு வியாபாரிளுக்கும் ஆட்டோ ஓட்டுபவர்க்கும் வட்டிக்கு கடன் கொடுத்து வசூல் செய்து வந்தான்.
சுபத்ராவின் அப்பா செம்புதாஸ் தெருவில் அயர்ன் அன்டு ஸ்டீல் கடை வைத்து ரொம்ப செழிப்பாக இருந்தார். சாந்தோம் நெடுஞ்சாலையில் புல்லட் மோட்டார் சைக்கிளில் வரும் போது பின்னால் வந்த குப்பை லாரி மோதியதில் அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டார். சுபத்ராவின் அம்மா ஒரு வயது கைக்குழந்தையுடன், ராயபுரம் மாதா கோவில் இருந்த வீட்டை லீசுக்கு கொடுத்து விட்டு அம்மா வீட்டுக்கே வந்து விட்டாள்.
ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவள் தம்பி தங்கப்பாண்டி அக்கா மகள் மீது பாசத்தைக் கொட்டினான். வீட்டு வேலை மிகுதியான நேரங்களில் தம்பியிடம் சாதத்தை நன்கு பிசைந்து கொடுத்து சுபத்ராவுக்கு ஊட்டிவிட சொல்வாள். அவனும் காக்கா, நாய், மாடு என்று வேடிக்கை காட்டி சமத்தாக ஊட்டிவிடுவான். இரவு என்றால் ஊத்தப்பம் மாதிரி குண்டு தோசையை நிலாவைக் காட்டி ஊட்டி விடுவான். சுபத்ராவும் மாமாவென்று அவனிடம் ஒட்டிக் கொண்டு விட்டாள்.
சுபத்ராவினுடைய சம்மதமின்றியே எல்லா வேலையும் நடை பெற்றன. கல்யாண தேதிக்கு ஒருவாரம் முன்னாடியே சுபத்ராவை விடுப்பு எடுக்கவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள்.
சுபத்ரா, ” மாமா, எனக்கு இந்த கல்யாணத்த மனதளவில ஏற்க முடியல. உன்னால மக மாதிரி வளர்த்த என்ன எப்படி மாமா பொண்டாட்டியா பார்க்க முடியும்”என்று கேட்டுவிட்டாள்.
அதற்கு தங்கப் பாண்டி, ” சுபத்ரா, சொத்துகள் வெளியே போய்டக்கூடதுன்னு அம்மா சொல்றாங்க. கல்யாணமான ஒடனே இல்லன்னாலும் போகப் போக மனசு ஏத்துக்கிட்டுதான ஆகனும்” என்று தன் பக்கத்து பதிலை சொல்லி விட்டான். அவள் அம்மாவிடம் பல முறை போராடிப் பார்த்தாள்; எந்த பலனும் ஏற்படவில்லை.
சுபத்ராவின் தாய்மாமனுக்கு உள்ளுக்குள் சந்தேகமே.
சுபத்ரா குமரனிடம் பாட்டியின் கல்யாண திட்டத்தைக் கூறியதும், அவன் ஸ்தம்பித்து உட்கார்ந்து விட்டான். சுபத்ராதான் “பொறுமையாக யோசிப்போம் குமரன். பேனிக் ஆகிடாதீர்கள்.” என்று அவனை ஆசுவாசப்படுத்தினாள். இரண்டு பேரிடமும் இயல்பான சிரிப்பும் குறும்புப் பேச்சும் விடை பெற்றிருந்தது.
குறளகம் வட்டாரத்தில் உள்ள சிறுவியாபாரிகள், ஆட்டோக்காரர்கள் எல்லாருமே தங்கப்பாண்டியிடம் கடன் வாங்கியவர்கள்தான். அவர்களிடமெல்லாம் யுனைட்டெட் இந்தியா பில்டிங் எல் ஐ சி யில் வேலை செய்யும் தன் அக்கா மகளைத்தான் தான் கல்யாணம் செய்யப் போவதாகக் கூறி வைத்திருந்தான். இதனால் அலுவகம் வரும் போதும் திரும்பிப் போகும் போதும் எல்லாரும் தனக்கு மரியாதை தருவது போல நெளிவ தெல்லாம் தன்னைக் கண்கானிப் பதாகவவே சுபத்ரா உணர்ந்தாள்.
அவர்கள் அண்ணாமலை மன்றம் செல்வதை அடியோடு நிறுத்தி விட்டார்கள். இயன்றவரை அலுவலகத்திலே பேசிக் கொள்வதோடும், மதிய உணவு சாப்பிடும் போது பின்புறம் உள்ள கேன்டீனில் சந்தித்துக் கொள்வதோடும் சரி. நாள் தோறும் ஒரு யோசனை வந்து கொண்டே இருந்தது; எதுவும் சரியானதாக இல்லை.
செல்வக்குமரன் நண்பர்கள் நாண்கு பேர் சேர்ந்து ஒரு திட்டம் தயாரித்தார்கள். ஜாபர்கான் பேட்டை சார் பதிவாளர் ஒரு நண்பனின் பாலிசிதாரர். அதனால் அவர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டான். அற்கான நாளையும் குறித்து விட்டார்கள். காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் சுபத்ரா வந்துவிட்டால் நேரே ஆட்டோவில் ஏறி ஜாபர்கான் பேட்டை சென்று பத்து மணிக்கெல்லாம் பதிவை முடித்து விடுவது என்று திட்ட மிட்டார்கள்.
குறிப்பிட்ட நாளில் இன்னமும் சில்லறை வியாபாரிகள் யாரும் அந்த எஸ்பிளனேடு சாலையில் கடை போட வரவில்லை. ஜபர்கான் பேட்டை போவதற்கு இரண்டு ஆட்டோக்களை அமர்த்தினார்கள். அதைக் கவனித்த ஓரு ஆட்டோக்காரன் வேகமாக நடந்து குறளகம் பி சி ஓ வில் போய் தங்கப்பாண்டிக்கு தகவல் கொடுத்து விட்டான். ஜாபர்கான்பேட்டை பதிவு அலுவலகத்திற்கு உடனே வரச் சொல்லி விட்டான்.
ஜாபர்கான் பேட்டை பதிவு அலுவலகத்தில் கல்யாணம் சம்மந்தப்பட்ட எல்லாரும் குழுமிவிட்டார்கள்; சாட்சிகளும் வந்து விட்டார்கள். முறையான படிவங்களை நிரப்பி கையொப்பம் இட்டார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கப்பாண்டியும் அவன் ஆட்களும் வந்து சுபத்ராவை குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் ஒரு அம்பாசிடரில் கிடத்தினார்கள். தடுக்க வந்த குமரன் மற்றும் நண்பர்களை உருட்டுக் கட்டையால் தாக்கி விட்டு பறந்து விட்டார்கள். நண்பர்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். சுபத்ராவினுடைய
“மாமா என்னை விட்டுடு”
என்ற அலறல் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
அருகில் இருந்த குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.
அன்று மாலையே உதவி ஆய்வாளர் இரண்டு காவலர்களுடன் சுபத்ரா வீட்டுக்கு சென்றார்கள்; அங்கு சுபத்ரா மட்டுமல்லாது வேறயாரும் கூட இல்லை. ஒரு வயதான பாட்டிதான் இருந்தது. ‘எல்லாரும் எங்கே போனார்கள் என்று தெரியாது’ என்பது அதன் பதிலாக இருந்தது.
குமரன் துவண்டு போய் விட்டான். அவன் அப்பாவுக்கு செய்தி போய் அவர் வந்து கருங்குழி கிளம்பச் சொன்னார். முடிக்க வேண்டிய பாலிசி வேலைகளிருப்பதால் அவற்றை முடித்து விட்டு வருவதாகக்கூறி அவரை அனுப்பிவிட்டான். இரண்டுநாள் கழித்து அலுவலகம் சென்றவனை எல்லாரும் பரிதாபமாகப் பார்ப்பதாக உணர்ந்தான். அந்த வாரக் கடைசியில் ஒரு செய்தியும் கிடைத்தது. திருப்பதியில் வைத்து திருமணத்தை முடித்து விட்டார்களாம். இதற்காக முன்னரே அங்கு பதிவு செய்து வைத்திருந்ததால் வசதியாகப் போயிற்றாம்.
சுபத்ரா வருவாள், பார்க்கலாம் என்று தினமும் அலுவலகம் சென்றான்; அவள் வரவில்லை வேலையை ராஜினாமா செய்து விட்டாள் என்ற செய்திதான் கிடைத்தது. சுபத்ராவை சந்திக்க எந்த வழியுமே இல்லாமற் போனது. சில ஆண்டுகளுக்குப் பிறகே அவள் தாத்தாவின் ஊருக்கு சென்றுவிட்ட விவரம் தெரிந்தது.
நடைப்பிணமாக இருந்த குமரனை அவன் அப்பா வந்து கட்டாயப்படுத்தி அழைத்துப் போனார். கொஞ்சம் கொஞ்சமாக மில் வேலையில் ஈடுபட்டதால் குமரன் மாறி வந்தான். ஐந்து வருடமாக மறுத்து வந்தவனை ஒருவழியாக கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தார்கள். பழைய உறவினர் என்பதால் எந்த சிக்கலும் இல்லாமல் கல்யாணம் நடந்தது. அவனுக்கு பிறந்தது ஒரே ஒரு ஆண்பிள்ளை மட்டுமே. எனினும் அவன் தனிப்பட்டு மனதளவில் தனக்காக ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் இருந்தான்.
அவ்வப்போது பரமன்குறிச்சி போய் சுபத்ராவின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்த்து வர ஆசை வந்தாலும் அடக்கிக் கொண்டான். தான் போவதால் சுபத்ராவின் வாழ்க்கையில் ஏதேனும் குழப்பம் வந்துவிடுமோ என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.
தன் பிள்ளைக்கு பெண் அமைய வில்லையே என்று இப்போதுதான் குலதெய்வ பூசைக்காகத்தான் சொந்த ஊர் வந்துள்ளான்.
அவசரமாக யாரையோ பார்க்கச் சென்ற மனைவி திரும்பி வந்தாள். இவன் கேட்காமலேயே விவரம் சொன்னாள்.
“உள்ளுரிலேயே ஒருபெண் இருக்கிறாள். அவளது தாய், பிடிக்காத தாய்மாமனுக்கு கட்டி வைத்ததால் கோபித்துக் கொண்டு சென்னையிலிருந்து இங்கே அப்பாவழி பாட்டி வீட்டில் வந்து முப்பத்தைந்து வருடங்களாக இருக்கிறாள். பத்து வருடங்கள் வரை தாய்மாமனுடன் பேச்சே கிடையாது. தன்னுடைய தவறுக்கு அவன் மன்னிப்பு கேட்டு பல தடவை கெஞ்சியும் அவள் மசியவே இல்லை. ‘கடைசி காலத்தில் கவனிக்க ஆணோ பெண்ணோ ஒரு வாரிசு வேணும்’ என எல்லாரும் அவளுக்கு புத்தமதி சொல்லியும் கேட்க வில்லை. தாய்மாமன் இங்கைக்கும் சென்னைக்குமாக அலைந்து கொண்டிருந்தான். தன் வாழ்வு சூன்யமா ஆகிடக் கூடாதுன்னு நெனைச்சாளோ என்னவோ அவள் பத்தாண்டுகளுக்குப் பின் ஒரு பெண்பிள்ளையைப் பெற்று விட்டாள். அவள் புருஷனோ சென்னையில் ஒரு விதவைப் பெண்ணோட குடும்பம் நடத்தறானாம். தாய் கதை என்னவா இருந்தாலும் பெண் தங்கமானவளாம். நாளைக்கு பார்க்க வரலாமா என கேட்டு வரச் சொல்லியிருக்கேன். அவள் பெயர் செல்வக்குமரியாம்.” என்றாள். பெயரைக் கேட்ட செல்வக்குமரன் அதிர்ந்தே போனான்.
குமரன் காலார நடந்து வருகிறேன் என்று கோவில் பக்கம் போனான்.
குளத்துப் படியில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். அவனை அறியாமலேயே துக்கம் பீறிட்டு வந்தது. உடல் குலுங்கியது; தொண்டையில் சளி கட்டியது; மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. யாரும் பார்த்திடுவார்களோ என்று திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டான். இன்னும் நாண்கு படிகள் இறங்கி தண்ணீரில் நின்றான். முகம் கழுவிக் கொண்டான்.
குளத்து நீர் கடல் நீர் போல வந்து வந்து காலில் மோதிப் போகவில்லை. அப்படியே கால்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது சுபத்ராவின் நினைவு போல.
இடைப்பட்ட காலத்தில் சுபத்ராவைப் பார்க்கத் தோன்றிய போதெல்லாம் வந்து பார்த்திருந்தால் அவளுக்கு அறிவுறை கூறி அவள் வாழ்க்கையை சரி செய்திருக்கலாமோ எனத் தோன்றியது. தான் சுய நலமாக இருந்து விட்டதாக தன்னையே நொந்து கொண்டான்.
“சுபத்ராவை கல்யாணம் செய்திருந்தால் இந்தப் பெண் என்னுடைய மகளாகத்தான் இருப்பாள். அவளையே என் மகனுக்குப் பார்ப்பதா”
வீட்டுக்கு திரும்பியவனை மனைவி கேட்டாள்
“எத்தனை மணிக்கு வருவதாக டைம் சொல்லட்டும்”.
குமரன் சொன்னான்,
“இதுமுறையில்லை; வேண்டாம்“
அவன் மனைவியோ தாயின் கதையைக் கேட்டதால் வேண்டாமென்று கணவர் நினைக்கிறார் என எண்ணிக் கொண்டாள்.
கதையில் நல்ல விறுவிறுப்பு…. ஆம் கதை முடியும் வரை…. எப்படி கதையை முடிக்க போகிறார் என்ற சஸ்பென்ஸ்…
LikeLiked by 1 person
மிக்க நன்றி பார்த்திபன்.
LikeLike
கதையின் கரு நன்றாக இருந்தது. ஆனால் கதையின் நடை இயல்பாக இல்லையோ என்று தோன்றுகிறது. துணைப் பாடத்தில் வரும் கதைகளைப் படிப்பது போல் இருந்தது. நடையை மாற்றலாம் என்பது என் தாழ்மையான கருத்து .
LikeLiked by 1 person
நன்றி வேம்பு. கதையின் நீளம் அதிகமாகிப் போய் குறைத்ததால் அப்படி நேர்ந்திருக்கலாம்.
LikeLike
சிறுகதையில் தலைப்புக்குப் பெரும் பங்கு உண்டு என்று இலக்கியத்திறனாய்வாளர் மொழிவர்.. அதை இந்தக் கதை நன்றாகவே மெய்ப்பித்துக்காட்டியுள்ளது. கதைப்பின்னல் அளவில் 1970 , 80 களின் திரைக்கதைகளை ஒத்திருப்பது போல் தெரிந்தாலும் , கதை முடிவு அந்த எண்ணத்தை மாற்றி இது வேறு என்பதை உணர்த்தி நிறைவடைகிறது. மாறுபட்ட முடிவு வாசகரைச் சற்று நிறுத்தி நிதானித்துவிடுகிறது.
LikeLiked by 1 person
நயம் பாராட்டலுக்கு நன்றி உத்தமன்.
LikeLike