(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா)
கிராமத்து டீக்கடை பென்ச்… இதை அடிச்சிக்க ஐநா வால கூட முடியாது. அம்பூட்டு விஷயம் பேசி அலசி ஆராய்ஞ்சி துவைச்சு தோளில் போட்டுக்கிட்டு போய்கிட்டே இருப்பாங்க. பிச்சாண்டி… இப்போ அப்படி ஒரு ‘மீட்டிங்’ கை அட்டன் பண்ண தான் டீக்கடை நோக்கி வேக வேகமா சென்று கொண்டிருந்தான். எதிரே சிவசு வருவது தெரிந்தது. அட இவன் வில்லங்கம் புடிச்சவனாச்சே? ஓசியில் வெத்தலை சீவல் போடுறதே வேலை இவனுக்கு. பார்க்காத மாதிரி போயிடுவோம் என்று மனசு சொல்ல… அதற்குள்,
“என்ன பிச்சாண்டி நேத்திக்கு திருவிழாவுல கூத்து பாக்க வரவே இல்லை…? கள்ளு போதை வேற கண்ணுல இன்னும் மிச்சம் இருக்கு? ” என்று கேட்டவாறே எதிரே வந்து நின்றான் சிவசு.
“ஆமாம் அதே…இதிகாச கூத்து தானே. அதான் வரல… “என்றான் சலிப்பாக பிச்சாண்டி.
“இப்போ எங்கிட்டு புறப்பாடு? “
“ம்… சும்மா…. இங்கனகுள்ள தான்…”
“அப்போ சரி. டீக்கடை பக்கம் மாத்திரம் போகாதே ப்பு “
“ஏன்…? “
“அட… கூத்துல.. நேத்து வெட்டு குத்து இல்ல நடந்தது. அதை அங்கிட்டு வச்சி தான் பைசல் பண்ணுதாங்களாம். காக்கி உடுப்பு குவிஞ்சி கிடக்கு ”
“என்ன டீ கடையில போலீசா. ஊருக்குள்ள எந்த பரபரப்பையுமே காணல ”
“நா என்னா பொய்யா சொல்லுதேன் “
“கூத்துல வெட்டு குத்துன்னா. கோயில் கிட்ட போயில்ல வெசாரிக்கனும். டீ கடைல என்னா வெசாரண வேண்டிக் கெடக்கு”
‘ஒருவேளை நேத்து மத்தியாணம் டீ கடையில நடந்ததா கேள்விப்பட்ட வாக்குவாதம் கூத்துல எதிரொலிச்சிடுச்சோ’ என்று எண்ணமிட்டான். அப்படின்னா மொத தகவலே தனக்குத்தான வருமுன்னு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.
“அதென்னமோ தெரியல ப்பு. வெத்தல சீவ குடேன்”..சிவசு.
“இனிமேதான் வாங்குனும்”…பிச்சாண்டி
“சரி வா அங்கிட்டு செட்டியார் கடைல போய் வாங்கிக்கலாம்”..சிவசு
“இங்கிட்டு போயி டீ கடை பக்கத்து பொட்டி கடைல வாங்கலாம் வா”..பிச்சாண்டி
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே மொக்கையன், “ஏ…சிவசு….ஒன்னைய கண்ட மேனிக்கு ஏசரான் அந்த டீ கடைக்காரன். டீ காசு குடுக்காம நைசா நழுவிட்டியாமே. நாளைக்கு வந்தா ஒனக்கு சுடு தண்ணிதானாம்” என கத்திக் கொண்டே நெருங்கி வந்தான்.
“ஓகோ…ஐயா அதாங் அங்கன வரதுக்கு வேண்டாமுன்னு பம்முராரா. இந்தா ஒத்த ரூவா..போயி செட்டியாரண்டை நீயே வாங்கிக்க” னுட்டு பிச்சாண்டி டீ கடையை நோக்கி நடந்தான். பிச்சாண்டி பிடிவாதமாக டீ கடைக்கு போவதை பார்த்து அவன் செட்டியார் கடைக்கு வரமாட்டன் என்று சிவசு, ஏதோ முடிவெடுத்து திரும்பி நடந்தான்.
கடன் பாக்கிக்கு எல்லாம் பயப்படறவன் இல்ல இந்த சிவசு. எத்தனையோ தடவை இப்படி காசு தராமல் இருந்திருக்கிறான். இப்ப என்னமோ பெரிய மானஸ்தனாட்டம் நடந்துக்கறான். அவன் டீ கடையை ஒதுக்கி விட்டு பரபரப்பா வேற பக்கமா போறது என்னமோ இடிக்குது.
டீ கடையில் அன்றைய செய்தித்தாளை ஆளுக்கு ஒரு தாளாக வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். கடையின் உள்ளே தள்ளி உட்கார்ந்திருந்தவர்கள் காரசாரமாக அரசியல் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். இரண்டு பக்கத்துக்கும் ஆதரவாக யாரும் சேர்ந்து விடக்கூடாது என்பதாலோ என்னவோ டீ கடை ராமன் ரேடியோவை சத்தமாக ஒலிக்க விட்டிருந்தான். முன்பெல்லாம்
” இது இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தமிழ்ச் சேவை இரண்டு”
என்று அலறிய ரேடியோக்கள் இப்போது,
“கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க”
“நைன்டி எய்ட் பாயின்ட் த்ரீ எஃப் எம் மிர்ச்சி, எப்பவுமே ஹாட்டு மச்சி”
என்று அலறுகின்றன.
பிச்சாண்டி டீ கடையை அடைந்ததும்,
” என்ன ராமா அரசியல் அனல் பறக்குதாங் காட்டியும்” என்றான்.
ராமன்,
” அரசியல் பேசாதீங்க ன்னு இத்தே தண்டி போர்டு மாட்டி என்னா பெரயோசனம்” என்றான்.
அதற்கு பிச்சாண்டி,
” ஆத்திகம் நாத்திகம் பேசாதீர்கள் அப்டீன்னு ஒரு போர்டையும் சேத்து வச்சிடு ராமா” என்றான்.
” வச்சிட்டா மட்டும் அப்டிய கேட்டுடப் போறீங்களாக்கும்”
நேற்றைக்கு நடந்தத மனசில வச்சிதான் ராமன் பேசுறான்னு நல்லாவே தெரியுது. அது விசயமா மேல் பஞ்சாயத்து பண்ண பிச்சாண்டி வந்திருப்பதையும் ராமன் யூகித்து விட்டான்.
அறிவுக்கண், ஓய்வு பெற்ற தமிழாசிரியர். சுற்று வட்டாரத்தில் பெரும்பாலோர் அவரிடம் படித்தவர்களே. பொதுவுடைமைக் கருத்துகள், சுயமரியாதைச் சிந்தனை, மூடப்பழக்க ஒழிப்பு, சமூகநீதி என்று பல தளங்களில் பேசுவார். அவர் வைக்கும் கருத்துகள் யாரையும் புண் படுத்தாது; ஏற்றுக் கொள்ளும்படியே இருக்கும். மாற்றுக் கருத்து உள்ளவர்கள் கூட அவர் பேசுவதை முகம் சுளிக்காமல் ரசித்துகேட்பார்கள்.
நூறு ரூபாய் நன்கொடை வாங்கிக் கொண்டு அறிவுக்கண் என்ற பெயரை வைத்தவரே தந்தை பெரியார்தான். அநேகமாக அங்குவரும் எல்லாருமே அவருடைய மாணவர்களாக இருப்பதால் அவர் டீ கடை பக்கம் அதிகம் வருவதில்லை. அவர்களின் சுதந்திரம் கெடக்கூடாது என்று நினைப்பவர். படித்த மாணவர்கள் இல்லையென்றால் மட்டும் உட்கார்ந்து டீ சாப்பிடுவார், யாரும் இருந்தால் அவசரமாகப் போவது போல் நின்றபடியே டீயை வாங்கிக் குடித்து விட்டுப் போய் விடுவார்.
நேற்று நடந்தது இதுதான்.
சமீப காலமாக பரபரப்பாக பெருகிவரும் ஆத்திகம் நாத்திகம் வாதம் பற்றி இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் தமிழ் ஐயா புகுந்து சில செய்திகளைக் கூறினார். டிப்டாப் ஆத்திகவாதி ஆசிரியரை மரியாதையில்லாமல் பேசிவிட்டார். அதை நேற்றிரவு கேள்விப்பட்ட பிச்சாண்டி, வாதம் இன்றும் தொடர்ந்தால் ஒரு கை பார்த்து விடுவது என்றுதான் வந்திருக்கிறான்.
அருகிலிருக்கும் மின்சார அலுவலகத்தில் வேலை பார்க்கும் இருவர் பதினோரு மணிக்கு மேல் வந்து செய்தித்தாளை புரட்டிவிட்டு, ஆளுக்கு ஒரு மசால் வடையும் இஞ்சி டீயும் சாப்பிட்டு விட்டு போவார்கள். அவர்கள்தான் இந்த பிரச்சினைக் குரியவர்கள். அவர்கள் வந்தார்கள்; பேசாமல் டீயை குடித்து விட்டு போயிருக்கலாம்; நேரம் யாரைத்தான் விட்டது. நேற்றைய பிரச்சினையை மீண்டும் விவாதப் பொருளாக்கினர்.
பொறுத்துப்பார்த்த பிச்சாண்டி பேசத் தொடங்கினான்.
“முடிவா என்ன சொல்ல வாரீக”
இந்த குறுக்கீட்டை எதிர் பார்காதவர் களாதலால் திகைத்துப் போனார்கள்.
“நாத்திகம் பேசுறவக தான் மோசமா நடந்துக்கறாக”
” நாத்திகம் பேசுரவுக ஆட்சியில நடந்த கொலைகள வச்சித்தாங் சொல்லுதோம்”
” அந்த கொலைங்கள்ளாம் ஆத்திகம் பேசுனதுக்காகவா ஆத்திக வாதிங்கள கொன்னாங்க. அந்த கொலைங்க முச்சூடும் தனி முன்விரோதம், ரவுடித்தனம் இதனால நடந்துச்சி. அதுக்கு அரசியல் சாயம்தான பூசுவிங்க, இப்ப என்னா புதுசா நாத்திக சாயம் பூசுறீங்க”
“……………” பிச்சாண்டியின் தாக்குதலை எதிர் பார்க்காததால் அவர்களால் பதில் சொல்ல முடிய வில்லை.
பிச்சாண்டி தொடர்ந்தான்,
” பேன்டு சட்டை, நாமம் பட்டை, சந்தன குங்குமப் பொட்டு இதனாலல்லாம் அறிவாளி, நல்லவங்கன்னு முடிவு பண்ண முடியாது. வேட்டி, மேல்துண்டு, வெத்தல காவி பல்லுன்னு இருக்கற நானு முட்டாளு, கெட்டவன்னு சொல்லமுடியாது. படிச்சது பன்னென்டாவது வரைக்கும்னாலும் எங்க தமிழாசிரியர் எல்லா அறிவையும் ஊட்டியிருக்காரு”
” நாங்க என்னா சொல்ல வராம்னா..”
” நீங்க எதுவும் சொல்ல வரவேணாம்.
அன்பை மட்டுமே போதிக்கறோம்னு சொல்ற மதம் எல்லாமும் அவங்களுக்கு எதிரான விமர்சனமோ கருத்தோ வாரப்ப கருத்துங்க கூட மோதாம, கருத்துச் சொன்னவங்களோடதான மோதியிருக்கு, மெரட்டியிருக்கு. அடிபணியலன்னா தோத்துடுவோமோன்னு பயந்து கொலை செஞ்சிருக்கிறது தான வரலாறு.
ஒலகம் தட்டன்னு சொல்லிச்சு மதங்கள். ஒலகம் உருண்டைன்னு சொன்ன கலிலியோவோட அறிவியலைப் பாத்து அவரைக் கல்லால் அடிச்சு காயப்படுத்திச்சு.
புருனோவை ரோம் நகர வீதியில் வச்சி உயிரோட கொளுத்திச்சி, வங்காள தேசத்தில முற்போக்கு எழுத்தாளங்கள கொல பண்ணிச்சி, சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் தலைங்களுக்கு வெல வச்சிது .
சமணர்ங்களையும் பௌத்தர்ங்களையும் கழுவுல ஏத்திக் கொன்னிச்சி, எழுத்தாளங்க கோவிந்த் பன்சாரே, தபோல்கர் கல்புர்கி, கௌரி லங்கேஷ் இவுங்கள கொன்னிச்சி.
மதங்க எல்லாம் கடவுள பத்தியே சிந்திச்சிக்கிட்டு இருக்கிறப்ப, நாத்திகம்தான் மனுசங்களப் பத்தி சிந்திச்கிக்கிட்டு இருக்குது”
பெரிய பிரசங்கமே செஞ்சு முடிச்சிட்டான்.
டீ கடைல இருந்த மொத்த பேரும் வாயடைச்சு நின்னாங்க.
தமிழாசிரியர் அறிவுக்கண் டீ கடையை நோக்கி வந்தார். அவர் பின்னாடி பம்மியபடியே சிவசு வந்தான். பிச்சாண்டி டீ கடைக்கு வருவதைத் தடுக்க தான் போட்ட நாடகம் பலிக்க வில்லை என்றானதும், நேரே தமிழ் ஐயாவைத் தேடிப் போய் விட்டான்.
அங்கிருந்தவர்களை வைத்து என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துவிட்டார். போதாக்குறைக்கு சிவசு வேறு சொல்லி வைத்திருந்தான். பிச்சாண்டி உள்ளிட்ட சிலர் எழுந்து நின்று வணங்கினார்கள். தமிழாசானும் வணங்கி அனைவரையும் உட்காரச் சொன்னார். வந்த இஞ்சி டீயை பருகி காசு கொடுத்தார். பின்னர்,
“பிச்சாண்டி, ஆத்திகம் நாத்திகம் எதுவேணா கடைபிடிக்கட்டும்; அது அவரவர் விருப்பம். ஆனால் வள்ளுவர் சொன்னபடி மனதுக்கண் மாசு இல்லாதபடி பார்த்துக்க வேணும். அதுதான் எல்லா அறங்களுக்கும் தலையானது. மத்தது எல்லாம் ஆடம்பரத் தன்மையே. மனிதாபிமானம் இல்லாத மார்க்கம் என்ன மார்க்கம்.
மார்க்கம் எதுவானாலும் மனிதாபிமானமே முக்கியம்.”
என்று இறுதித் தீர்ப்பு வாசித்துவிட்டு கிளம்பினார்.
Leave a Reply