ஓகே மாப்பிள்ளை

(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)

என்னுடைய கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேலூர் மேட்டுத்தெரு என்கிற கிராமம். அந்த ஊரில்தான் அரசலாறு காவிரியில் இருந்து பிரிகிறது. என் உயிர் நண்பர்களில் ஒருவன் சேகர் அந்த ஊர்க்காரன். பல நாட்கள் அவன் வீட்டில்தான் கிடப்பேன்.
கும்பகோணம் திருவையாறு பேருந்து வழித்தடத்தில் உள்ள அவ்வூரின் பேருந்து நிறுத்தத்தில் ஒரு செல்வகாளியம்மன் கோவில் இருக்கும். அந்த வழியே செல்லும் பேருந்துகள் எல்லாம் கட்டாயம் ஐந்து நிமிடம் அங்கே நின்றுதான் செல்லும். கோவிலிலிருந்து ஒருவர் உண்டியலை குலுக்கியபடி பேருந்தை சுற்றி வருவார். பயணிகள் உண்டியலில் காசு போட்டு தலையை வெளியே நீட்டி சாமியை கும்பிட்டு செல்வார்கள். உண்டியலில் போட முடியாதவர்கள் கோவில் சன்னதி நோக்கி காசை வீசுவார்கள்.

அந்த கோவிலில் பால்காவடி திருவிழா. சேகர் காவடி எடுக்கிறான். அதற்காகத்தான் நானும் வேறு சில கல்லூரி நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். அது ஒரு பெண் பார்க்கும் படலம்தான். பூசாரி அவனுக்கு மாமாதான். அவர் பெண்ணும் இவனும் காதலிப்பது ஊரரிந்த ரகசியம். ‘சேகர் அப்பாவுக்கு தன் தங்கையை கட்டி வைத்தது போதும்; மகளையும் அதே குடும்பத்தில் கட்டி வைக்க மாட்டேன்’ என்று பூசாரிமாமா பிடிவாதமாக இருக்கிறார். அந்த பெண்ணை எங்களுக்கு  காட்டுவதற்குத்தான் எங்களை அழைத்திருக்கிறான்.

ஊர் முழுக்க லவுட் ஸ்பீக்கர் கட்டியிருக்கிறார்கள். கோவிலில் வாசிக்கும் நாதஸ்வர கச்சேரி ஊர் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாதஸ்வரம் வாசிப்பவர் திடீரென்று அனார்கலி சினிமா படத்திலிருந்து ‘ஜீவிதமே சபலமோ, தென்றல் சுகம் மலருமோ’ என்ற பாடலை வாசிக்க ஆரம்பித்து விட்டார். அதை தலையாட்டி ரசித்த சேகரிடம் , 
” டேய் அந்த அனார்க்கலி காதல் தோல்வியில் முடிந்தது ; நினைவிருக்கட்டும்” என்றேன்.
” என் காதல் கல்யாணத்தில்தான் முடியும்” என்றான். 
“உன் பூசாரி மாமாதான் ‘நோ’ சொல்கிறாரே”
“அதே வாயால் ‘ஓகே மாப்பிள்ளை’ன்னு சொல்ல வைக்கிறேன் பார்”
நாதஸ்வரம் முடிந்ததும் எல் ஆர் ஈஸ்வரியின் 
‘செல்லாத்தா’ ,
‘சமயபுரநாயகியே’ 
போன்ற பாடல்கள் தொடர்ந்தன. 
“சரிதான்..இரவெல்லாம் தூங்க விட மாட்டாங்க ” என நண்பர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த ஊரிலேயே சேகர்தான் முதல் பட்டதாரி, கும்பகோணம் அரசுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். இனி அவனுக்கு கடிதம் எழுதுபவர்கள் கே.சேகர் என முகவரியில் எழுதி அவனை அவமதிக்கக் கூடாதாம். கே.பிஏ , மேலூர் மேட்டுத் தெரு என்று எழுதினால் போதுமாம்; கடிதம் கதறிக் கொண்டு அவன் வீட்டில் வந்து விழுமாம்.

பக்த கோடிகளெல்லாம் குளித்து முடித்து, விபூதிப் பட்டை போட்டு, குங்குமப் பொட்டு வைத்து, மஞ்சள் நனைத்த வேட்டி கட்டி, மேல் சட்டை அணியாது காவிரி துறையில் வந்து குழுமத் தொடங்கி விட்டார்கள். பிள்ளையார் பிடித்து வைத்து பூசை போட்டு பூசாரிமாமா தன் வேலையை தொடங்க, பம்பை, உடுக்கை,சிலம்பு ஒலிக்கத் தொடங்கியது. நாதஸ்வரம், தவில் வாசிக்க ஆரம்பித்தார்கள். சற்றுத் தள்ளி வைக்கோலைக் கொளுத்தி தப்பு(பறை) அடிப்பவர்கள் அவற்றை சூடேற்றி சுருதி பார்த்துக் கொண்டார்கள்.
காவடி எடுப்பவர்களுக்கு ஒண்ணேகால் ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு கையில் காப்பு கட்டினார்கள்.

சேகர் , நான், மைக் செட் போடும் ஆறுமுகம் மூவரும் வந்தோம். வரும் வழியில் நாதசுர பார்டியைப் பார்த்து சேகர் ,
” நேற்று ராத்திரி அனார்கலி பாட்டு பிரமாதம்” என்றான்.
நான், ” இன்னைக்கி ‘மா……மா, .உன் பொண்ணைக்குடு ‘  வாசியுங்கோ” என்றேன். மைக் செட் ஆறுமுகம் என்னை ஒரு மாதிரி பார்த்தான்.

எம் எஸ் லாங் கிளாத்தில் , இரண்டு கால்களுக்கு நடுவில் சதுரமான ஜாயிண்டு வைத்த கள்ளி அண்டர்வேர் தைத்து , மஞ்சளில் சாயம் நனைத்து அணிவித்து மேலே மஞ்சளில் நனைத்த வேட்டியைக்கட்டி அவன் மாமா அழைத்து வந்து, காப்பு கட்டினார். மாலையெல்லாம் போட்டு நின்றான்.
உற்சாகமாக பாடி உடுக்கை அடித்து கரகம், காவடி எடுப்பவர்களுக்கு மருள்(சாமி) வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். முதலில் கரகம் எடுப்பவருக்கு சாமி வந்தது. ‘அரோகரா’ கோசம் போட்டு அவர் தலையில் கரகத்தை தூக்கி வைத்தார்கள். ஒவ்வொருவராக சாமி வந்து”உஸ்…உஸ்ஸ்ஸ் ” என்றவாறே முன்னும் பின்னுமாக அசைந்தாட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் தலையில் பிடி திருநீறை அடித்து நெற்றியிலும் பூசி, காவடியை தூக்கி அவர்கள் தோளில் வைக்க அவர்கள் காவடியை பிடித்துக் கொண்டு மிகவும் கவனமாக நடை போட ஆரம்பித்தார்கள்.
சேகருக்கு இன்னும் சாமி வரவில்லை. உடுக்கை அடிப்பவர் சேகரின் முகம் அருகில் வந்து அவன் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும்படி பலமாக பாடினார். கோயில் பூசாரிமாமா மணியடித்துக் கொண்டு நெருக்கமாக நின்று அம்மனை அழைக்கும் பாட்டுகளைப் பாடினார். துளிச்சலனம் கூட சேகரிடம் வரவில்லை.

பூசாரிமாமாயவின் மகன் கையில் வேப்பிலையை பெரிய கொத்தாக பிடித்துக் கொண்டு , சாமி வந்தவனாக ஆடிக் கொண்டே சேகரின் தலையில் அடித்தான். ‘சேகருக்கு ஏதோ குறை அல்லது தீட்டு இருக்கு, அதான் அருள் வரமாட்டேங்குது’ என்று ஜனங்கள் பேச ஆரம்பித்தார்கள்.
சேகரின் தங்கைகள் இரண்டு பேரும் என்னிடம் வந்து, 
” அண்ணே, காளியம்மன் கோயில் வரை எங்க கூட வாங்க ” என்று கோயிலுக்கு கூட்டிப் போனார்கள். கோயிலில் சூடம் கொளுத்தி அம்மனிடம் , “அம்மா தாயே காளியம்மா, எங்க அண்ணன் என்ன குத்தம் பண்ணியிருந்தாலும் நீ தானம்மா மன்னிக்கனும். எங்க அண்ணன் மேல எறங்கி அருள் பாலிக்கனும் தாயே” என்று வேண்டி தரையில் சாஷ்டாங்கமா விழுந்து கும்பிட்டு குங்குமம் இட்டுக் கொண்டு திரும்புகையில் பூசாரிமாமா மகள் ரமா படியேறி வந்தாள்.
” என்ன அண்ணி, எல்லாரும் ஆற்று துறையில இருக்காங்க, இங்க நடைதான் சாத்தியிருக்கே” என சேகர் தங்கை கேட்க, 
” ம்….நீங்க எதுக்காக வந்தீங்களோ அதுக்குத்தான்”
என்று பதில் சொல்லிவிட்டு அவள் சூடம் கொளுத்தப் போனாள்.
“சரி நாங்க எல்லாரும் துறைக்குப் போறோம்” என்று என்னை அழைத்துக் கொண்டு ஆற்றை நோக்கி போனார்கள்.
ஆற்றில் சேகரின் அம்மா, அத்தை முதலான பெண்கள் எல்லாரும் அழ ஆரம்பித்து விட்டார்கள்
“அம்மா காளியம்மா எந்த குத்தமாயிருந்தாலும் ஒன் குழந்தைய மன்னிச்சிடு”

நிலைமை மிகவும் மோசமாவதை சேகரிடம் காதோடு காதாக சொன்னோம். அவன், “சாமி வந்துச்சின்னா ஆட மாட்டேனா டா, வரலைடா ” என்றான். ரமாவை அழுதபடியே கோயிலில் பார்த்ததை சொன்னேன்.
அவ்வளவுதான் , அவனுக்கு சாமி வந்து ஆட ஆரம்பிச்சிட்டான். 
ஊரே அரோகரா கோசம் போட காவடியை அவன் தோளில் தூக்கி வைத்தார் பூசாரி மாமா.
அதிர் வேட்டுகள் முழங்க காவடி புறப்பாடு தொடங்கியது.
ஒரே நேரத்தில் உடுக்கை, பம்பை, நாதசுரம் மேளம், தப்பு எல்லாம் கலந்து ஒலித்தது.

நாதசுரம் வாசிப்பவர் காவடிச் சிந்து வாசித்து விட்டு, வேறு வாசிக்க ஆரம்பித்தார். சேகர் மீது வந்திருந்த அம்மனுக்கு கோபம் வந்து விட்டது. நேரே நாதசுரக்காரரிடம் போய் காவடி சிந்துவுக்கான நடன அசைவைப் போல் ஆடிக் காட்டி, அதை வாசிக்கச் சொல்லியது. அவரும் மாற்றிக்கொண்டு காவடிச்சிந்து வாசித்தார். முடிந்ததும் வேறு வாசிக்க முற்பட்டபோது மீண்டும் முன் போலவே காவடிச்சிந்து வாசிக்க கட்டாயப் படுத்தியது. மொத்த ஊர்வலத்திலும் வெறும் காவடிச்சிந்துவே திரும்பத்திரும்ப வாசிக்க வேண்டியதாயிற்று. நாதசுரம், தவில் காரர்கள் நொந்து போனார்கள்.
இந்த ஊர்வலம் வரும்போது ஒவ்வொரு வீட்டின் முன்னும் கோலம் போட்டு வைத்திருக்கும் இடத்துக்கு வந்ததும் அந்த வீட்டு பெண்கள் கரகம் எடுத்து வருபவர் காலில் தண்ணீர் ஊற்றுவார்கள்.
பூசாரிமாமா வீட்டின் எதிரே வந்த போது ரமா கரகத்துக்கு காலில் தண்ணீர் ஊற்றுவற்கு பதில் சேகர் காலில் ஊற்றி கும்பிட்டு விட்டுப் போனாள். இதைப் பார்த்ததும் பூசாரிமாமாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
சேகர் வீட்டின் எதிரே மட்டும் காவடி ஒரு மணி நேரம் நின்று ஆடியது. எனக்கு சேகரின் திட்டம் புரிந்து விட்டது. 
‘என்னையா சாமி வராததற்கு குற்றம் சொன்னீங்க; உங்கள என்ன பாடு படுத்தப்போறேன் பாருங்க’
என்று அவன் திருவிளையாடலை ஆரம்பித்து விட்டான். இது எங்க போய் முடியுமோ.

கரகம், காவடிகள் எல்லாம் கோயில் வாயில் வந்து சேர்ந்துவிட்டன. முதலில் கரகம் இறக்கி வைக்கப் பட்டது. பின் ஒவ்வொரு காவடியாக இறக்கி வைத்தார்கள். சேகர் காவடி கோயில் எதிரே மும்முரமாக அதே காவடிச் சிந்து வாசிப்புக்கு ஆடிக்கொண்டிருந்தது. நேரம் ஒடிக் கொண்டிருந்ததே யொழிய காவடி இறக்கவோ சாமி மலையேறவோ இல்லை.
சாமி வரவழைக்க பாடுபட்டதைவிட இப்போது மலையேற வைக்க அதிகம் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஒன்றும் பலிக்க வில்லை.
மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மணலூர் மாரியம்மன் கோயில் உள்ளது. அதுவும் மெயின் ரோடில்தான் உள்ளது. அங்கு நிற்கும் பேருந்துகள் உள்ளேயே ஏறிப் போய் உண்டியல் குலுக்குவார்கள். அவ்வளவு செல்வாக்கும் சக்தியும் உள்ளதாம். சுற்று வட்டாரத்தில் அதுவே அதிக பிரசித்தி. அங்கு போவதற்கு நாட்டாமைக்காரர் கார் டிரைவரைத் தேடினார். அவர் அந்த கூட்டத்தில் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. நான் கார் ஓட்ட சம்மதித்தேன். காரை எடுத்துக் கொண்டு அவசரமாக மணலூர் கிளம்பினோம். மணலூர் மாரியம்மன் கோயில் பூசாரியிடம் சாமி மலையேற வைக்க வரவேண்டும் என்று கூப்பிட்டார். அவர்கள் உடுக்கை பம்பை சகிதமாக அருகில் உள்ள புதூர் அம்மன் கோயிலுக்கு இரவு பூசைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். மறுத்தவர்களை எப்படியோ தாஜா செய்து கூட்டிவந்து விட்டார்.

மேலூர் மேட்டுத்தெருவில் இன்னமும் அம்மன் சேகரிடமிருந்து மலையேறவில்லை.
ஏற்கனவே கோழிமுட்டைக்கண் போலிருக்கும் சேகரின் கண் இப்போது சிவந்து பெரிதாகி ஈமு கோழி முட்டைக்கண் மாதிரி ஆகிவிட்டிருந்தது.
மணலூர் பூசாரி கோஷ்டி சுறசுறுப்பாக இறங்கி அடித்தது. அப்படியும் அம்மன் அசைந்து கொடுக்க வில்லை. ஆக்ரோஷமாக உடுக்கை அடித்ததில் உடுக்கைதான் கிழிந்தது.  பிரசித்திபெற்ற மணலூர் பூசாரியாலேயே ஒன்றும் செய்யமுடிய வில்லை. எல்லாரும் அம்மனின் சக்தியை பற்றி பெருமையாகப் பேசினார்கள்,
” அம்மா உடுக்கையெல்லாம் கிழிச்சி புட்டாள்ள”
சேகரின் காதோரம் நெருங்கி,
” இப்ப எப்படி முடிக்கப போற” எனக் கேட்டதற்கு
” பசி, சோர்வுல ஒன்னும் புரியல” என்றான்.
கோயிலின் எதிரே தார்ச்சாலையில் சேகரின் காவடி சிந்து ஆட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. பொதுப் போக்குவரத்தை தடுத்து வைத்திருந்தது. இரண்டு பக்கமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார், பேருந்து, மாட்டு வண்டி, கரும்பு ஏற்றிய டிராக்டர் என வரிசை கட்டி நின்றது.
நாட்டாமைக்காரர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தார்.

முன்பு 
‘சேகர் மீது ஏதோ குத்தம் , அதான் சாமி அவன் மேல் இறங்க வில்லை’ என்று பேசிய மக்கள் இப்போது மாற்றி பேசத் தொடங்கி விட்டார்கள். 

‘கோயிலில் ஏதோ குத்தம் நடந்திருக்கு , அதான் அம்பாள் கோயிலில் நுழையவும் மலையேறவும் மறுக்கிறாள்’ என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். இதைக் கேட்ட நாட்டாமைக்காரர் கொதிக்க ஆரம்பித்து விட்டார். பூசாரி மாமா விடம் ‘காச்மூச்’ என்று சத்தம் போட்டார்.

“கோயிலில் ஏதோ தெய்வகுத்தம் நேர்ந்திருக்கு. இதுக்கு நீங்கதான் பொறுப்பு. என்ன செய்வீங்களோ தெரியாது; அம்மனை சாந்தப்படுத்தி மலையேற வைக்கறது ஒங்க வேலை”

பூசாரிமாமா ஆடிக் கொண்டிருக்கும் சேகரிடம் வந்து,

“அம்மா தாயே ஒன்னோட கொழந்தைங்க என்ன குத்தம் பண்ணியிருந்தாலும் நீதானம்மா மன்னிச்சு அருள் பாலிக்கனும். உன்னோட பிள்ளைங்க எல்லாம் கலங்கி நிக்கலாமா தாயே”  என்று கோரிக்கை வைத்தார்.
அம்மன் சேகர் அதை சட்டை செய்யவே இல்லை.
பூசாரிமாமாவின் மனைவியும் ரமாவும் கூட சேகர் அம்மனிடம் வந்து அழுது வேண்டிக் கொண்டார்கள். ஊகும்.. அம்மன் அசைந்து கொடுக்கவேயில்லை.

இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவதென்று யோசித்தாலும் ஒன்றுமே பிடிபடவில்லை. பூசாரி மாமாவிடம் சென்று ஒரு யோசனை சொன்னேன். 
“மாமா நான் வேண்டுமானால் அம்மன் கூட சமரசம் பேசட்டுமா “
என்னை முறைத்துப் பார்த்தார். நமக்கேன் வம்பு என்று திரும்பிவிட்டேன்.

வாத்தியங்கள் எல்லாம் உச்சகதியில் முழங்க வேண்டி சேகர்அம்மன் ஆணையிடவே, அவை அலறிக் கொண்டிருந்தன. பக்கத்திலிருப்பவர் பேசுவதைக்கூட கேட்க முடியவில்லை. பெரிய உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்தது.
பூசாரிமாமா கோயில் சன்னதியில் சாமியின் முன்னே கற்பூரத்தட்டில் சூடம் ஏற்றி காட்டிவிட்டு நேரே சேகர்அம்மனிடம் வந்தார், காவடிக்கு சூடம் காட்டினார். கையில் திருநீறை அள்ளினார் சேகர் தலையில் கொஞ்சம் தூவிவிட்டு நேற்றியிலும் பூசினார்;

” அம்மா நீ என்ன சொன்னாலும் கட்டுப் படுறோம்; மலையேறு தாயே   …   ….   ……….” 

அவர் சொன்னது முழுதும் சரியாகக் கேட்கவில்லை.
சேகர்அம்மன் கண்களில் ஒரு நொடிப்பொழுதில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில் ஒரு மின்னல் வெட்டி மறைந்தது.
ஆடிக்கொண்டிருந்த சேகர் அப்படியே பின் பக்கமாக சரிவதுபோலத் தெரிந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் அப்படியே கைத்தாங்கலாக பிடித்து கோயில் மேலேற்றி சன்னதி முன் நிறுத்தி காவடியை வாங்கி வைத்தார்கள். சேகரை அப்படியே சாய்வாக அமர்த்தினார்கள். அவ்வளவுதான் சாமி மலையேறிவிட்டது.
தாளிக்காமல் வேறுமனே கறிவேப்பிலை மட்டும் போட்ட மோர் ஒரு சொம்பில் குடிக்கக் கொடுத்தார்கள்.

காவடி எடுக்கும் வைபவம் இனிதே முடிந்ததில் ஊர் மக்களுக்கு ரொம்ம மகிழ்ச்சி. அதிலும் ரமாவுக்குத்தான் பலமடங்கு மகிழ்ச்சி.
பூசைகள் எல்லாம் முடிந்ததால் ஸ்பீக்கர் செட்டில் பாட்டு போட ஆரம்பித்தார்கள்.
” மா…….மா , உன் பொண்ணக்கொடு , ஆ…….மா, அத சொல்லிக் கொடு” 
இந்த பாட்டு ஒலிக்கவே நாட்டாமை , 
” எவண்டா அவன் சினிமா பாட்டு போட்டது”
என்று கத்தினார்.

இரவு சாப்பிடும்போது சேகரிடம் கேட்டேன்,
” பூசாரிமாமா உன் காதில் சொன்னதில் கடைசி மூனு வார்த்தை மட்டும் புரியவில்லை டா “
சேகர் சொன்னான்,
” அதுவா …..அது …..வந்து ………
ஓ கே மாப்பிள்ளை 

Advertisement

3 thoughts on “ஓகே மாப்பிள்ளை

Add yours

    1. சாமி வரவில்லை என்றால் ஏதோ தெய்வகுத்தம் என்று கூறிவிடுவார்கள் என்பதாலேயே நிறைப்பேர் சாமியாடுகிறார்கள்.

      Like

  1. எங்கே நான் எழுதியதில்
    எங்கே நகைச்சுவை என்று கேட்கும்படி ஆகிவிடுமோ என பயந்திருந்தேன்; நல்ல வேளையாக தப்பித்தேன். நன்றி வேம்பு.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: