தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அநேக கோவில்களை எழுப்பி, அதன் வழி எண்ணற்ற அறப்பணிகளை ஆற்றி வந்தார்கள்.
கோயில்கள் தமிழருடைய கட்டடக்கலையின் பெருமையை பறைசாற்றுவதாக அமைந்தன. பிரசித்தி பெற்ற கோயில்களைத்தான் நாமறிவோம். அதிகம் பேசப்படாத கோயில்களின் கட்டடக் கலையின் சிறப்பை தமிழர் கட்டட விந்தை தொடரில் இயன்றவரை பகிர்ந்திட முனைகிறேன்.
1. தவளவெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர் திருக்கோவில், திருப்பாலைத்துறை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் என்ற ஊரின் கிழக்கே அமைந்துள்ளது திருப்பாலைத்துறை எனும் பகுதி.திருப்பாலைத்துறையில் தவளவெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர் திருக் கோவில் உள்ளது. இது தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நாண்கு யுகங்களுக்கு முன் தோன்றியதாக கூறினாலும் இக்கோயில் சோழர்காலக் கோயிலாகும். 12ஆம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன், ஆட்சிக்காலத்தில் விரிவு படுத்தப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
- அப்பர் சுவாமிகளின் 11 பாடல்களைப் பெற்ற தலம் ஆகும்.
- தேவாரத்தில் பாடப்பெற்றுள்ள காவிரிக்கரை சிவாலயங்களில் ஒன்று.
கிபி 1600-1634 காலக்கட்டதில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னன் இந்த கோயிலில் ஒரு நெற்களஞ்சியத்தை கட்டுவித்தான்.
கோயிலின் கிழக்கு வாயில் ராஜகோபுரத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது.
அதன் உயரம் 86 அடிகள்
அதன் அகலம் 36 அடிகள்
அடிப் பகுதி வட்ட வடிவ மாகவும், மேல போகப்போக கூம்பு வடிவமாகவும் குறுகிப் போகும்.
இதில் மூன்று வாயில்கள் அமையப் பெற்றுள்ளன. மேற்கில் அடிப்பகுதியில் ஒன்றுள்ளது. தெற்குப் பகுதியில் நடுவில் ஒன்றும், மேற்புறத்தில் ஒன்றும் உள்ளன.
இந்த களஞ்சியத்தில் 3000 கலம் அதாவது 1500 மூட்டைகள் நெல் கொட்டி வைக்கலாம்.
இந்த களஞ்சியம் செங்கல் மற்றும் சுண்ணாம்புக்காரை கொண்டு கட்டப்பட்டது. காலத்தை வென்று 400 ஆண்டுகளாக நிற்கிறது.
இதைப் போன்ற நெற்களஞ்சியம் வேறெங்கும் உள்ளதாகத் தெரியவில்லை. இருந்தால் தெரிவியுங்கள்.
2. ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்
கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் என்ற ஊரில் அமைந்துள்ள இக்கோயில் இரண்டாம் ராஜராஜ சோழனால் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இக்கோயில் உலகப் பாரம்பரியக் களங்களின் (World Heritage Site) பட்டியலில் அழியாத சோழர் பெருங்கோயில்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. யுனெசுக்கோ (UNESCO) அமைப்பால் உலக மரபுரிமைச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
கோவிலின் அமைப்பே குதிரைகள் இழுத்துச் செல்லும் தேர் போன்று இருக்கும். எண்ணற்ற நுட்பமான சிற்பங்களும் நிறைந்திருக்கும். பலப்பல விலங்குகளின் உருவங்கள் காணக்கிடைக்கும். இடப்பறமாகப் பார்த்தால் ஒரு விலங்கும், வலப்புறமாகப் பார்த்தால் வேறொரு விலங்கும் தெரியும்படி சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன.
அவை போலவே சிறப்பானது ‘சப்தஸ்வர படிகள்’ என்பதாகும். ஏழுசிறிய படிகள் இருக்கும். ஒரு சிறு கருங்கல்லைக் கொண்டு படிகளில் கீழிருந்து மேலாகத் தட்டிக் கொண்டே போனோல் ‘ச ரி க ம ப த நி’ என்று ஆரோகணத்திலும், படிகளில் மேலிருந்து கீழாக தட்டிக் கொண்டே வந்தல் அவரோகணத்திலும் ஒலிக்கும். சங்கீத ஒலியெழுப்பும் கற்களை தேர்ந்து இப்படிகளை அமைத்துள்ளார்கள். இதுவும் ஒரு கட்டடக்கலை விந்தையே.
Leave a Reply