ஒரே காதல் ஊரில் இல்லையடா

(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)


மெரினா கடற்கரை…. மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. மணற்பரப்பில் தன் உடலை கிடத்தி வானத்தை வெறித்த வண்ணம் இருந்தான் சங்கர். 

குடும்பம் குடும்பமாக வந்து எதற்குத்தான் இப்படி கும்பல் போடுகிறார்களோ தெரியவில்லை. சை…சப்தம் இல்லா கடற்கரையாக மெரினா எப்போது மாறுவது நான் நிம்மதியாக அமர்ந்து அலையை ரசிப்பது என்று சலித்துக்கொண்டான். 

தன் அருகில் நிழல் படிவதை கண்டு தலையை பக்கவாட்டில் திருப்பிப் பார்க்க மீண்டும் சுண்டல் விற்கும் பையன் வந்து நிற்பது தெரிய அவனை விரட்டி விட்டு எழுந்து அமர்ந்து கொண்டு கையில் உள்ள கடிகாரத்தில் நேரம் பார்த்தான். மணி மாலை ஐந்தாகிவிட்டது. மதியம் இரண்டு மணிக்கு வரேன் ன்னு சொன்ன காவியா இன்னும் வரலை. இனி இங்க இருந்தா சரி வராது… என்று மனதில் நினைத்து கொண்டு எழுந்து நின்றான். உடையெல்லாம் கடற்கரை மணல் அப்பிக்கிடக்க அதனை தட்டி விட்டுக்கொண்டான். 

தொலை தூரத்தில் காவியா வருவது தெரிந்தது… அது யார் கூட….ஆஜானுபாகுவாய்… 

(தொடருங்கள் நட்பூக்களே….. )

(மேலே உள்ளது ஒரு வலைக்குழுவில் தந்த தொடக்கம். இனி கதைக்குத் தலைப்பு தந்து நான் தொடர்ந்தேன். கதை பரிசு பெற்றது)

ஒரே காதல் ஊரில் இல்லையடா
காவியா உடன் வருவது யாராயிருக்கும் என்று தீவிரமாக யோசித்து பார்த்தாலும் ஊ..கும் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அவர்களும் நெருங்கி வந்து விட்டார்கள்.
“வா..காவியா”
“ஹாய் சங்கர்”
“வீட்ல அம்மா அப்பா தம்பி யெல்லாரும் சவுரியம்தான”
” உம்…சுகுணா எப்டி இருக்கா”
“அவளுக்கென்ன நல்ல சவுக்கியம். நான் தான் ஒங்கிட்ட ஒரு தகவல் கேட்டிருந்தேன்”
“அது விஷயமாத்தான வந்திருக்கேன். மொதல்ல லேட் ஆனதுக்கு சாரி. இவருக்காக வெயிட் பண்ணி கூட்டிக்கிட்டு வர லேட் ஆயிடுச்சு”
“சார் யாருன்னு சொல்லவேயில்ல”
” சார் பேரு பரத். என்னோட ஆபிஸ்தான். நீ கட்டாயம் சந்திக்க வேண்டியவர்”
” ஹலோ…ஐ..ஆம் சங்கர். “
“ஐ ஆம் பரத் . ஹேப்பி டு மீட் யு “
“மீ டூ பரத். காவியா அப்போ நாம அப்பறமா அத பேசலாமா”
” இப்ப என்னா..இப்பவே பேசலாம். நீ கேட்ட நபர் இவர்தான்”
” ஓ..அப்படியா. மிஸ்டர் பரத் நாம கொஞ்சம் பர்சனலா பேசப் போறோம். உங்களுக்கு ஓகே தான”
” காவியா முன்னமேயே சொன்னதுதான, அத கிளியர் பண்ணிடலாம்னுதான் நானே வந்தேன்”
“காவியா சொன்னது உங்களுக்கு ஓகே தான”
” இல்ல.. அது அப்படி இல்ல. என்னோட தேர்வு வேற”
“என்ன இப்படி சொல்றீங்க. இது உங்களுக்கு ஏன் பிடிக்கல”
” எனக்கு பிடிச்சது வேற”
அதற்குள் பரத் போன் அடிக்கவே எடுத்து பேசினான். “ஓகே.. சாந்தோம் நீல்கிரீஸ் தான இதோ ஒடனே வர்றேன்”
பரத் திரும்பி, “சாரி ஒரு மிக முக்கிய கால். அரை மணி நேரத்துல வந்திடுறேன்” என்று சங்கரிடமும் காவியாவிடமும் சொல்லிவிட்டு டூ வீலர் பார்கிங் நோக்கி நடந்தான்.
சங்கரின் போன் ஒலித்தது, சுகுணா. 
” சொல்லு சுகுணா”
“அண்ணா எங்கிருக்க”
” பீச்ல, மாநிலக் கல்லூரிக்கு நேர் எதிர்ல மணல்ல உட்கார்ந்திருக்கேன்.” 
அண்ணா ஒரு அரை மணி நேரம் காத்திருக்க முடியுமா, நான் அங்க வந்திடுறேன்.”
” எனக்கொன்னும் அவசரம் இல்ல. இங்கேயே இருக்கேன் நீ வா சுகுணா”
சங்கர் காவியா பக்கம் திரும்பி,
“என்ன காவியா பரத் பதில் இப்படி இருக்கு. இதில சுகுணா வேற இப்ப இங்க வர்ராளாம்”
“சங்கர், ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருப்பம்னு இருக்குமில்ல”
“நான் இப்படி ஒரு பதில பரத் கிட்ட எதிர் பார்க்கல”
“அதனால என்ன, நீ என் கிட்ட விசாரிக்க சொன்னது சுகுணாவுக்கு தெரியாதுல்ல, அப்படியே இருக்கட்டும். அவளே டீல் பண்ணிக்கட்டும்”
” ஒரு அண்ணனா சுகுணா ஆசைப்படுற பையனை சம்மதிக்க வைச்சு கல்யாணம் செய்ஞ்சு குடுக்க வேணாமா”
” வேணும்தான். ஆனா அவன் விருப்பம் வேற மாதிரி இருக்கே”
” அது யாரு. ஒனக்கு தெரியுமா”
“சுகுணா ஒன்ன விரும்புறா. அவ அண்ணன் ஒங்கிட்ட ஒன்னோட சம்மதத்த கேடக்கச் சொன்னான்னு சொன்னேன். அதுக்கு அவன் வேற பெண்ணை விரும்பறதா சொன்னான். யாருன்னுல்லாம் நான் கேட்டுக்கல. ஆனா இத வளரவிடாம முடிச்சிடனும், நான் நேர்லயே வந்து சொல்லிடறேன்னு வந்தான்; அதுதான் லேட்டாயிடுச்சு”
“இத சுகுணா எப்படி எடுத்துக்குவாளோ”
” உன்கிட்ட நேரடியா, அண்ணா பரத்தை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லாத வரைக்கும் ஒனக்கு பொறுப்பில்ல. பேசாம இரு. அவளே ஃபேஸ் பண்ணிக்குவா”

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது எதிரில் சர்விஸ் ரோடில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து சுகுணாவும் அவள் தோழி ஒருத்தியும் இறங்கி வந்தார்கள். சுகுணாவோடு தோழியையும் சேர்த்துப் பார்த்ததில் காவியாவின் முகம் இருண்டு போனது. நெருங்கி வந்ததும் சுகுணா, 
” ஹாய்” 
என்று காவியாவிடம் கை நீட்டினாள். காவியாவும் பதில் சொல்லி கை குலுக்கினாள். அண்ணனுக்கு எதிரே தங்கையும் தோழியும் உட்கார்ந்தார்கள்.

“அண்ணா இது சுமதி, உன்னோட ஃபேன்”
“ஆகா ரொம்ப மகிழ்ச்சி”
“உன்னப் பார்க்கனும், நானும் வரேன்னா அதான் கூட்டியாந்தேன்”
” என்னோட கதைகள்லாம் படிப்பீங்களா”
“ஒன்னு விடாம “
“மீண்டும் மகிழ்ச்சி”
இந்த உரையாடல் காவியாவுக்கு வேம்பாகக் கசந்தது.

“இந்த பீச் வரவர எனக்கு பிடிக்கவே மாட்டேங்குது” ..சங்கர்.
“ஏனாம்”..சுமதி.
” இங்க அமைதியே போயிடுச்சு. ஒரே சந்தைக்கடை இறைச்சல்”
” வெகு ஜன புழக்கம் உள்ள இடம் இப்படித்தான் இருக்கும். இங்க உங்களுக்கு நிறைய கதைக்கான மாந்தர்கள் கிடைப்பார்களே”

இவள் கொஞ்சம் விவரம் அறிந்தவள்தான், சங்கர் உள்ளூர எண்ணமிட்டான்.

“இருந்தாலும் தனிமையில சிந்திக்க இது ஏற்ற இடமில்ல” ..காவியா.

சுமதியை எப்படியாவது தட்டி வைக்க வேண்டும்.
சுமதி சங்கரிடம் நிறைய பேசினாள். அவனோடு பேசுவது அவளுக்கு ஆனந்தமாயிருந்தது.

“சரி அண்ணா நாங்கள் கிளம்புகிறோம். நீயும் வாரியா காவியா” சுகுணா ஒப்புக்கு கேட்டு வைத்தாள்.
“நீங்கள் கிளம்புங்கள், ஒரு நபர் வரக் காத்திருக்கிறோம்”.. காவியா.
அவர்கள் போனதும்,
“நல்ல இலக்கிய ரசனை சுமதிகிட்ட இருக்கில்ல”.. சங்கர்
“இருக்கு..இருக்கு..”.. காவியா.
சற்று நேரம் அமைதி. தொலைவில் இருந்து பந்து ஒன்றை எத்திக் கொண்டே இரண்டு வாண்டுகள் ஓடி வந்தன. அடக்கமாட்டாதவளாக காவியாவும் எழுந்து போய் அதில் கலந்து கொண்டாள். அவளுடைய மனநிலைக்கு அப்படி ஒரு வடிகால் தேவைப்பட்டது.

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக பரத் திரும்பி வந்தான். வந்ததும் மரியாதைக்காக ‘சாரி’ கேட்டுக் கொண்டான்.
” சங்கர், நான் இதுவரை சுகுணாவை எந்த மாதிரியும் கற்பனை கூட செஞ்சு பார்த்ததில்லை. உண்மையில நான் ஒரு பெண்ணை விரும்புறேன். இன்னமும் அதை வெளிப் படுத்தக் கூட இல்ல. எப்படி சொல்றது எனத் தெரியவில்ல. நீங்கள்தான் கதாசிரிய ராயிற்றே எனக்கு கொஞ்சம் வழிகாட்டுங்களேன்.”..பரத்.
“போயும் போயும் நல்ல ஆள் பார்த்து கேட்டாய். இவங்களுக்கெல்லாம் எழுதத்தான் வரும். பேசவும் செயலில் காட்டவும் வராது”.. காவியா

“நீண்ட நாள் பழக்கம் உள்ள பெண் என்றால் சட்டென்று விருப்பத்தை வெளியிட முடியாது; அப்பெண் ரொம்பவும் பழக்கமோ”..சங்கர்..

” ஆமாம்…சுமதின்னு பேர். சுகுணாவுக்கெல்லாம் நல்ல பழக்கம்”..பரத்.

காவியாவின் கண்களில் மின்னல் ஒன்று வெட்டியது.
மணி ஏழரையாகி விட்டது.
“கிளம்பலாமா”
என பரத் கேட்டதற்கு , 
” நீ போ. நான் சங்கர் கூட போய்க்கறேன்” 
என்று காவியா கூறிவிட்டாள்.
காவியாவுக்கு சங்கர் கூட தனிமையில் பேச வேண்டும்.
” கதைகளில் கற்பனை மனிதர்களின் மனோதத்துவம் அவ்வளவு பேசுறாயே, நிஜ மனிதர்களின் மனோதத்துவம் உனக்குத் தெரியாதா”..காவியா.
“நீ கொஞ்சம் தெளிவா பேசு காவியா”..சங்கர்.
“உன்னோட கதைகள்ள வருகிற கற்பனைப் பெண்ணோட கண் அதப் பேசிச்சு, மூக்கு இதப் பேசிச்சு அப்படின்னு எழுதரியே, நிஜத்தில உள்ள பெண்ணோட கண் பேசுறது உனக்கு தெரியாதா”..காவியா.

“ஏன் தெரியாம.. நல்லா தெரியும்”

“என்னோட கண் என்ன பேசுது”

“ஒரே குறும்புக்கார கண்கள்”

“வேற ஒன்னும் பேசலியா”

“கண்டுபிடிச்சா சொல்றேன்”

“போய்யா நீயும்.. உன் கண்டு பிடிப்பும். நீங்களெல்லாம் கற்பனை வாதிகள். யதார்த்த்தை கண்டுக்கவே மாட்டீங்க. வெக்கத்த விட்டே கேக்கறேன், உன் மேல எனக்கு கொள்ளை ஆசைன்னு தெரியலையா. நானும் அத ஜாடை மாடையா காட்டிக்கலையா. உனக்குப் புரியலையா இல்லை ஒதுங்கறியா” 
பேசும் போதே காவியாவின் குரல் கம்மத் தொடங்கியது. பொலபொல வென்று கண்ணீர் கொட்டியது. 
சங்கர் நிலைமை சங்கடமானது. என்ன பேசுவது என்று தோன்றாமல் மாநிலக் கல்லூரியின் மணிக்கூண்டையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்,
” காவியா, உண்மை இதுதான். சிறுவயது முதலே நாம் பழகி வந்திருப்பதால் உன்னை மற்றவர் போல் என்னால் புதிதாக, வித்யாசமான பார்வை பார்க்க முடியாது.”
“இவரு பெரிய ஞானி”

” காவியா, சுகுணாவை எப்படிப் பார்க்கிறனோ அப்படித்தான் உன்னையும் பார்க்கிறேன். இன்னும் கேள். நான் நிறைய இடங்களுக்குப் பயணம் செல்ல வேண்டும்;நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும்;நிறைய அனுபவங்களைப் பெற வேண்டு்ம்; பார்த்ததையும் கேட்டதையும் எழுத்தில் வடிக்க வேண்டும். அதற்கு நான் சுதந்திரமானவனாக இருக்க வேண்டும். காதல் கல்யாணம் இதற்கெல்லாம் என் வாழ்க்கையில் இடமில்ல. சுகுணா கல்யாணத்துக்காக காத்திருக்கிறேன்.”
ஒரு பெரிய சொற் பொழிவே ஆற்றிவிட்டான் சங்கர்.

எழுந்து மணலைத் தட்டிவிட்டுக் கொண்டாள் காவியா. 
அது போல மனதில் ஒட்டியிருந்த ஆசையையும் தட்டி விட்டு விட்டாள்

அவள்.
“சரி வா போகலாம்” ..காவியா.
எதுவும் பேசாமல் ஸ்கூட்டரை நோக்கி சங்கர் நடந்தான்.

“நேரே உன் வீட்டுக்குபோ”..காவியா.

வீட்டுக்கு வந்தால் அங்கே சுகுணாவும் சுமதியும் லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
தொலைக் காட்சியில் வசூல் ராஜா எம் பி பி எஸ் திரைப்படம். அதில் ஆள்வார் பேட்டை ஆளுடா ; 
அறிவுரையைக் கேளுடா பாடல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
‘ஒரே காதல் உலகில் இல்லையடா’ கவிஞர் என்னமா எழுதியிருக்கிறார், காதல் தோல்வியால் மனமொடிந்து விடாதே என்று. இளைஞர்களும்
மனமொடிந்திடாமல் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

உள்ளே வந்த காவியா தன் கைப்பையில் இருந்து ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்தாள். அது ஒரு தமிழகராதி. எழுத்தாளனுக்கு பயன்படும்.
“இந்தா சங்கர், கற்பனை மனிதர்களைப் படிக்கும் எழுத்தாளனுக்கு என் அன்பளிப்பு”
சங்கர் ‘நன்றி’ சொல்லி வாங்கிக் கொண்டான்.

பரத் ஆசையை சுமதியிடம் கூறிவிடலாமா என்று நினைத்தான். பிறகு எண்ணத்தை மாற்றிக் கொண்டான். பரத் எண்ணத்தை வெளிப்படுத்தும் போது சுமதியே அதை சமாளித்துக் கொள்வாள்.

அதே போல சுகுணாவிடமும் எதுவும் சொல்லக் கூடாது.
உண்மை தெரிந்ததும் அவளே சூழ்நிலைக்கேற்ப முடிவை மாற்றிக் கொள்ளும் பக்குவமுடையள்தான்.

இதோ இப்போது காவியா எப்படி உடனே மனதை மாற்றிக் கொண்டுவிட்டளோ அப்படித்தான் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையை தொலைத்து விட்டு வாடி நிற்பதைத் தவிர வேற வழியில்லை.

மனதைப் பறி கொடுப்பதும், கொடுத்த மனதை திரும்ப பறித்துக் கொள்வதும் வாடிக்கை.

இப்போ தெல்லாம் வாய்ப்புகள் அபரிமிதமாக கொட்டிக் கிடக்கும் போது ஏன் ஓரிடத்தில் முடங்கவேண்டும் என்று நிறைய பேர் எண்ணுகிறார்கள். 

நிறையப் படிப்பதால் பெற்ற அறிவால் சுமதி போல எதனாலும் கவரப்படாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

காதலும் முறிதலும் நாண்கைந்தாவது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கும் போல.
இளையோர்கள் எல்லாரும் இந்த விஷயத்தில் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள்.

பாடலில் இப்போது ஒலித்தது:
‘காதல் ஒரு கடல் மாரிடா
இத மறந்துட்டு
டம்ளருக்குள் நீச்சல் ஏனடா’

Advertisement

2 thoughts on “ஒரே காதல் ஊரில் இல்லையடா

Add yours

  1. காதல் வெற்றியடைந்து கல்யாணத்தில் முடிவது அல்லது தோல்வி அடைந்து தற்கொலையில் முடிவது போன்ற கதைகளுக் கிடையில் ஒரு தலைக் காதலை எதார்த்தத் துடன் முடித்திருப்பது வித்தியாசமானது.
    வாழ்த்துக்கள்.

    Liked by 1 person

    1. இதுவுமன்றி இப்போதெல்லாம் முதல் பிரேக் அப் இண்டாவது இரண்டாவது பிரேக் அப்
      என்கிற பதம் சர்வ சாதாரணமாக புழங்குகின்றன. இது இந்த தலைமுறையின் வளர்ச்சி. தோல்வியால் துவண்டு விடாத விடா முயற்சி.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: