வேப்பமர காற்று இதமாக வீச…. மூங்கில் தட்டியை தள்ளிக்கொண்டு மரகதம் வீட்டு நடை வாசலில் நின்றேன்.
எத்தனை வருடங்கள் ஆனால் என்ன…? சொன்ன சொல் காற்றில் போகாதே! அது இதயத்தை பதம் பார்த்து கொண்டே தான் இருக்கும். தெரிந்தே தான் உள் நுழைகிறேன். அங்கே மணிக்கோழி ஒன்று இரை தின்று கொண்டிருக்க…. தூணில் கட்டியிருந்த குட்டி நாய் என்னை பார்த்து குறைக்க ஆரம்பித்தது. நாயின் சப்தம் கேட்டு அந்த கூரை வீட்டு தட்டிக் கதவு திறக்க…. அங்கே மெலிந்த தேகத்தோடு ஒரு சிறுமி எட்டிப்பார்த்தாள்.
யாரது….என்று மெல்லிய குரலில் கேட்க…
வீட்டில்… யாரும் இல்லையா கண்ணு?… என்றேன் நான்.
சிறு வயது மரகதம் போலவே இருக்கிறாள் இச்சிறுமி. நிச்சயம் இவள் மரகதத்தின் பெண்ணாகத்தான் இருப்பாள்.
மரகதம் ஒரு பிடிவாதக்காரி. தான் நினைத்ததை சாதித்துக் கொள்ளவேண்டும் என்ற பிடிவாதம் நிறைந்தவள். விளையாட்டுப் பொம்மைகள், ஆடைகள், திண்பண்டங்கள் எதுவானாலும் அவள் விருப்பம்தான்.
என் வயதுக்காரிதான்; என்னோடு வகுப்பில் ஒன்றாகத்தான் படித்தாள்.
படிப்பில் படு சுட்டி; ஒருமுறை கூட முதல் இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை.
இவள் மரகதத்தின் மகள்தான் என்று கண்டு கொண்டதால்,
” பாப்பா, மரகதம் இருக்கா ”
என்று கேட்டேன்.
என்னை ஊன்றிப்பார்த்த சிறு பெண்ணானவள், திரும்பி ஏதும் சொல்லாமல் உள்ளே சென்றாள். வீட்டின் புழக்கடையில் வேலையாக இருந்த அம்மாவிடம்,
” யாரோ உன்னைக் கேட்டு வந்திருக்கங்க”
என்று சொல்லி அழைத்து வந்தாள்.
தெருப்பக்கம் வந்த மரகதம் என்னைப் பார்த்ததும் சிலையாகி நின்று விட்டாள். என்னை,”வா” என்கிறதா , இல்லை ” ஏன் வந்தாய்”என்று கேட்கிறதா என தடுமாறி நின்றது புரிந்தது.” என்ன மரகதம் சௌக்கியமா “நானே இறுக்கத்தை உடைத்தேன்.” ………”” பழசையெல்லாம் மறந்திட்டுத்தான் வந்திருக்கேன்”இது அவளுக்கு கொஞ்சம் பேச இடம் கொடுத்தது.” இப்போதுதான் ஒனக்கு வழி தெரிஞ்சுதா பாமா” அவள் கைகளை முந்தானையில் துடைத்துக் கொண்டே கேட்டாள்.”இப்பவாவது தெரிஞ்சுதேன்னு நெனைச்சுக்கோ. நீ பேசின பேச்சுக்கு உன் பக்கம் திரும்பக் கூடாதுன்னுதான் இருந்தேன்”
அவள் இழுத்துப் போட்ட நாற்காலியில் உட்கார்ந்தேன்.” உன் பெண்ணுக்கு என்ன பேர். எந்த கிளாஸ் படிக்கிறா”” இவள் பேரு பாமா; இரண்டாம் வகுப்பு படிக்கிறா”எங்கள் ஆழமான நட்பின் காரணமாக என் பெயரையே வைத்திருக்கிறாள்.
நட்பாக இருந்த வரையில் உரிமையாக இருந்தது , உறவென்று ஆன பின் பகையாக மாறிவிட்டது.
பார்க்கவும் பேசவும் இல்லாமலே ஒன்பதாண்டுகள் ஓடிவிட்டன.
இப்போதும் வந்திருக்க மாட்டேன், கேள்விப்பட்டவைகள் என்னை கட்டாயமாக வரவைத்து விட்டது. இந்த மரகதத்தின் ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும்.
மரகதமும் நானும் இரட்டை நாதஸ்வரம் போல் ஒன்றாகத்தான் திரிவோம். அவளுடைய பிடிவாத குணத்துக்கு யாருமே அவளிடம் நெருங்கிப் பழகமாட்டார்கள். பிறந்தது முதல் ஒன்றாகவே வளர்ந்து வந்ததால் அவளுக்காக நிறைய விட்டுக் கொடுத்திருக்கிறேன். அதனால் எங்கள் நட்பு உடையாமல் நீடித்தது.
“மாமா, எப்ப வரும் மரகதம் “”…………..”பதில் சொல்லாமல் தரையில் உட்கார்ந்தவள், மகளை தன் பக்கமாக இழுத்துக் கொண்டாள்.” சொல்லு மரகதம். உள்ளுர்தானா இல்லை வெளியூர் போயிருக்கா”” உள்ளுர்தான்””இப்ப சாப்பாட்டுக்கு வருமில்ல””வர்ரது நிச்சயம் இல்ல””என்னா இப்படி சொல்ற””ஆமாம் அது வீடடுக்கு வந்தே ஒரு மாச மாவுது”எனக்கு உண்மை தெரியும். அதனால்தான் வந்திருக்கேன்.
நாங்கள் ஒன்னா படிக்கும் போது மரகதம் என் தாய் மாமாவிடம் காதலாகிவிட்டாள். எனக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. மரகதம் இல்லாமல் வேற யாராவதாக இருந்திருந்தால் நான் பொங்கி யிருப்பேனோ என்னவோ.
இது பெரிய பிரச்சினையாகி விட்டது. என் அம்மா என் மாமாவிடம் பெரிய சண்டையே போட்டு விட்டது. அதுவும் போதாமல் மரகதம் வீட்லயும் போய் பெரிய ரகளை செய்து விட்டது.
கடைசியில் மாமாவுக்கும் மரகதத்துக்கும் கல்யாணம் நடந்து முடிந்தது.
என் அம்மா தன்னோட பிறந்த வீட்டு உறவை அடியோட முறித்தக் கொண்டது. ஒம்பது வருடங்கள் ஒரே ஊரிலிருந்தாலும் ஒட்டோ உறவோ இல்லை, பார்ப்பதுமில்லை , பேசறதுமில்லை. ஊரில் எங்காவது விசேடங்களில் எதிர்ப்பட்டால் கூட தலையை திருப்பிக்கிட்டு போய்டுவாங்க.
மரகதத்தின் கல்யாணத்துக்கு முன் அவளை சந்தித்து,” டீ ..மரகதம் என் அம்மா பேசனதுக்கும் எனக்கும் சம்மந்தமில்ல, நீ வீணா என்ன தப்பா நெனைச்சுச்காத ” என்றேன்.
ஆனால் மரகதமோ,” நீ தூண்டிவிடாம தானா உன்னம்மா வந்து காளியாட்டம் ஆடிச்சு. எல்லாம் தெரியும் போடி. எங்கூட வந்து பேச ஒனக்கு கூசலியா; இந்த ஜென்மத்ல நாம இனிம நண்பர்களே கெடையாது. பரம எதிரிங்க; என் மூஞ்சியிலியே இனிமே முழிக்காதடி போடி”என்று என்னை தூக்கி எறிஞ்சி பேசிட்டா.
அதுக்கப்புறம் இப்பதான் பார்க்கிறேன். ஒம்பது வருடமாச்சு.
அவள் கல்யாணத்துக்கு நான் போகாதது மாதிரி என் கல்யாணத்துக்கு அவளும் வரல. அம்மா வீட்டுக்கு வர்ரப்பக்கூட அவள் கண்ணிலயே பட்டதில்லை.
என் மாமாவை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கொண்டவள் சந்தோஷமா வாழ்ந்தாளா என்பது கேள்விக்குறி தானாம். எல்லாரும் அதையே சொன்னார்கள்.
அவளுடைய இயல்புதான் அவளை படுத்தியது எனக் கூறலாம். இல்லாதவற்றக்கு ஆசைப்பட்டு இருப்பதை அனுபவிக்காதவள்.
ஒரு மாசத்துக்கு முன் ஊர்ப் பிரமுகர் கல்யாணம். அதற்கு மரகதம் வர மறுக்கவே மாமா மட்டும் வரவேற்புக்கு போயிருக்கிறார். போன இடத்தில செம்மையான குடி. அங்கேயே தூங்கிவிட்டு காலையில் வீடு வந்த மாமாவை உண்டு இல்லை என்றாக்கி யிருக்கிறாள்.
” உன் மூஞ்சிலேயே முழிக்கமாட்டேன்”னு
போன மாமா வீட்டுப்பக்கம் வரவேயில்லை,ஒரு மாசமாச்சு.
மறக்க முடியாத தோழிங்கறதால தான் நான் இப்ப மத்தியஸ்தம் பண்ண வந்திருக்கேன்.
” மரகதம் ,உன் பிடிவாதம் இந்த குந்தையை பாதிக்குங்கறது உனக்கு தெரியாதா?””………….” பதிலில்லை.” உன்னைப் போலவே உன் மகளும் பிடிவாதக்காரியா இருந்து முரண்டு பண்ண ஆரம்பிச்சா என்ன பண்ணுவே”” முதுகிலே நாலு சாத்துவேன்.”” அந்த காலத்திலே உன்னையும் அது மாதிரி சாத்திடாம விட்டுட்டாங்க “
இந்த நேரத்தில அவள் மகள் பாமா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
நான், “அடியே பாமா , என்னாச்சு? ஏன் அழுவுற.” என்று கேட்டாலும் பதில் சொல்லாமல் மேலும் தீவிரமாக அழ ஆரம்பித்தாள்.
ஒருவழியாக சமாதானம் பண்ணி கேட்டதில் அவள் அப்பா ஏக்கத்தில் பாதித்திருக்கிறாள் என தெரியவந்தது.
மரகதமோ செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு இருந்தாள்.
“பார், இதற்கு என்ன சொல்லப் போகிறாய்””அது குடிக்கலைன்னா நான் ஏன் சண்டை பிடிக்கப் போனேன்””இது நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கை. யாரையும் குத்தம் சொல்ல முடியாது. குடிச்சிட்டு தெனமும் தகராறு பன்னுதா, இல்லியே. நீதான் உன்னோட சாமர்த்தியத்தால திருத்தனும்””……………””நம்ம கூட ப்ஸ் டூ வரைக்கும் படிச்சாளே விஜி அவள வர்ர வழியில பார்த்தேன்”” அவ டாக்டருக்கு படிச்சிட்டு டாக்டாராயில்ல வேலை பார்க்குறா””ஆமாம். அவ சொன்ன சேதிய சொல்றேன் கேட்டுக்க. பெரியவங்க பார்த்து வச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட என்ன மாதிரியான வங்களுக்கு இல்லாத பிரச்சன ஒனக்கு உண்டாம். ஒன்ன மாதிரி சின்ன வயசிலயே காதல் கல்யாணம் செஞ்சுகிட்ட வங்களோட மனோதத்துவம் பத்தி சொன்னா. ஒங்களுக்கெல்லாம் முப்பது வயசுக்கு மேல ஆனதும் ஒரு மாதிரி ஏமாற்றம் சோர்வு வருமாம். அதனால குடும்பத்துல சண்ட சச்சரவு வருமாம். நீயும் இப்ப அந்த நெலமைலதானடி இருக்க. அதனால ஒன்னோட பிடிவாதத்த வுட்டுட்டு ராசியா போ”” நா.. என்ன சொல்ல வர்ரேன்னா.”” நீ ஒன்னும் சொல்ல வர வேணாம். நான் ஏற்கனவே மாமாவைப் பார்த்து பேசிட்டேன். புருசன் பொண்டாட்டி சண்டைல மூனாவது ஆள் வந்தாத்தான் பிரச்சினை பெரிசா ஆவும். நீங்களே ஒருத்தருக் கொருத்தர் பழைய சந்தோசமான நாள நெனைச்சு சமாதானமாய்க்கிங்க. அதுவும் இல்லையா இந்த குட்டிய நெனைச்சாவது ஒத்துப் போங்க””…………….””மரகதம் நான் கேள்விப்பட்டத சொல்றேன். நீ பதட்டப்படாம கேளு. எத்தனையோ தடவை நீ மாமா கிட்ட சண்டை போட்டிருக்க. மாசமெல்லம் பேசாம இருந்திருக்க. நான் உன் வீட்டுக்கு வரலைன்னாலும் எனக்கு அம்மா மூலமா எல்லா தகவலும் வந்துகிட்டுதான் இருந்திச்சி, நான்தான் தலையிடல. உங்க சண்டை இப்போ ஊரறிஞ்சதா போயிடுச்சி. இதுக்கும் மேலயும் சும்மா இருக்க கூடாதுன்னுதான் நான் வந்தேன்.””பாமா, நானென்ன பண்ணட்டும்.””மாமா நெதமும் குடிச்சிட்டு வந்து ஒன்ன அடிச்சி சண்டை போட்டா நீ என்ன செய்வ”” போய்யான்னு சொல்லிட்டு அம்மா வீட்டுக்கு போய்டுவேன்””அத மாதிரி நீ அடிக்கடி சண்டை போட்டபடி இருந்தா மாமா என்னா முடிவு பண்ணும்””…………………””ரொம்ப சிம்பிள். நீ போடின்னுட்டு எவ கூடவாவது வாழ ஆரம்பிச்சிடாதா. அப்பறம் ஊரைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கனுமா ?””…………….”” வாழாவெட்டியா வந்திருக்காளே ஒருத்தி, ஒனக்கும் தெரிஞ்சவதான, அவ அடிக்கடி மாமாவ வழி மறிச்சி பேசறாளாம், அம்மா சொல்லிச்சி. அத கேட்டப்புறம்தான் எனக்கு பகீர்ன்னு ஆயிடுச்சி. அதனாலதான் நான் ரோசத்த வுட்டுட்டு உன் வீடு தேடி வந்திருக்கேன். நீ வாழா வெட்டின்னு பேரெடுக்னுமா””………….””ஊருக்குள்ள பழைய வீட்ட இடிச்சிட்டு அவ்ளோ பெரிய வீடு யாருக்காக மாமா கட்டிக்கிட்டு இருக்கு. அதனாலதான இப்போ இங்க வந்து தோட்டத்து குடிசைல இருக்கீங்க”
மரகதம் விசும்பத் தொடங்கினாள்.தன் திட்டம் பலிக்கத் தொடங்குவதை பாமா கண்டு கொண்டாள்.
” இதோ பார் மரகதம், நீ போய் மாமா காலில் விழுந்து மாமா என்ன மன்னிச்சிடுன்னு கதற வேண்டாம். ஒரு வேளை அதுவாவே வந்தாலும் மூஞ்சியைக் காட்டாம ஒரு புன்சிரிப்பு போதும் . எல்லாம் சரியாயிடும்”
தொலைவில் கேட்ட புல்லட் மோட்டார் சைக்கிள் ஓசை வீட்டை நெருங்கி வந்தது.” ஐ.. அப்பா..”என்று சத்தத்தை வைத்தே பாமா வெளியே ஓடினாள்.
மாமா பாமாவைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தார்.”என்ன பாமா, ஊர்ல எல்லாரும் சவுரியமா” என்று என்னிடம் கேட்டவாறே பூவையும், பலகாரங்களையும் மரகதத்திடம் நீட்டினார்.” மாமா நான் வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சி, போய்ட்டு அப்பறம் வர்ரேன்”அவர் பதிலைக் கூட எதிர் நோக்காமல், மரகதத்தைப் பார்த்து தலையை ஆட்டிவிட்டு மூங்கில் தட்டியை நோக்கி நடந்தேன்.
நட்பின் ஆழம்…..பிரிவு….அக்கரை.,..சிறு தவறால் கணவன் மனைவி இடையே பிரிவு வந்தால் ஏற்படப்போகும் விளைவுகள் அனைத்தையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்…..
LikeLiked by 1 person
முற்றிலும் கற்பனையாக எழுதியது. முன்மாதிரி யாரும் இல்லை. கதையை விடவும் விமரிசனம் பலே.. மிக்க நன்றி.
LikeLike