பாரதக் கதை
கிராமிய விழாக்களின் வரிசையில் பாரதக் கதை பற்றிப் பார்ப்போம்.
என்னுடைய கிராமத்தின் கீழ்க்கோடியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு அப்பால் தெருவோ வீடுகளோ கிடையாது. ஒரே வயல் வெளிதான்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் காப்பு கட்டி கொடியேற்று வார்கள். காப்பு கட்டும் நேரத்தில் ஊரில் இருப்பவர்கள் யாரும் திருவிழாவின் கடைசி நாளான தீமிதி வரை ஊருக்கு வெளியே இரவு தங்கக் கூடாது. நாங்கள் காப்பு கட்டும் நாள் இரவு சினிமா இரண்டாவது காட்சி பார்க்கப் போய்விடுவோம். அதனால் எங்களுக்கு அவ்விதி பொருந்தாது.
கோயில் சன்னதிக்கு எதிரே உள்ள சிறு மேடையில் பாரதக்கதை படிப்பார்கள். பாரதக் கதை படிப்பவரை பாரதியார் என்பார்கள். அவருடன் பின் பாட்டு, பம்பை அடிப்பவர், ஜால்ரா என பெரிய குழுவே இருக்கும். வில்லுப்பாட்டு பாடுபவர்கள் வில் இல்லாமல் இருப்பது மாதிரி.
முப்பது நாட்களுக்கும் இரவு ஒன்பது மணிக்கு தொடங்கி அதிகாலை ஐந்து மணிவரை நடக்கும்.
பாரதம் பாடும் பாரதியார் பெண் போல நிறைய முடி வளர்த்து இருப்பார். அது நடிக்கப் பயன்படும்.
வில்லி பாரதத்தை முன்னால் வைத்துக் கொண்டு சில முக்கிய செய்யுள்களையும் படிப்பார், பாடுவார். அவர் சம்பவங்களையும், வசனங்களையும் சொல்லச் சொல்ல ஜால்ராகாரர் ஜால்ரா தட்டி “ஆமாம்” போட, பின் பாட்டுக்காரர் அதையே திரும்ப சொல்வார். பாடினால் இவரும் பாடுவார். பம்பை என்பதுதான் தாள வாத்தியம்.
கும்பல் கும்பலாக மக்கள் கோரைப்பாய், சாக்குப் பை (கோணிப் பை) சகிதம் வந்திடுவார்கள். திண்பன்டமாக முறுக்கு, கடலை மிட்டாய், வறுத்த சோளம், பயறு, பொரியரிசி, பட்டாணி, உப்புக்கடலை, நிலக்கடலை இன்னும் பல உண்டு. உட்கார்ந்திருப்பவர்கள் நேரம் செல்லச் செல்ல சாய்ந்து உட்கார்ந்து, சரிந்து படுத்து, தூங்கி விடுவார்கள். காலையில் யாராவது எழுப்பியதும் எழுந்து போவார்கள்.
சிறு பிள்ளைகளிடம் காசு கொடுத்து அனுப்புவார்கள். சிலர் கூஜாவில் காய்ச்சிய பால் கொடுத்து அனுப்புவார்கள். அதை வாங்கிக் கொண்டு பாரதியார் கொடுத்தவர் பெயரைச் சொல்லி வாழ்த்துப்பா பாடுவார்.
சில காட்சிகளை வேடமிட்டு நடித்துக் காட்டுவார்.குறவஞ்சி, கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம், பகடைத் துகில், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, அபிமன்யு சண்டை, கர்ண மோட்சம், துரியோதனன் படுகளம் அல்லி அரசவைக் காட்சி, பாம்பாட்டி, நந்தவனத்தில் பூ பறிப்பது, போன்றவை மேடையின்றி வெளியில் நடிக்கப்படும். சபதம் செய்து அவிழ்த்து விட்ட முடியை திரௌபதி, சபதத்தை நிறைவேற்றி மீண்டும் முடியும் காட்சியை பார்க்க கூட்டம் அலைமோதும்.
கோவிலுக்கு எதிரே வயலில் தீக்குழி இருக்கும்.(சென்னை சுற்று வட்டாரத்தில் தீ மேடை). ஓரடி ஆழம், பத்தடி அகலம்,இருபத்தைந்தடி நீளம் இருக்கும். அதனோடு ஒட்டியே பால் குழி வைக்கோல் போட்டு பாலும் நீரும் இட்டு நிரப்பி இருப்பார்கள். தீக்குழி தாண்டியதும் இதில் காலை நனைத்து வரவேண்டும். காலையில் பூசை போட்டு தீ மூட்டுவார்கள். மக்கள் வேண்டுதல் நிறை வேற்ற பெரிய பெரிய மரங்களை கொண்டு வந்து போடுவார்கள். மாலை தீ மிதிக்கும்முன் சரியாக எரியாத மரங்களை யெல்லாம் அப்புறப் படுத்தி விடுவார்கள். தவறிப்போய் கூட மண் கட்டிகள் எதுவும் தீக்குழிக்குள் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். தீ பரப்பி விடுவார்கள். பட்டறையில் வைத்து அலங்கரிக்கப் பட்ட சாமியை தூக்கி மூன்று முறை தீக்குழியை சுற்றி வருவார்கள். பூசாரியைத் தொடர்ந்து சக்தி கரகம் மற்ற காப்பு கட்டிய மக்கள் தீக்குழி இறங்குவார்கள்.
தீமிதி முடிந்த மூன்றாம் நாள் மஞ்சள் நீர் ஊற்றுவது. அதுதான் பாண்டவர்கள் சாந்தமடைவது. ஊரே ஆண் பெண் வித்தியாச மின்றி ஒருவர் மீது மற்றவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள்.
மீண்டும் அடுத்த ஆண்டு இது தொடரும்.
Leave a Reply