தோல் பூக்கள்

ஞாயிறு மாலை மணி ஐந்து ஆகிவிட்டது. எதிரே உள்ள ரெட்டியார் பங்களாவில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் மொண்டு, நன்றாக சோப்பு போட்டு முகம் கை கால் கழுவி பளபளப்பாகி வந்தான் ராஜா. காலை முதல் போட்டிருந்த சட்டையை கழற்றி விட்டு நல்லதாக ஒரு டி சர்ட் போட்டுக் கொண்டான். பேன்ட் மட்டும் அதே ஜீன்ஸ்தான்.

பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் ரோடில் நகராட்சி வழங்கிய பங்க் கடை. ஆறு மணிக்கு வரக்கூடிய ஒரு முக்கிய நபரை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருந்தான்.

அவள் வந்தால் உட்கார வைக்க நாற்காலியை துடைத்து வைத்தான். எப்படியாவது தைரியத்தை வரவழைத்து சொல்லிவிட வேண்டியதுதான்.

ராஜாவின் அப்பா கொண்டய்யா செருப்பு தைக்கும் தொழிலை பம்மல் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகில் செய்து வந்தார். அவர் கடை உடைமைகள் எல்லாம் பேருந்து நிழற் குடையில்தான் இருக்கும்.
எந்த நேரமும் வாயில் பீடி எறிந்தோ எறியாமலோ இருக்கும். பீடியின் புகையிலை வாய் எச்சிலில் ஊற ஊற சிலசமயம் துப்புவார்; சில சமயம் முழுங்கி விடுவார். புகையாத பீடியும் போதை தரும் போலும்.

ராஜா பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் கிண்டியில் புட்வேர் டிரெயினிங் இன்ஸ்டிடியூடில் சேர்ந்து படித்தான்.
இரவெல்லாம் இருமி இருமி கொண்டய்யா போய்ச் சேர்ந்தார். ராஜாவின் அம்மா காட்டம்மா அதே இடத்தில் உட்கார்ந்து செருப்பு தைக்க தொடங்கினாள். மாலை வேளையிலும் விடுமுறை நாட்களிலும் ராஜாவும் பங்கெடுத்துக் கொள்வான். மிகவும் முயற்சித்து இந்த பங்க் கடையைப் பிடித்தார்கள்.

இரண்டு வாரம் முன்னர் ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு ஒரு இளம் பெண் அவன் கடைக்கு வந்தாள். அறுந்து போன செருப்பை கொடுத்தாள்.

“இது தைக்க எவ்வளவு”
“இருபது ரூபாய்கள் மேடம்”
“சரி”
“ஒரு பத்து நிமிடம் இந்த நாற்காலியில் உட்காரந்திருங்கள்” பிளாஸ்டிக் நாற்காலியைக் காட்டினான்.

“மேடம் இந்த ஒரு செருப்பு தைத்தும் மத்தது தைக்காமலும் இருந்தா நல்லா இருக்காது. அதையும் குடுங்க தச்சிடுறேன், பத்து ரூபா சேர்த்து முப்பதா குடுங்க”
“எங்கிட்ட இருபதுதான் இருக்கு; ஒன்னு மட்டும் போதும்”
“வேலைய ஒழுங்கா செய்ஞ்ச திருப்தி வேணாமா. பத்து ரூபா நாளைக்கு குடுங்க”
இரண்டு காலணிகளையும் சிறப்பாக சரி செய்து கொடுத்து இருபது ரூபாய்களை வாங்கிக் கொண்டான்.

“ஹேண்ட் பேக் ரிப்பேர் செய்யமுடியுமா”
“தாராளமா, அதுக்குத்தான் தையல் மெஷின்”
” ஓ கே, அந்த பேக்கை நாளைக்கு எடுத்து வர்ரேன்”

அந்தப் பெண் சென்றதும் அவள் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருந்தான். இருபத்தைந்து வயதுக்குள்தான் இருப்பாள். பொட்டில்லை,பூ இல்லை, மெட்டி இல்லை, வளையலில்லை, தாலி இல்லை. அதற்குள் விதவைக்கோலமா. 
இல்லாவிட்டால் நவநாகரிக அலங்கோலமா.
தொப்புள் தெரிய புடவை, ஃபேசியல் செய்யப்பட்ட முகம், அழகாக ஒதுக்கப்பட்ட புருவம், போனி டெயில் போட நேர்த்தியாக வெட்டப்பட்ட முடி,  பெர்ப்ஃயூம், பொருத்தமான லிப்ஸ்டிக், ஹை ஹீல் ஷு என இருந்தாள்.

அவள் உட்கார்ந்த நாற்காலியைப் பார்த்தான். வெளியில் இருந்த அதை எடுத்து உள்ளே வைத்தான். ஆணியில் மாட்டியிருந்த மதுரை மீனாட்சி படத்தை கழற்றி அந்த நாற்காலியில் வைத்து பூவைப் போட்டான். அவள் உட்கார்ந்த நாற்காலியில் வேறு யாரும் உட்காரக் கூடாதாம்.

மறுநாள் தன் தோழி ஒருத்தியுடன் வந்தாள். இரண்டு பேரும் …”தஸ் புஸ்” என்று ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு வந்தார்கள்.

“இந்த ஹேண்ட் பேக்கில் மூனு ஜிப்புமே ரிப்பேர்.”
“சரி மேடம், ஜிப் வாங்கி ரெடி பண்ணி ஒரு மணி நேரத்தில தர்ரேன்”
“அவ்வளவு நேரம் வெயிட் பண்ண முடியாது நாளை வாங்கிக்கறேன்.” என்று பத்து ரூபாய் பாக்கியைக் கொடுத்தாள்.

அவனுடன் அவ்வப்போது மாலையில் கடைக்கு வந்து பேசிக் கொண்டு இருப்பான் ராமு. அவனும் அந்த பெண்ணைக் கவனித்திருக்கிறான். ராஜாவின் சந்தேகமே அவனுக்கும் வந்தது.

“மச்சி, பார்த்தாயா ஆண்டவன் விளையாட்டை. இந்த வயதில் விதவைக் கோலமா. மனசு கேக்கலடா” அவன்.
“டேய், அப்படியெல்லாம் நெனச்சிடாத. கிறிஸ்டியனாக் கூட இருக்கலாமில்ல” இவன்.
“எனக்கென்னமோ அப்படி தோணல, கிறிஸ்டியனுக்கான அடையாளம் எதுவுமில்ல. மச்சி இது என்னா உட்கார்ர நாற்காலியில சாமி படமா, நங்கல்லாம் எங்க உட்காரரது” அவன்.

ராஜா அப்பெண் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

அதற்கும் அடுத்த நாள் ஆறு மணிக்கெல்லாம் அவள் வந்தாள். ஆனால் அதற்கு முன்பே நண்பன் ராமு அங்கு ஆஜர் ஆகியிருந்தான். ஜிப் சரி செய்யப்பட்ட பேக்கை வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டுப் போனாள்.

நண்பன் ராமு ஆரம்பித்தான்,
“மச்சி, நான் கார்த்தால இதே பெண்ணை இங்கிலீஷ் எலக்ட்ரிக் கம்பெனிக்கு அப்பால வெட்டரன் லைன் பக்கமா நடந்து வர்ரதைப் பார்த்தேன். அநேகமா ஆங்கிலோ இண்டியனா இருக்கலாம். அவங்களுக்குத்தான் இந்த நுனி நாக்கு இங்கிலீசுக்காக ரிசப்சனிஸ்ட் வேல ஈசியா கெடக்கும். அந்த பெண்ணோட நிறத்தப் பார்த்தில்ல” அவன்.
“அப்புடியா. எனக்கென்னமோ விதவைன்னுதான் மனசாட்சி சொல்லுது” இவன்
“விதவையா இருந்தா நீ வாழ்வு குடுக்கப் போறியா” அவன்.
“…………….”.இவன்
“என்னடா பேச்சைக்காணோம். அப்படி ஐடியா இருக்கா”அவன்.
“ராமு, அப்படி எல்லாம் விதவையா இருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கறேன்” இவன்.

“ராஜா, இன்னொன்னும் கவனிச்சியா? அந்தப் பெண் இன்னைக்கு தனியாதான வந்தா. அவ ஏதோ சொல்ல நெனைக்கிறா மாதிரி தெரியுது” அவன்.
“என்னா தெரியுது” இவன்.
“ஒனக்கு எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கனும், போடா. சரி, நாளைக்கு ஞாயிறுதான, வீட்டைக் கண்டு பிடிப்போம். காலைல வா ஒரு நடை வெட்டரன் லைன் வரைக்கும் போய் வரலாம்” அவன்.

ராமு கிளம்பிப் போய் விட்டான். ‘அவன் சொல்லுரதுல லாஜிக் உள்ளமாதிரயும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு’ ராஜா குழம்பிக் கிடந்தான். வெட்டரன் லைன் என்பது ஆங்கிலோ இந்தியர்கள் மட்டுமே வசிக்கும் பகுதியாகும். மறுநாள் காலை ராஜா போகவில்லை.

திங்கள் மாலை ஆறு மணிக்கு ராஜா சிங்காரித்துக் கொண்டு ரெடி. ராமுவும் வந்து விட்டான். முன்தினம் வாராததற்கு கோபித்துக் கொண்டான். அந்தப் பெண்ணும் தோழியும் வந்து கொண்டிருந்தார்கள். ராஜாவுக்கு ஒரே படபடப்பு. இவன் கடையை கடக்கும் போது இடக்கையை உடம்போடு ஒட்டி வைத்தபடி ராஜாவைப் பார்த்து நளினமாக கையசைத்துப் போனாள். மெல்லிய புன்னகையை கீழுதட்டைக் கடித்தபடி சிந்திப் போனாள்.

தெல்காப்பியத்தில் தொல்காப்பியர் தலைவன் தலைவி காதலில் ‘ நகுநயம் மறைத்தல் ‘ என்பார். தலைவனைப் பார்த்ததும் தலைவிக்கு வரும் சிரிப்பை மறைத்தக் கொள்வாளாம். அதுதான் நமுட்டு சிரிப்பு என்று ஆனது போல.

ராஜாவும், ராமுவும் சிறிது நேரம் பேச்சற்று இருந்தார்கள். இரண்டு பேரின் எண்ண ஓட்டமும் ஒன்றாகவே இருந்தது.’ அது’ வாகத்தான் இருக்குமோ.அடுத்த நாள் அந்த பெண் கடையை கக்கும் போது,” மேடம் ஒரு நிமிஷம்”அவள் கடைக்கு எதிரே வந்து நின்றாள்.” மேடம், எக்ஸ்போர்ட் குவாலிட்டி ஷு அப்பர். உங்க கால் அளவு குடுங்க. சூப்பரா ஹைஹீல்ஸ் ரெடி பண்ணித் தர்ரேன்.”அந்த மேல் பட்டையை பார்த்ததுமே அவளுக்கு பிடித்து விட்டது. ” எவ்வளவு ஆகும்”” உங்கள்ட்ட என்னா மேடம் கேக்கப் போறேன். அளவு மட்டும் குடுங்க” அவளுடைய கால் அளவை அளவு குறிக்கும் நோட்டுப் புத்தத்தில் பதித்துக் கொண்டான்.”ரெண்டே நாள்ள ரெடியாயிடும்”அவன் மிகுந்த சிரத்தையுடன் அதை செய்து முடித்தான். மெட்டீரிலுக்கான பணத்தை மட்டுமே வாங்கிக் கொண்டான்.
அந்த வார முழுவதும் மாலை வேளையில் அவள் தலையை சாய்த்தபடியே கைகளை  நாசூக்காக அசைத்துச் செல்வது அரங்கேறிக் கொண்டிருந்தது. 

மெல்ல மெல்ல ராஜாவும் ராமுவும் ‘அதுதான்’ னு முடிவுக்கு வந்து விட்டார்கள். எல்லா அறிகுறியும் அப்படித்தான் கூறுவதாக இருவருமே நினைத்தார்கள்.

சனிக்கிழமை மாலை வந்த அப்பெண் ஒரு ஆண்களின் வாலெட் ஒன்றைக் கொடுத்து, அதை நன்றாக ஒட்டி தைத்து வைக்கக் கூறினாள்

“நாளைக்கு ஞாயிறு ஆச்சே, கடை உண்டா”
“உண்டு மேடம்”
” சரி. நாளைக்கு சாயங்காலம் இதே நேரம் வந்து வாங்கிக்கறேன்.”

‘அவள் அப்பாவின் வாலட்டை எல்லா விதத்திலும் நேர்த்தியாக செய்து கொடுக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

ராமு,
“மச்சி நாளைக்கு அருமையான சந்தர்ப்பம், பயன் படுத்திக்கோ. நெறைய காதலுங்க சொல்லத் தைரியமில்லாம மொட்டாவே கருகிப் போயிடுது. உன்னுத கருக வுட்டுடாத.” என்றான்.

ஞாயிறு என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் ரொம்பக் குறைவு. அவன் கடை முன் ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. ஆறடிக்குக் குறையாத உயரமுள்ள ஆஜானுபகுவான ஆடவன் பின்னாலிருந்து அந்த தேவதை இறங்கி வந்தது.

“வாலட் ரெடியா?”
“ரெடிங்க” என்று எடுத்துக் கொடுத்தான்.
புல்லட்டில் அழைத்து வந்தவரிடம்,
“மாமா இந்த கடையில்தான் என் செருப்பையும்,ஹேண்ட் பேக்கையும் ரிப்பேர் செய்தேன்” என்று அறிமுகப் படுத்தினாள்.
“அப்பறம் இவர்தான் என் ஹஸ்பென்ட்”
ஐம்பது ரூபாயைக் கொடுத்து விட்டு, “இது போதுமில்ல” என்று கேட்டாள்.

ராஜாவின் காதில் எதுவும் விழுந்ததாகத் தெரியவில்லை.

“பை” 
என்று சொல்லிவிட்டு புல்லட்டின் பின்னால் ஏறிக் கொண்டு தன் மாமாவின் இடுப்பை இறுக பற்றிக் கொண்டாள். புல்லட் புறப்பட்டது.

ராஜாவுக்கு தலை சுற்றியது. 

நினைவு படுத்தி பார்த்ததில் புல்லட் முன் சக்கர மட்கார்டில் திராவிடர் கழகக் கொடி பறந்தது; விண்ட் ஷீல்டில் கறுப்பு பின்னனியில் தந்தை பெரியாரின் கோட்டுருவம் வரைந்திருந்தது.
இவள் அந்த சுயமரியாதைக் கட்சியா; அதனால்தான் பூ, பொட்டு, வளையல் , தாலி, மெட்டி எதுவும் இல்லையா. இப்படியும் ஒரு கொள்கைவாதியா என்று ராஜா வாய் பிளந்தபடியே உட்கார்ந்து விட்டான்.

Advertisement

6 thoughts on “தோல் பூக்கள்

Add yours

 1. ஏழைக்காதல்.இலவு காத்த.கிளி. ராஜாவின் காதல்.பூவும் பொட்டும் இல்லாதவர்கள் பகுத்தறிவாளர்களாகவும் இருப்பார்கள் என்று முடித்திருப்பது அருமை.
  ஒவ்வொரு வாரமும் கதை சொல்லும் பாங்கு மெருகேறுகிறது.வாழ்த்துக்கள்.
  அன்புடன் – வேம்பு.

  Liked by 1 person

 2. கதைத் தொடக்கத்தில் அவாவு நிலையை வாசகனுக்குள் ஏற்படுத்திவிட்டு அதை இறுதிவரை தொய்வடையாது கொண்டு சென்றிருப்பது சிறப்பு. தவிர கொண்டய்யா மற்றும் அந்த இளம் பெண் பாத்திரச் சித்திரிப்புகளும் நன்றாக வந்துள்ளன.

  Liked by 1 person

  1. தங்களின் நயம் பாராட்டலுக்கு நன்றி. ஒவ்வொரு படைப்புக்கும் எழுதிட வேண்டுகிறேன்.

   Like

 3. அருமையான பாத்திரப் படைப்பு நிறைவேறாது
  ஓரளவிற்கு யூகித்திருந்தாலும் எப்படி முடியப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு இறுதிவரையிலும் இருந்தது.

  Liked by 1 person

  1. மிக்க மகிழ்ச்சி, நன்றி.
   உங்கள் வரிகள் ஊக்கமளிக்கின்றன நண்பரே.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: