ஆணவம்

சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். இப்போது நீர் திருப்பினால் சரியாக இருக்கும். மாலை ஆறு மணிக்கு பரமு வயலுக்கு, நீர் திருப்பி விட வேண்டும். சிலு சிலு வென்ற காற்று வீச… வாய்க்கால் நீரை வாகு பார்த்து திருப்பி விட்டு… கையில் இருந்த மண்வெட்டியை தரையில் போட்டான் சம்பந்தம். தோளில் இருக்கும் துண்டால் முகத்தை துடைத்து விட்டுக்கொண்டு புல் மேட்டில் அமர்ந்தான். அமுதா சோறு கொண்டு வாரேன்னு சொன்னதே. இன்னும் காணோம். 

என்ன சம்பந்தம்… முகமெல்லாம் வாட்டமா இருக்கு? மேலுக்கு சுகமில்லையோ? ! என்று மாரிமுத்து கேட்டபடியே ஓடுகின்ற வாய்க்கால் தண்ணீரில் முகம் கை கால்களை கழுவிக் கொண்டு கேட்டார். 

அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமோய். தங்கச்சி சாப்பாடு எடுத்துக்கிட்டு வரேன்னு சொல்லிச்சி, இன்னும் ஆளை காணலை… என்று பெருமூச்சு விட்டான்… சம்பந்தம். 

என்னத்த, ஒண்ணுமில்லை. அட ஊரே உன் சங்கதி தான் பேசுது டி மாப்பிள்ளே?!

என்ன சொல்றீங்க மாமோய்? 

பண்ணையார் பொண்ணை கட்ட மாட்டேன்னு சொல்லிட்டியாமே…? அதேன்… 

சம்பந்தம் நினைவு சுழன்று ஐந்து ஆண்டுகள் பின்னோக்கி சென்றது…..

கருப்பூர் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் சம்பந்தம் பேருந்துக்காக காத்திருக்கிறான். தார்ச் சாலையில் வெறுமனே ஒரு நிழற் குடை மட்டுமே இருக்கும். அக்கம் பக்கம் கடை கன்னி எதுவும் இருக்காது. அங்கிருந்து ஒரு பர்லாங்கு நடந்து ஊருக்குள் சென்றால்தான் எல்லாமும்.

கும்பகோணம் நேரு மார்க்கெட்டுக்கு முன்நாள் ஏற்றி அனுப்பிய ஐந்து மூட்டை கத்தரி, நாண்கு மூட்டை வெண்டைக்கு கமிஷன் ஏஜென்ட்டிடம் பணம் வாங்க போகிறான். அனுப்பி வைத்த காய்கறிக்கு ஏலம் போன தொகையில் தன்னுடைய கமிஷன் போக மீதியை கட்டி வைத்திருப்பார். அவர் இல்லா விட்டாலும் போய் வாங்கிக் கொள்ளலாம்.

திருவையாற்றில் இருந்து வரும் பேருந்து தொலைவில் தெரிந்தது. அதுவரை தன்னைத் தவிர வேறு யாரும் இல்லாத அவ்விடத்தில் திடீரென ஆறு பேர் தோன்றி புதர் மறைவில் ஔிந்து கொண்டார்கள். எல்லாருடைய கையிலும் பெரிய வீச்சரிவள். ஐயோ இவர்கள் பேருந்தில் வரும் யாரையோ தீர்த்துக்கட்ட காத்திருக்கிறார்கள். சம்பந்தம் முடிவு செய்து கொண்டான் இந்த பேருந்தை விடுத்து அடுத்த பேருந்தில் போவதென்று. பேருந்து வந்து நின்றது, அதிலிருந்து பண்ணையார் மகனும் ஒரு பெண்ணும் இறங்கினார்கள். அவ்வளவுதான், மறைந்திருந்த ஆட்கள் பாய்ந்து சென்று அவர்களை வெட்டத் தொங்கினார்கள். சம்பந்தம் தடுக்க முயன்றும் முடியவில்லை, அவர்கள் ஆறு பேர்களாயிற்றே.

பண்ணையார் மகன் அதிக வெட்டுகளை வாங்கினான். சம்பவம் நடக்கையில் பேருந்திலிருந்து அவன் சிநேகிதர்கள் சிலர் இறங்கி வரவே கொலைக் கும்பல் ஓடிவிட்டது. 

அந்தப் பெண் துடிப்பதைப் பார்த்து , பேருந்தில் ஏற்றலாம் என அவளைத் தூக்கினால்,
” அண்ணே அவரப் பாருங்க, காப்பாத்துங்க” 
என்று அழுதாள். அவள் முகம் தோள்பட்டை இடுப்பு வயிறு என வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது.
கெஞ்சிய அவள் முகம் கண்ணுக்குள்ளேயே நின்றது.

ஆளும் பேருமாக இரண்டு ஜீவன்களையும் பேருந்தில் ஏற்றி கும்பகோணம் பெரிய ஆஸ்பத்திரி கொண்டு வந்தோம். வழியிலயே பண்ணையார் மகன் இறந்து விட்டானாம். இந்த பெண் உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருந்தது.
காவல் துறை வந்து எங்களிடம் வாக்குமூலம் வாங்கிக் கொண்டது.

பண்ணையார் மகன் வேறு சாதிப் பெண்ணை முதல் நாள் திருமணம் செய்து கொண்டு விட்டான். 

“சரி . ஆனது ஆகி விட்டது; இனி மாற்ற முடியாது. குடும்பத்தோட ஒத்த ஆண் வாரிசு. ரெண்டு பேரையும் வந்து குடும்பத்தோட சேர்ந்துக்க சொல்லு. பத்திரிக்கை அடிச்சி வரவேற்பு விழா வச்சிடலாம்” 

என்று பண்ணையார் சிநேகிதக் காரப் பிள்ளைகள் மூலமாக தகவல் அனுப்பி மணமக்களை திரும்ப வைத்து ஊருக்குள் நுழையும் முன்பே போட்டுத் தள்ளி விட்டார்கள்.
அந்தப் பெண் எல்லாவற்றையும் தெளிவாக வாக்குமூலம் கொடுத்து விட்டு இரண்டு நாளில் இறந்து போய் விட்டாள்.

வழக்கு நடந்தது. சம்பந்தம் சாட்சி சொன்னான். கூலிப்படை ஆட்களை அடையாளம் காட்டினான். மாவட்ட நீதிமன்றம் பண்ணையார், அவர் மனைவி, மைத்துனன், மேலும் கூலிப்படை ஆறுபேர் என எல்லாரும் குற்றவாளி என்று தீர்ப்பளித்து தனித்தனியே தண்டனையும் அளித்து விட்டது. 

உயர்நீதி மன்ற மேல் முறையீட்டில் போதிய ஆதாரமில்லை, குற்றம் சான்றுகளுடன் நிரூபிக்கப் படவில்லை என கூலிப்படை சேர்ந்தவர்களைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.

‘பண்ணையார் மகளை கட்டிக்க மாட்டேன்னுட்டியாமே ‘ என்று மாரிமுத்து கேட்டதும் இதுதான் அவன் மனக்கண்முன் ஓடியது.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அமுதா தன் அண்ணனுக்கு சாப்பாடு கொண்டு வந்து விட்டாள்.

“சரி மாப்பிள்ளே, நீ சாப்பிடு, நான் கிளம்பறேன்”

” இரு மாமா சாப்பிடு, போலாம்”

“மாமா நெறையதான் கொண்டாந் திருக்கேன், நீயும் உட்கார், சாப்பிடலாம்” 
என்று அமுதாவும் கூப்பிட்டாள்.
மாமாவோ பிடிவாதமாக கிளம்பி விட்டார்.

” அமுதா, என்னடா சமையல் இன்னிக்கி”

“ஒனக்கு என்ன சாப்பாடு வேணும் சொல்லு”

” எனக்கா….எனக்கு வந்து..எண்ணெ கத்ரிக்கா காரக் கொழம்பும், உருளக் கெழங்கு பொடிமாசும், சுட்ட அப்பளமும்”

” அது மட்டும் போதுமா, இல்ல மோர் சாதத்துக்கு ரெண்டு சின்ன வெங்காயமும் வேணுமா”

என்று கேட்டபடியே அண்ணனுக்கு இலையைப் போட்டாள். என்ன ஆச்சரியம் அவன் கேட்டதுதான் தங்கை சமைத்து கொண்டு வந்திருக்கிறாள்.
சாப்பிட்டுக்கொண்டே அமுதாவிடம் கேட்டான், 
” அமுதா, பரமுவிடம் ரெண்டு நாளைல முடிவு கேட்டுடப் போறேன்”

” என்னா முடிவு”

“ஒங்க ரெண்டு பேர் கல்யாணத்தப் பத்திதான். வேற வேற சாதிங்கறதால நம்ம ஊர் கோயில்ல வைக்க ஊர் ஒத்துக்க மாட்டாங்க. அதனால ரெண்டு பக்கமும் ரொம்ப நெருங்கின சொந்தங்கள வச்சி பதிவு அலுவலகத்தில முடிச்சிட்டு வீட்ல விருந்த வைச்சுக்கலாம்”

” அண்ணே அவங்க வீட்ல யாருக்காச்சும் எதிர்ப்பு இருக்கான்னு தெரிய வேணாவா”

“அத அவன்தான சொல்லி சரி பண்ணனும். சரி சரி நான் அதப் பேசிக்கறேன்”

அவன் விரும்பிய சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டான். ஏதோ யோசித்தபடியே சுட்ட அப்பளம் ஒன்றை எடுத்து அமுதா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அமுதாவும் பரமுவும் காதலிக்கிறார்கள். பரமுவின் வயல் சமபந்த்தின் வயலை ஒட்டினாற் போல இரக்கும். அதனால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். பெரும்பாலும் இருவரும் ஒன்றாகவே வயலில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அதனாலேயே அமுதா சொல்லாமலேயே இரண்டு பேருக்கு காணும்படி சாப்பாடு கொண்டு வருவாள். இன்று பரமு இல்லை. கரும்பு ஆலைக்கு பணப்பாக்கி வாங்கப் போயிருக்கிறான். அநேகமாக தினமும் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டதால் அமுதாவுக்கும் பரமுவுக்கும் ஒரு ஈர்ப்பு உண்டாகி அதுவே பிணைப்பு ஆகிவிட்டது. பரமுவே முதலில் நண்பனிடம் உண்மையைக் கூறி விட்டான். பரமுவின் குணம் , ஒழுக்கம் அறிந்ததால் சம்பந்தம் முழு சம்மதம் தந்து விட்டான். 
இதில் பிரச்சனை என்னவென்றால் இருவரும் வெவ்வேறு சாதி. பரமு வீட்டில் யாராவது மாமன் காரனோ, சித்தப்பன் பெரியப்பன் காரனோ எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.

பண்ணையார் விடுதலையானாலும் சாதியிலுள்ள ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் அவருக்கு மரியாதையே போய் விட்டது. அவரை விட்டு விலகியே இருந்தார்கள். 
பண்ணையார் மகளுக்கு கல்யாணம் செய்ய தீவிரமாக இறங்கினார். தெரிந்த சொந்த பந்தங்களிட மெல்லாம் சொல்லி வைத்தார். வழக்கமே இல்லாதபடிக்கு முதல் முறையாக புரேக்கரிடம் கூட மகளின் ஜாதகத்தைக் கொடுத்து மாப்பிள்ளை கொண்டு வரச் சொன்னார். வேற வாரிசு இல்லை யென்பதால் மொத்த சொத்தும் மகளுக்குத்தான் என்று பிரகடணமே செய்து விட்டார்.

ஆனால் கொலைாரக் குடும்பம் என்று உள்ளூர நம்பியதால் அவர் சாதிக்காரர்கள் யாரும் முன் வரவில்லை. 
நீதிமன்றம் வேண்டுமானால் அவரை விடுதலை செய்திருக்கலாம்; மக்கள் மன்றம் அவரை கொலையாளி யாகவல்லவோ தீர்மாணம் செய்து வைத்திருக்கிறது.

நண்காண்டுகளாக தேடுதேடென்று தேடினாலும் மாப்பிள்ளை கிடைக்கவே இல்லை. எந்த சாதியை காக்க அவர் மகனை பலியிட்டாரோ அந்த சாதி இவரை தீண்டவே இல்லை.

கொட்டிக்கிடக்கும் சொத்து சுகத்தைப் பார்த்துக் கூட இவர் பெண்ணை கட்டிக்க யாரும் வரவில்லை.

“ஏண்டி குமுதா கடைசி வரை கன்னியாகவே இருந்து விடுவாளோ ” 
என்று மனைவியிடம் கேட்டார்.

“இவளுக்கென்று இனிமேலயா ஒருத்தன் பொறந்து வரப்போறான்னு சொல்ல முடியல. ஒருவேளை பொறக்கவே இல்லியா” 

பண்ணையாரின் மனைவி அதிகமாக நொந்து பேசினாள்.

மகனின் காதல் கல்யாணத்தில் பெரும் எதிர்ப்பைக் காட்டியவர் அவர்தான். தன் அண்ணன் மூலமாக கூலிப்படை ஏற்பாடு செய்ததே அவர்தான்.

எளிதாக அழிவு வேலை செய்த அவரால் எவ்வளவு முயன்றும் ஆக்கபூர்வ வேலை செய்ய முடியவில்லை

பண்ணையாரின் மனைவிக்கு சம்பந்தம் உறவுக்காரன்தான். சம அளவு சொத்து பத்து இல்லாவிட்டாலும் நல்லவன். அவனிடம் பேசிப் பார்த்தாலென்ன என்று கணவனிடம் கூறினாள். அவரும் அதுதான் சரி என்று சம்பந்தத்தை கேட்டுவிட முடிவு செய்தார்.
இந்த திட்டத்தின் படி கணவனும் மனைவியும் சம்பந்தத்தை அவன் வீடு தேடி வந்து பார்த்தார்கள்.

“சம்பந்தம் ஒரு நல்ல சேதியோட வந்திருக்கோம்”

“என்னா நல்ல சேதி மாமா”

” எல்லாம் உன் கல்யாண சேதி தானப்பா”

“எனக்கு முன்னாடி தங்கச்சி அமுதாவுக்கு முடிக்கனும். அப்பறமாதான எனக்கு “

“அதென்னா அப்புடி சொல்லிட்ட. அமுதாவுக்கும் மாப்ளை பார்த்துட்டா, ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா வச்சிடலாமில்ல”

“மாமா கொஞ்சம் வௌக்கமா சொன்னா புரிஞ்சுக்கலாம்”

“மாப்ளே, குமுதாவுக்கும் உனக்கும் முடிச்சு போடலாம்னு நாங்க முடிவு பண்ணியிருக்கோம்”

“என்னா மாமா திடீர்னு…. குமுதாகிட்ட கேட்டீங்களா. எங்கிட்டயும் எதுவும் பேசலை”

“நாம சொன்னா குமுதா மறு பேச்சே பேசாது. நீயும் நம்ப சொந்தக்கார புள்ளதான. இந்த ஊர்ல முக்காவாசி நெலமும் என்னோடது தான. குமுதாவ கட்டுனா எல்லாமும் ஒனக்குத்தான”

“மாமா என் தங்கசச்சிக்கு வேற சாதியில மாப்ளை நெனச்சிக்கிட்டு இருக்கேன். ஒங்களுக்குத்தான் சாதிமாறி கல்யாணம் கட்டுனா ஆகாதே. சாதி மானமே போச்சின்னு ஆளையே தீர்த்துப் புடுவீங்களே.”

“மாபளே, அது பத்தில்லாம் பெரச்சனை யில்லை. என் மகளை மடடும் கல்யாணம் செஞ்சுகிட்டா போதும் “

என்று வேண்டினார்கள். அப்போதுதான் சம்பந்தம் மறுத்துப் பேசினான்.

“இன்னைக்கு வந்திருக்க ஞானம் அன்னைக்கு வந்திருந்தா ரெண்டு உசிரு போயிருக்காதில்ல “

என்றான்.
தம்பதிகள் தோல்வி முகத்தோடு திரும்பினார்கள்.
இது நடந்த அடுத்த நாள் குமுதா சம்பந்தத்தை வந்து பார்த்தாள். அவன் மறுப்பு சொன்னதற்கு நன்றி கூறினாள். பரமுவின் தம்பியும் அவளும் காதலிப்பதாகக் கூறினாள். பரமுவின் சம்மதமும் பெற்றோரின் சம்மதமும் அவனே பெற்றுத்தர வேண்டும் என்றாள். அவன் மறுக்க மறுக்க ஏற்காமல் போய் விட்டாள்.
பரமுவின் தம்பி தஞ்சாவூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்க்கிறான். பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்ததில் அவர்களுக்குள் காதல் மலர்ந்து விட்டிருந்தது.
அடுத்த நாளே சம்பந்தம் பண்ணையார் வீட்டுக்கு போனான்.

“வா.வா..சம்பந்தம். உட்கார் “

” உங்களப் பார்த்து பேசிட்டுப் போகலாமுன்னு வந்தேங்க. நானே சொன்ன மாதிரி என் தங்கச்சிக்கு சாதிகலப்பு கல்யாணம் செய்ய முடிவு பண்ணியிருக்கேன்”

“நேத்தேதான் சொன்னியே”

“ஊர் பண்ணையாரா உங்களுக்கு தெரிவிச்சிடனும்ல “

” நான் இப்ப தலைகீழா மாறிட்டடேன் தம்பி. சாதிப் பேர சொல்லி ஊதி விட்டவன்லாம் ஒதுங்கிப் போய்ட்டான். என் பொண்ணை சாதிக்காரன் எவனும் கட்டிக்க தயாரில்ல. அப்ப நான் மட்டும் ஏன் சாதிய கட்டிக்கிட்டு அழுவனும். என் பொண்ணுக்கு நல்லவனா இருந்தாப் போதும்னு வேற சாதியில ஒரு பையனப் பார்த்து முடிச்சிடலாம்னு இருக்கேன்”

“ஐயா என் காதுங்களையே நம்ப முடியலைங்க”

” நெசந்தான் சம்பந்தம், ஒனக்கு தெரிஞ்ச நல்ல பையன் சாதி விட்டு சாதியில கல்யாணம் பண்ணிக்க தயார்னா சொல்லு. ஒத்துவந்தா முடிச்சிடலாம்.”

” ஐயா இது உறுதிதான..மாற மாட்டீங்களே”

பண்ணையாரின் மனைவி குறுக்கிட்டாள்.

“சம்பந்தம் சத்தியமா மாறமாட்டோம். எங்களுக்கு சாதி கை குடுக்கல. வெத்து பெரும பேசத்தான் சாதி”

“அப்ப ஒன்னு செய்யலாம். நம்ம எல்லாருக்குமே நல்லா தெரிஞ்சவன் ஒருத்தன் இருக்கான். அவன் அண்ணணே சாதி மாறித்தான் கல்யாணம் பண்ணப் போறான். கேட்டுப் பார்க்கட்டுமா “

“சொல்லு நாங்களும் வேணா வர்ரோம். யாரு அது”

” வேற யாரு நம்ம பரமுவோட தம்பி, தஞ்சாவூர் காலேஜுல வாத்தியாரா இருக்குல்ல அதான்”

” ஆகா..தங்கமான புள்ள… ஒத்துக்கிட்டா கொடுப்பினைதான்”

” அப்போ நான் பேசி வைக்கிறேன். நாளைக்கு நீங்க வாங்க ஒன்னா உக்காந்து பேசிடலாம்.”

இதையெல்லாம் குமுதா உள்ளே இருந்தபடியே கேட்டு ஆனந்தப் பட்டுக் கொண்டிருந்தாள்.

மறுநாள் எல்லாரும் கூடி பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். 
வீட்டுக்கு வந்ததும் பண்ணையார்,

“குமுதா ஒன்னோட சம்மதம் கேக்காம நாங்களே ஒனக்கு மாப்பிள்ளை முடிவு செஞ்சிட்டோம். எல்லாம் ஒனக்கு நல்லதாவே நடக்கும்மா”

” அப்பா நீங்க பார்த்து எது செஞ்சாலும் எனக்கு சம்மதம் தான்பா”

அடுத்த இரண்டு நாளில் ஊர் சனங்களெல்லாம் கூடி இந்த கல்யாணத்தை உறுதிப் படுத்தி பாக்கு வெத்தில மாற்றிக் கொண்டார்கள்.

யாரும் எதிர் பார்க்காத வேளையில் பண்ணையார்,

” அப்படியே இன்னோரு நல்ல சம்பந்தத்தையும் முடிவு பண்ணிடலாம். பரமுவுக்கும் அமுதாவுக்கும் நாங்க பேசி வச்சிருக்கோம். அதுல யாருக்கும் ஆட்சேபன இருக்காதுன்னு நெனக்கிறேன். அதுக்கும் பாக்கு வெத்தில மாத்திக்கலாம். ரெண்டு கல்யாணத்துக்கும் வர்ர வாரத்துல ஒரு நல்ல நாள்ல நிச்சயதார்த்தம் செஞ்சு முகூர்த்த நாள குறிச்சிடலாம்”

என்று அறிவித்து விட்டார். 
யாரும் ஆட்சேபனை செய்ய இடமில்லாதபடி தீர்த்து சொல்லிவிட்டார்.

தன் மகளுக்கு நல்ல வழி காட்டிய சம்பந்தத்திற்கு அவர் செலுத்திய நன்றிக் கடன் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

4 thoughts on “ஆணவம்

Add yours

 1. கதை ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் நடந்த கெளசல்யாவின் வழக்கு போல் இருந்தாலும் முடிவு நன்றாக இருந்தது. சாதியை தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்கள் எல்லாம் தனக்கு வரும் போது ஒதுக்கி வைத்து சமரசம் செய்து கொல்வதும்
  சாதி எல்லாம் பார்க்க மாட்டேன் என்று ஊருக்குள் பீற்றிக் கொண்டு சாதியை பிடித்துக் கொண்டிருப்பதும் தான் நடந்து கொண்டிருக்கிறது.

  Liked by 1 person

  1. எந்த அளவு இல்லை என்கிறோமோ அந்த அளவு இருக்கிறது என்பது பொருள் போலும். சாதி மறுப்பு என்பது போல மத மறுப்பு என்து வந்தால்தான் சாதி மறுப்பு என்பது அர்த்தமுள்ளதாகும்.
   அரிய கருத்ததுக்கு நன்றி வேம்பு.

   Like

 2. பண்ணையார் பாத்திரம் தம் எண்ணப்போக்கிலிருந்து மாறுவதும் , அதற்குக் காரணமாகப் புனையப்பட்ட நிகழ்வுகளும் பொருத்தமாக உள்ளன. மங்களகரமான முடிவை நோக்கிக் கதை போனாலும் இரு வேறு திருமணங்கள் சாதி கடந்து நடந்தேறுவதாக முடித்திருப்பது ஒரு வகை புதுச் சிந்தனை எனலாம்.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: