தஞ்சை, திருச்சி காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை நடவு வேலைகள் தொடங்கி விட்டன.
நாற்றங்கால் என்பது நல்ல வடிகால் வசதியோடு உள்ள வயல் ஆகும். நன்கு உழுது உரமிட்டு தயார் செய்து வைத்துள்ள இங்குதான் நெல் விதை விதைத்து நாற்று வளர்ப்பார்கள். நெற் பயிரின் மொத்த ஆயுளில் நாண்கில் ஒரு பங்கு நாட்களில் நாற்றங்காலில் இருந்து நாற்றைப் பறிப்பார்கள். இரண்டு கைகளால் சேர்த்தால் பிடிபடும் அளவு நாற்றை ‘ முடி’ என்று கட்டுவார்கள். அந்த முடிகளை அடுக்கி கட்டாக கட்டி தலையில் தூக்கி வந்து நடவு வயலில் போடுவார்கள்.
நடவு நடும் பெண்களுக்கு நாற்று முடியை தூக்கித்தான் போடுவார்கள். அருகில் இருந்தாலும் அவர்களின் கைகளில் தரக்கூடாது; தவறிப் போய் தந்து விட்டால், தந்தவர் அப்பெண்ணுக்கு குழந்தை ஆகிவிட்டதாகக் கூறி தாலாட்டு பாட தொடங்கிடுவார்.
நாற்று முடி தூக்கிப் போடுபவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் அவரை நடுவில் வைத்து சுற்றிலும் வட்டமாக நாற்று நட்டு விடுவார்கள். நாற்றைத் தாண்டி வரக்கூடாது என்பதால் அவர் அப்பெண்களுக்கு பணம் கொடுத்தாலே நட்ட நாற்றை எடுத்து வழி விடுவார்கள்.
ஒவ்வொரு நிலக்கிழாருக்கும் பண்ணை வேலைகள் செய்ய ஒருவர் இருப்பார். அவர்தான் வேலைக்கு ஆள் பிடிப்பது முதலிய வேலைகளைக் கவனிப்பார். அவர் மனைவி கால்நடைகளை கவனிப்பதும் வீட்டு வேலைகளை செய்வதும் வழக்கம்.
நாற்று நடும் போது சீக்கிரம் வேலையை முடிக்க, அவர்களில் தலைமையாக உள்ள பெண்,
“முந்தானையை இழுத்து மூடுங்கடி” என்பது போன்ற சங்கேத மொழியில் கூறுவார். அப்படி யென்றால் நாற்றை தள்ளித் தள்ளி நடவேண்டும் எனப் பொருள். அவர்களுக்குள் பல சங்கேத மொழிகள் உண்டு.
பண்ணையாளின் மனைவி இதைத் தெரிந்து கொண்டதும் அதிக இடைவெளி விட்டு நடப்பட்ட இடத்தில் தான் வந்து நாற்றை நட்டு ‘ஈடு குத்தல்’ செய்திடுவார். எஜமான விசுவாசம்.
அந்த பெண்ணுக்கும் நடவு நடும் மற்ற பெண்களுக்கும் இடையே பெரும் சண்டையே ஏற்பட்டுவிடும்.
இவை போன்ற நிறைய சுவையான சம்பவங்கள் நடவு வயலில் நடைபெறும்.
கிராமத்தில் நமது…. இளம் பிராயத்தில் (1965 முதல் 1975)நடந்த நிகழ்வுகளை நினைவில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளீர்கள்….
LikeLiked by 1 person
அந்த நினைவுகளே இந்த நாட்களை ஜீவனுள்ளவையாக வைத்திருக்கின்றன எனில் மிகையில்லை. நன்றி.
LikeLike