கடந்த ஆண்டு ‘ஆடிப் பெருக்கு’ தினத்தைப்பற்றி செய்திச் சாரலில் எழுதியிருந்தேன். காவிரிப் படுகை சிறுவர்களின் மனதோடு நிறைந்த விழாக்களில் ஆடிப் பெருக்கு முக்கியமானது. இந்த வயதிலும் என் சிறுவயது ஆடிப் பெருக்கு , சப்பரதட்டி என்னை முழுமையாக ஆட்கொண்டு, அந்தநாள் நினைவுகளில் மூழ்கடித்துவிட்டது என்பது முற்றிலும் சத்தியமே!
காவிரித்தாய் பாய்ந்தோடும் வழியிலும், அவளின் தோன்றலான (கிளைநதிக்) குழந்தைகளின் வழியிலும் உள்ள ஊர்களில் மக்கள் நீர்மகளை தெய்வமென வழிபாடு செய்கிறார்கள். ஐந்து இயற்கைப் பொருட்களில் ஒன்றான ‘நீர்’ வழிபடப்படுவதே ஆடிப் பெருக்கு எனலாம். நீரின்றி அமையது இவ்வுலகு !
சூன் மாதம் பன்னிரண்டாம் நாளில் சில ஆண்டுகள் மேட்டூர் அணை திறக்கப்படாமல் போனதால் காவிரி பாசனப்பகுதிகளில் ஆடிப் பெருக்கை கொண்டாட முடியாது மக்கள் ஆடிப்போய் இருந்தது உண்மை.
ஆடிப் பெருக்கு – காவிரி பாயும் பகுதிகளிலெல்லாம் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு வழிபாடு நடைபெறும். பங்காளி மற்றும் உறவுமுறை வீட்டுப் பெண்கள் ஒன்று கூடி காப்பரிசி கிளறி எடுத்துக் கொண்டு போய் காதோலை கருகமணி, தேங்காய், பழத்துடன் காவிரிக்கரையில் வழிபடுவார்கள். ஒரு வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து கற்பூரம் ஏற்றி ஆற்றில் விடுவார்கள்.
சிறு பிள்ளைகள் சப்பரதட்டி எனும் சிறு தேர் ஓட்டி வருவார்கள். இது நாண்கு மூலையிலும் சக்கரம் வைத்த மரப்பலகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரத்தை தூக்கி வைத்தது போல இருக்கும். முற்றும் மரப்பலகையால் செய்யப் பட்ட இதில் பல வண்ண ஆயில் பேப்பர், ஜிகினா பேப்பர் ஒட்டி, வண்ணக் காகிதங்களில் பூக்கள் செய்து ஒட்டி அழகு படுத்தியிருப்பார்கள். சிலர் தேர் போல செய்து கூட இழுத்து வருவார்கள். அடிப்பலகையில் ஆணி அடித்து அதில் நூல் கயிறு கட்டி இழுத்து செல்வார்கள். வேகமாக இழுத்துக் கொண்டு ஓடும் போது நிலை தடுமாறி கவிழ்ந்து விடும். ஒரு வாரத்துக்கு ஊர் முழுதும் ‘டர்ர..டர்ர….டர்ர..டர்ர..’ என்ற சக்கரம் மற்றும் ‘சர..சர’ என்ற வண்ணக்காகிதம் சத்தமே காதில் ஒலித்தபடி இருக்கும்.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் படைத்த ‘பட்டிணப்பாலை’ எனும் பத்துப்பாட்டில் கரிகாலன்ஆட்சியில் சோழநாடு வளமோடு இருந்ததைக் குறித்துப் பாடுகிறார். பூம்புகாரில் வீட்டு முற்றத்தில் உணவு தாணியங்களை வெயிலில் காய வைத்திருப்பதை கவர்ந்து உண்ணவரும் கோழிகளை விரட்டுவதற்கு எழுந்து செல்ல சோம்பல்பட்டு காதணியான குழையை கழற்றி எறிந்து கோழியை விரட்டுவார்களாம்(அவ்வளவு செழிப்பு) . சிறு பிள்ளைகள் ஓட்டிவரும் சிறு தேர் சக்கரத்தில் சிக்கி அந்த குழைகள் தடுக்கும் பகையன்றி வேறில்லை என்கிறார். ஈராயிரம் ஆண்டு முன்னரே சிறார்கள் சிறுதேர்(சப்பரதட்டி)ஓட்டி விளையாடியிருக்கிறார்கள்.
முன்வருடம் ஆடிப் பெருக்குக்குப்பின் அது வரை மணமுடித்த புது மணமக்கள் கல்யாண மாலையை ஆற்றில் விடுவார்கள். புது மணப் பெண்ணின் மஞ்சளில் குளித்த தாலி கயிற்றை மாற்றி ‘ தாலிப் பெருக்கி’ புதுக் கயிறு(சிலர் தங்கச் சங்கிலி) அணிவிப்பார்கள். ஏனைய பெண்களும் புது தாலிக்கயிறு மாற்றிக் கொள்வார்கள். மஞ்சளில் நனைத்த நூலை அரச மரத்தை சுற்றிக் கட்டி சுற்றி வருவார்கள். அதே நூலை பெண்பிள்ளைகள் கழுத்திலும், ஆண்பிள்ளைகள் வலக்கையிலும் கட்டிக் கொள்வார்கள்.
பழைய ஓலைச் சுவடிகளையும் அவற்றின் பெருமை தெரியாமல் ஆற்றில் விடுவார்கள். அப்படி விட்ட ஓலைகள் சில ஆற்றை எதிர்த்து நீந்திப் போகவே, எடுத்துப் பார்த்ததில் அவை சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார், எனத் தெரிய வந்ததாம்.
பிராமணப் பெண்கள் கட்டுச்சாதம் கொண்டு போய் படைத்து உண்டு வருவார்கள்.
சாதாரணமாக வீட்டைவிட்டு வெளியே வராத, வர அனுமதிக்கப் படாத மகளிரும் அன்றுதான் காவிரியை தரிசிக்க வெளியே வந்து தரிசனம் தருவார்கள்.
ஆடிப் பெருக்கு – காவிரித்தாய்க்கும் மகளிர்க்குமான திருவிழா.
Leave a Reply