அம்மாக்காரிக்கு ஆத்திரம் பொங்கிப் பொங்கி வந்து கொண்டிருந்தது.
“இதெல்லாம் என்ன விளையாட்டா? படிக்கிற புள்ளைங்களுக்கு அதுக்கேத்த மெச்சூரிட்டி வேணாம்?”
என்று கணவனிடம் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.
” என் பிள்ளைக் கண் என்னாவறது ?”
நடந்தது இதுதான்.
காலை டிபனை சாப்பிட்டுவிட்டு, அம்மாவிடம் வம்படி வழக்காக ஐந்நூறு ரூபாயைப் பிடுங்கிக் கொண்டு மகன் விக்ரம் கிளம்பிப் போனான்.
அவன் அப்பா இன்னமும் யெஸ்டி மோட்டார் பைக் வைத்துக் கொண்டு ஓட்டி வருவதைப் போல , இவனும் யமஹா ஆர் எக்ஸ் 100 ஐ விடாமல் வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
மடிப்பாக்கத்திலிருந்து கிளம்பியவன் நேரே நங்கநல்லூர் சிறுவர் பூங்கா வந்தடைந்தான். அதற்கு முன்னரே சில நண்பர்கள் ஆஜர்;
இன்னும் சிலர் வரவேண்டும்.
அதற்குள் அவன் செய்ய வேண்டிய வேலை ஒன்று பாக்கியிருந்தது.
” மச்சி, மீதி பேரும் வரட்டும், அதற்குள் ஒரு முக்கிய வேலை பாக்கி இருக்கு. ஒரு கால் அவர்ல வந்திடறேன்”
என்று வண்டியை கிளப்பிக்கொண்டு போனான்.
” எங்கடா அத்தனை அவசரமா போறான்” னு ஒருத்தருக் கொருத்தர் கேட்டுக்கொண்டார்கள்.
நேரே ராஜா ஸ்டோருக்குப் போன விக்ரம் சில பொருட்களை வாங்கினான். ஹோலி கொண்டாட கலர்க்கலர் பொடிகள், கலர் நீர் நிரப்பப் பட்ட பலூன்கள் என வாங்கி வண்டியில் தொங்க விட்டுக்கெண்டு மீண்டும் பூங்காவுக்கு வந்து சேர்ந்தான். அதற்குள் மற்றவர்களும் வந்து விட்டிருந்தார்கள்.
” எங்க மச்சி அவ்வளவு அவசரம் ?”
எனக் கேட்ட நண்பர்களிடம் கேரி பேக்கில் இருந்த ஹோலி பர்ச்சேசைக் காட்டினான்.
வாய் பிளந்த நண்பர்கள்,
” எவ்வளவு மச்சி ஆச்சு, ஷேர் பண்ணிக்கலாம் ” என்றார்கள்.
“அதெல்லாம் வேண்டாம், எங்கிட்ட ஐந்நூறும் காலி. லஞ்ச் மட்டும் பார்த்துக்கோங்க”
என்றான் விக்ரம்.
பூங்காவில் சிறிது நேரம் கடத்தியபின் ஐந்து வண்டிகளும் பொன்னியம்மன் கோவில் நோக்கி சென்றன. பத்திரமாக கோவிலருகில் ஆலமரத்தடியில் வண்டிகளைப் பார்க் செய்து பூட்டி விட்டு கிளம்பினார்கள்.
ஆளுக்கொரு வண்ணப் பொடி பாக்கெட் கையில். விக்ரம் கையில் கேரி பேக், அதில் வண்ணப் பொடியுடன் வண்ண நீர் பலூன்கள்.
முதலில் அவர்கள் தங்களுக்குள் நெற்றியில் நீளமாக திலகம் இழுத்துக் கொண்டார்கள். பின் தலையிலும் கன்னத்திலுமாக வண்ணத்தை அப்பிக் கொண்டார்கள். இவர்களுக் கிடையேயான இந்த சம்பிரதாயம் முடிந்தது.
பிறகு தொடங்கிதே அறிந்தவர் தெரிந்தவர் மீதெல்லாம் வண்ணம் பூசும் வைபோகம். அருகில் சிக்காமல் தப்பி ஓடுபவர் களுக்குத்தான் பலூன்கள். ஓடுபவர்களைக் குறி வைத்து விக்ரம் பலூன் தாக்குதல் நடத்தினான்.
தெருவில் உள்ளோ ரெல்லாம் கலப்பு விமர்சனம் செய்தார்கள். சிலர் ரசித்தார்கள், சிலர் சபித்தார்கள்.
” வடநாட்டுக்காரனே இப்பிடி கொண்டாடுவானான்னு தெரியலை. இதுகளப் பாரு என்னமா பண்ணுதுங்க” என்றுதான் அதிகம் முனுமுனுத்தார்கள்.
யாருக்கும் சத்தமாகப் பேச தைரியம் இல்லை.
அதன் பின்னர் பாலையா கார்டன் என்ற பகுதிக்கு பறந்தனர். அங்கு ஒரு பெரிய ஃப்ளாட்க்கு சென்றார்கள். காலையில் இருந்தே எங்கே இவர்கள் வந்து விடுவார்களோ என பயந்து வீட்டில் ஒளிந்து கொண்டிருந்த ஒரு நண்பனை சிபிஐ அதிகாரிகள் போல அதிரடியாக நுழைந்து மடக்கி விட்டார்கள்.
” டேய்..டேய்..வேணாமடா…ப்ளீஸ்….”
என கெஞ்சிப்பார்த்தான்.
” நீ ஒளியாமல் வந்து இருந்தால் கூட பரிசீலிக்கலாம்; ஆனால் இப்போ டூ லேட் மச்சி. சாரி…..”
என்றவாறே அவனுக்கு கலராபிஷேகம் செய்தார்கள்.
அதற்குள் வீட்டில் பதுங்கியவனின் அம்மா வந்து சொன்னார்,
“நான் கார்த்தாலயே சொல்லிட்டேன். வீணா பதுங்காதே, மாட்டிப்பன்னு. அவன்தான் கேக்கல”
” ஓ.. சாருக்கு அவ்ளோ தைரியமா”
என்று இன்னொரு பாக்கெட் போனஸாக பிரித்துக் கொட்டினார்கள்.
கீழிரங்கி வரும் போது பதுங்கியவனின் தங்கை, எத்திராஜில் படிக்கும் மங்கை மாடிப்படி முன்னே தப்பமுடியாமல் அகப்பட்டுக் கொண்டாள். அவள் ஒரு கொசுறு, போனஸ்.
ஒரு லஞ்ச் பிரேக் விட்டார்கள். அருகில் இருந்த தம் பிரியாணி கடையில் மூன்று தண்டூர் சிக்கன், ஆறு எக் ஃப்ரைடு ரைஸ் வாங்கி ஒரு கட்டு கட்டினார்கள்.
அரை மணி ஓய்வுக்குப்பின் கீழ்க்கட்டளை நோக்கி போனார்கள். அங்கு முன்னமேயே நண்பர்களெல்லாம் நிறம்மாறி, உருமாறி இருந்தார்கள். ஹோலியைக் குறைவில்லாமல் கொண்டாடினார்கள்.
மாலை மணி ஐந்தை நெருங்கி விட்டது. இன்னும் ஒருத்தன் மட்டும் வந்து மாட்டவில்லையே என்று எதிர் பாரத்துக் கொண்டிருக்கும் போதே ஆடு தானே வந்து தலை கொடுத்தாற் போல வந்து மாட்டிக் கொண்டான். வண்ணம் பூசப்படாதவனாக ஃப்ரெஷ்ஷாக வந்தவனை வண்ணத்தில் குளிப்பாட்டி விட்டார்கள். பாவம் நிராயுதபாணியாக வந்து மாட்டிக் கொண்டான்.
விக்ரம் கையில் கேரி பேக்கை பார்த்தவன் அதில் நிச்சயம் ஒரு பாக்கெட்டாவது வண்ணம் இருக்கும் என ஊகித்து விட்டான். அதைக் குறி வைத்து எடுத்தவன் விக்ரமின் தலையிலிருந்து அபிஷேகத்தை ஆரம்பித்தான். விக்ரம் தப்பிக்க தலையை இடம் வலமாக ஆட்ட வண்ணப் பொடி அவன் கண்ணில் கொட்டியது. அவ்வளவுதான், சந்தோசக் காட்சி சோகக் காட்சியாக மாறிவிட்டது.
மொத்த கும்பலும் அருகிலிருந்த இருபத்தி நான்கு மணி நேர கிளினிக் விரைந்தது.
கண்ணளைக் கழுவி மருந்திட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டது கும்பல்.
அதன் பின் நடந்ததுதான் விக்ரமின் அம்மாவுடைய பொரியல்.
விக்ரமை மருத்துவம் பார்த்து வீட்டில் விட்டு வருவதை ஒரு கும்பல் தெருவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது.
” விக்ரம் தம்பிக்கு ஒடம்புக்கு என்னா? “
என்று ஒருவர் கேட்டார். அவர் யாருமில்லை ; அங்கேயே பசுவைக்கட்டி அப்படியே பாலைக் கறந்து கொடுப்பவர்தான். பால்காரர் பரபரப்பாக பேசுவதை , அந்த பசு தன் காதை ஆட்டியபடியே பார்த்துக் கொண்டிருந்தது .
விக்ரமை மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தெரிந்தவர்.
ஆமாம்; கடந்த ஆண்டு இதே மாதிரி ஒரு ஹோலி பண்டிகையின் போது நடந்தது. ஹோலியைக் கொண்டாடி வீட்டுக்கு வந்த விக்ரம் ஒரு பாக்கெட் வண்ணப் பொடி மீதமிருப்பதை என்ன செய்யலாம் என்று யோசித்தான். வீட்டருகில் பசுவைக் கட்டி பால் கறந்து தருபவரின் வெள்ளை நிறக் கன்று கட்டியிருப்பதைப் பார்த்தான். கண நேரத்தில் அவன் கபாலத்தில் உதித்தது ஒரு யோசனை.
ஜவ் மிட்டாய் கலர் பொடியை எடுத்து கன்றின் நெற்றியில் நீண்ட திலகமிட்டான். அதிலும் திருப்தி அடையாமல் தலை உடம்பெல்லாம் கொட்டி அபிஷேகம் பண்ணிவிட்டு,
” ஹே…..” என்று பெருங் குரலெடுத்து குதித்துக் கொண்டாடினான்.
பசுவின் சொந்தக்காரர் அவன் அம்மாவிடம் வந்து புகார் கூறினார். அதற்கு,
” ரெண்டு சொம்பு தண்ணி ஊத்திக் கழுவினா போய்டும். விளையாட்டா பண்ணிணதை பெரிசு பண்ணாமல் போங்கள்” என அவன் அம்மா சமாதானம் சொன்னாள்.
பசுமாட்டுக் காரர் விக்ரமின் வீட்டுக்கு வந்து “விக்ரம் தம்பிக்கு எப்டியிருக்கு, எல்லாம் தூங்கி ஏந்திரிச்சா சரியாயிடும்” என அவன் அம்மா பாணியிலேயே ஆறுதல் கூறிவிட்டு போனார்.
ஆனால் விக்ரம்தான் குற்ற உணர்ச்சியால் நெளிந்து கொண்டிருந்தான்.
இளைஞர்களின் வேடிக்கை விளையாட்டை விவரித்திருக்கும் விதம் அருமை. தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி என்ற கருத்தை வலியுறுத்தும் கதை- பாபநாசம் வேம்பு
LikeLiked by 1 person
கதையை உள்வாங்கி கருத்துரைத்தமைக்கு நன்றி
LikeLike
கதை நல்லாயிருக்கு….. ஹோலி கொண்டாட்டத்தில் உள்ள ஜாலி….. மற்றும் ஜோலி …… சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது…..
LikeLiked by 1 person
நன்றி, கதை சொல்கிறேன் ஐ தொடர்ந்து வாசியுங்கள்..
LikeLike
விடலைகளின் வேடிக்கை விளையாட்டுகள் விவரித்தமையும் அதில் படிப்பினையை இணைத்தமையும், கதை வழியே நீதியான ஒரு செய்தி சொல்லும் மரபுவழி உத்தியைப் பிரதிபலிப்பதாய்த் தெரிகிறது.
LikeLiked by 1 person
கதையை ஊன்றி படித்து அளித்த விமர்சனம். நன்றி
LikeLike
‘முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்!’
சுதந்திரமாய் கைவீசி நடக்கலாம்; ஆனால், அடுத்திருப்பவரை இடிக்கக் கூடாது!
நல்லதொரு படிப்பினைக் கதை!
சிறப்பு!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
LikeLiked by 1 person
உங்கள் பாராட்டிற்கும் கருத்துக்களுக்கும் நன்றி.. கதை சொல்கிறேன் ஐ தொடர்ந்து வாசியுங்கள்
LikeLike
அருமை.எதைப்பற்றியும் கவலைப் படாத இளைஞர்களின் கொண்டாட்டம் சில நேரங்களில் வினையாய் முடிந்து விடுகிறது.
LikeLiked by 1 person
கதையை உள்வாங்கி கருத்துரைத்தமைக்கு நன்றி.. கதை சொல்கிறேன் ஐ தொடர்ந்து வாசியுங்கள்
LikeLike