முதுமையின் காரணமாக ஞாபக மறதி வந்து விட்டது. எதையும் வைத்த இடம் மறந்து போய் விடுகிறது. தங்கப் பாண்டி எழுந்ததிலிருந்து கை தவறி வைத்த ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
தங்கப்பாண்டி பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த போதே, ஊர்க் கொடைக்கு சென்னையிலிருந்து வந்த ஒரு மளிகைக் கடை அண்ணாச்சியால் சென்னைக்கு கூட்டி வரப்பட்டான். அண்ணாச்சி வீட்டிலேயே சாப்பாடு, படுக்கை எல்லாம். அதனால் வேலை நேரம் என்று தனியாக ஒன்றில்லை.
பதினெட்டு வயதானதும் இருசக்கர ஓட்டுநர் ஒரிமம் பெற்று, ஒரு டிவிஎஸ் வண்டியும் வாங்கிக் கொடுத்து அவனைக் கொள்முதல் வேலைக்கு அனுப்பினார். நள்ளிரவு மூன்று மணிக்கெல்லாம் கிளம்பி கோயம்பேடு போய் காய்கறி வாங்கி காலை ஆறு மணிக்குள் கடைக்கு வந்திடுவான். அதேபோல் மொத்த விற்பனைக் கடைக்கு மதிய வேளையில் சென்று மளிகைக் கொள்முதல் செய்து வருவான்.
கொள்முதல், வியாபாரம் என இரண்டிலும் தேர்ந்தவன், தன் இருபத்தியிரண்டாவது வயதில் தனிக்கடை போட எண்ணினான். ராமாபுரம் மணப்பாக்கத்தில் வளர்ந்து வரும் நகர் ஒன்றில் பத்துக்கு பதினைந்து அடி அளவில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து மளிகை வியாபாரம் தொடங்கினான். ஊரில் இருந்த ஒரே சொந்தமான அம்மாவை கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.
கடின உழைப்பாளி. சம்பாதித்ததை யெல்லாம் சங்கத்தில் சீட்டு கட்டி சேர்த்தான். சேர்த்ததன் பலன் மணப்பாக்கத்திலேயே ஒன்றரைக் கிரவுண்டு இடமும் வாங்கி விட்டான். அடுத்தது என்ன திருமணமா? அதுவும் முடிந்து விட்டது. தரை தளத்தில் ஐந்து போர்ஷன், மாடியில் ஆறு போர்ஷன் என்று கட்டி முடித்து விட்டான். தரை தளத்தில் நான்கு வாடகைக்கும், ஒன்று டபுள் சைசில் தங்களுக்காகவும் கட்டிக் கொண்டான்.
மகன் வீடு கட்டியதைப் பாரத்த சந்தோஷத்தோடே சில மாதங்கள் வாழ்ந்து விட்டு அம்மா போய்ச் சேர்ந்து விட்டாள்.
“வயதான காலத்தில் இப்போது போல வேலை செய்ய முடியாது. இந்த வீட்டு வாடகை நம்மைக் காப்பாற்றும்”
என்று மனைவியிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான்.
அவனுக்கு ஓரே மகன்தான். சுமாராகத்தான் படிப்பான். மற்றபடி கடை வேலையெல்லாம் அத்துபடி. அவனுக்கு புல்லட் வண்டி வாங்கிக் கொடுத்து, மகன் பந்தாவா பவனி வருவதைப் பெருமையாகப் பார்ப்பார்.(இனி தங்கப்பாண்டியை மரியாதையாக அழைப்போம்)
தன்னைப்போல் பனியனும் லுங்கியுமாக மகன் நின்றால் பிடிக்காது. டீ ஷர்ட்டும், ஜீன்ஸுமாக பார்க்கவே பிடிக்கும்.
மகன்தான் தங்கபாண்டிக்கு ஊன்றுகோல். ஆனால் என்ன கொஞ்சம் சகவாசம்தான் சரியில்லை. “கல்யாணம் செஞ்சு வைச்சா சரியாயிடுவான்”; என்ற ஆண்டாண்டு கால மொழிக்கேற்ப நல்ல பெண்ணைப் பார்த்து கட்டி வைத்தார்கள்.
தங்கப்பாண்டி மனைவி நோய் கண்டு மாண்டு போனாள். சிறகொடிந்த பறவையாக பதுங்கி வாழ விரும்பிய தங்கப்பாண்டி கடைக்கு போவதையே நிறுத்தி விட்டார். மகன்தான் எல்லாம். பேரன், பேத்தியிடம் விளையாட்டு, மாலையில் பூங்காவில் நடைப்பயிற்சி என நித்திய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.
மேல் கண்டிப்பு இல்லாததால் மகன் மனம் போன போக்கில் வாழத் தொடங்கி விட்டான். பகலிலேயே குடித்து விட்டு கடையில் தூங்கி விடுவான். ஆளைக் காணோமே யென்று தங்கப்பாண்டி சாப்பாடு எடுத்துப் போனால் அவன் அங்கே அலங்கோலமாகக் கிடப்பான். ஒரு கட்டத்தில் கடையைத் திறக்காமலேயே குடித்து விட்டு வீடு வந்து தூங்கிடுவான்.
தங்கப்பாண்டி யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டார், கடையை காலி செய்வதென்று. கடை ரேக்குகளை விலை பேசி விற்று விட்டார்.
மகனுக்கா கவலை இல்லை. அவனுக்கு பருத்தி புடவையாகக் காய்த்தது போல இருந்தது.
நாள் தோறும் குடிக்க பணம் கேட்கத் துவங்கினான். தங்கப் பாண்டி ஒரு வீட்டின் வாடகை ஆறாயிரம் ரூபாயை அவன் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டார். மற்ற வீடுகளின் வாடகையில் இருந்து குடும்ப செலவு போக மீதம் பேரன் பேத்திக்கான சேமிப்பு.
மகன் நாள் தோறும் அல்லது இரண்டு நாளைக்கொரு முறை குடித்தனக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக குடிப்பதற்காக முன்னூறு நானூறு என்று வாங்கிவிடுவான். எல்லாரும் வாடகை தரும் போது அவனுக்கு ஐந்நூறு வந்தாலே அதிகம்.
மகன் காலையில் பழைய சாதத்தை கரைத்து ஒரு சொம்பில் வாங்கிக் குடித்து விட்டு வெளியே போவான். பன்னிரண்டு மணிக்கு பாட்டிலோடு வந்து பின் பக்க படியில் உட்கார்ந்து குடிப்பான், புகை பிடிப்பான்; ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு தூங்கிடுவான். பேத்தி பெரியவளானதும் மகன் மாறிடுவான் என்று நம்பிக்கையோடிருந்தார். ஆனால் நாளாக ஆக அவனின் குடித்தேவை அதிகரித்தது. இன்னும் அதிகளவு சரக்கு குடித்தால் தான் அந்த அளவு போதை கிடைக்கு மென்றாகிவிட்டது. அடுத்த மாத வாடகையில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாமென குடித்தனக்காரரிடம் சண்டையிட்டு பணம் கேட்கத் தொடங்கினான்.
அப்பாவிடம்,
“ரெண்டு வீட்டு வாடகை தனக்கு வேண்டும்; ஏற்பாடு செய்து கொடு”
என்று தினந்தோறும் பஞ்சாயத்து.
அவருக்குத் தெரியாமல் மனைவியின் நகைகள் வேற மார்வாடிக் கடைக்கு போயிருந்தன.
“ஏண்டி அந்த நெக்லஸ் சும்மாதானே பீரோவில் கெடக்கு; அத குடு, அடுத்த மாசம் மூட்டு தர்றேன்”
“மாமாவை கேட்டுட்டுட்டு தர்றேன்”
“ஏய் , உன்கிட்ட என்ன கேக்குறது” என்று தானே எடுத்துப் போய்விட்டான். இது போல பல முறை பல நகைகள்.
ஆண்டு முடிவில் அங்கிருந்து நினைவூட்டுக் கடிதம் வருவதைப் பார்த்து விபரம் அறிந்து,
“ஏம்மா எனக்குத் தெரியாமல் நகைகளைக் கொடுத்தாய்?”
என்று மருமகளைக் கடிந்து கொண்டார்.
“இல்லை மாமா, அவர் என்னைக் கை நீட்றளவுக்கு வந்திட்டார்; பிள்ளைகள் நடுநடுங்கி விட்டார்கள்; அதான்” மருமகளின் மறுமொழி.
நாளாக ஆக நிலைமை மோசமானது. வெளியிலே குடித்து விட்டு எங்காவது மரத்தடியில் துணி போகிற போக்குகூட தெரியாமல் விழுந்து கிடப்பதும், தங்கபாண்டி போய் ஆட்டோவில் தூக்கிப் போட்டு வருவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது.
இதைப் பார்க்கும் பேரப்பிள்ளைகள் மனதளவில் பாதிப்படைந்து விட்டார்கள்.
பள்ளியில் மற்ற பிள்ளைகளோடு சகஜமாகப் பழகுவதையே
நிறுத்திவிட்டார்கள். தவறிப் பேசினாலோ,
“டீ உன் அப்பா இன்றைக்கு.. “
என அவன் எங்காவது துணியின்றி கிடந்ததைக் கூறுவார்கள்.
இதனாலெல்லாம் பிள்ளைகள் மட்டுமன்றி தங்கப்பாண்டியும் பாதிப்படைந்து நடைப் பிணமானார். மருமகளும் மெலிந்து, கூன் போட்டு சோபை இழந்து போனாள்.
இந்த நிலையில் கொரோனா வந்து ஊரடங்கு அறிவிப்பு வந்தது. எல்லா கடைகளையும் போல டாஸ்மாக்கும் மூடப்பட்டது.
நாட்கள் செல்லச் செல்ல மகனின் மனோநிலை மாறியது. எல்லார் மீதும் கோபத்தைக் காட்டினான். தங்கப்பாண்டியோ நல்லகாலம் பிறந்ததாக எண்ணினார். ஆம், நாற்பது நாட்களாக மகன் குடிக்காமல் இருக்கிறானே!
அரசாங்கமே இப்போதைக்கு இப்போதையை மீணடும் திறந்து விட்டிடாதே! நிறைய குடும்பங்களில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைக்கட்டும்.
அவர்களின் நிம்மதி நீடிக்க வில்லை. அரசு கஜானா காலி, டாஸ்மாக் ஒன்றே வழி என மதுக்கடைகளை திறக்க அரசாங்கம் முடிவை அறிவித்தது.
மார்ச், ஏப்ரல் என இரண்டு மாதம் குடித்தனக்கார்கள் யாரும் வாடகை தரவில்லை. அன்று மாலை கீழே குடியிருப்பவரில் ஒருவர் வந்து
“அப்பா இரண்டு மாத வாடகை சேர்ந்து விட்டது. இதுவே கஷ்டம்; இன்னும் சேர்ந்து விட்டால் பெருங்கஷ்டம். அதனால ஒரு ஒரு மாச வாடகை மட்டும் இந்தாங்க “
என்று கொடுத்தார்.
தங்கப்பாண்டிக்கு என்னவோ செய்தது.
“இதக் கொடுத்திட்டு சமாளிக்க முடியமா”ன்னு கேட்டார்.
அதற்கு, “பார்த்துக் கொள்ளலாம்” என்று போய் விட்டார்.
தங்கப்பாண்டி எந்தப் பணம் வந்தாலும் மனைவியின் படத்துக்கு முன் உள்ள ஸ்டாண்டில் வைத்து விட்டு, பிறகுதான் உள்ளே எடுத்து வைப்பார். இப்போதும் அப்படியே வைத்தார்.
மறுநாள் டாஸ்மாக் திறக்கிறது; யார்யாரிடமோ பணத்துக்கு அலைந்தான்; ஒரு பிரயோசனமும் இல்லை. அவன் எங்கெங்கோ சுற்றிவிட்டு இரவு பத்து மணிக்கு மேல வந்து இட்லியை சாப்பிட்டு விட்டு தூங்கப் போனான்
காலையில் யார்யாரிடம் ஆதார் கேட்பதென்று யோசித்தவாறே துங்கிப்போனான்.
மனைவியிடம் வழக்கம் போல பழைய சாதம் கரைத்து வாங்கிக் குடித்து விட்டு கிளம்பினான்.
அப்போது ஆறு சிப்பம் அரிசி கொண்டு வந்து இறக்கினார்கள். ஒரு சிப்பத்தை பிரித்து அரிசி தரம் பார்த்தான்.
கொஞ்சம் வாயிலிட்டு மென்று சாப்பிட்டுக் கொண்டே கிளம்பிப் போனான்.
எங்கு போகிறான் என்கிற விபரமெல்லாம் கூறமாட்டான். மதிய சாப்பாட்டுக்கு மட்டும் வருவான்.
தங்கப்பாண்டி எதையோ தேடிக் கொண்டிருந்தார். மருமகளிடமும் பேரப்பிள்ளைகளிடமும் கூறாமலே தேடிக் கொண்டிருந்தார்.
மதிய சாப்பாட்டு நேரம். மகனுக்காக காத்திருந்தார். மகன் இன்னும் வராததால் மருமகளிடம் கேட்டார்,
“அவன் ஏதாவது சொல்லிவிட்டுப் போனானா?”
மருமகள், “இல்லை” என்றாள்.
வெளியில் வந்து கொஞ்ச நேரம் நின்றிருந்தார். மகனின் சிநேகிதர்களிடம் கேட்டுப் பார்த்தார். எல்லாரும் பார்க்கவில்லையென்றே சொன்னார்கள்.
மாலை ஐந்து மணியளவில் நான்கு குடித்தனக் காரர்கள் ஒன்றாக வந்தார்கள்.
“அப்பா, ஒருமாத வாடகை வைத்துக் கொள்ளுங்கள் நிலைமை சீரானதும் பாக்கி வைக்காம தந்திடுறோம்”
என்று கொடுத்துவிட்டுப் போனார்கள். அவர்களிடமும் மகனைப் பற்றிக் கேட்டார். அவர்களுக்கும் தெரியவில்லை. எங்காவது விழுந்து கிடந்திருந்தால் இன்னேரம் செய்தி வந்திருக்கும்.
இருபத்தி நாலாயிரம் ரூபாயையும் மனைவி படத்துக்கு முன் வைக்கப் போனவருக்கு ஞாபகம் வந்தது. நேற்று பணத்தை இங்குதான் வைத்தேன். வீணே வீடெலலாம் தேடினேனே; ஆனால் பணத்தை இப்ப காணோமே!
அப்போது சிலர் அவசரமாக அவரைத் தேடிக் கொண்டு வந்தார்கள்,
“உங்க மகன் மணப்பாக்கம் வடநாட்டு தொழிலாளர் ஷெட்டில் கிடக்கிறான்” என்றார்கள்.
தங்கபாண்டி அலறி அடித்துக்கொண்டு ஓடினார்.
“காலைல டாஸ்மாக்குல ஏழெட்டு ஆதார் கார்டைக் காட்டி ஐயாயிரம் ரூபாய்க்கு பாட்டில் வாங்கியிருக்கான். அப்பறம் வாட்டர்,சைடு டிஷ் எல்லாம் வாங்கிக் கொண்டு இங்க வந்திருக்கான். வடநாட்டுக் காரர்களெல்லாம் சொந்த ஊர் போயிட்டதால இந்த எடம் காலி. இங்கேயே ஆற அமர இருந்து எல்லாத்தையும் குடிச்சிட்டு மல்லாந்து கெடக்கான்” என்றார்கள்.
புரட்டிப் பார்த்தார்கள். வாந்தியெடுத்து அதிலேயே கிடந்தான். புரட்டியவர் ஷாக் அடித்தாற்போல் நின்றுவிட்டார் . அவன் செத்து விட்டிருந்தான். அதிகம் குடித்து நாவறண்டு செத்துப் போய்விட்டான்.
“அப்பா, உங்க மகன் ஏமாத்திப்புட்டான்”
தங்கப்பாண்டிக்கு உண்மை புரிந்தது; தன் பணம் போன இடம் தெரிந்தது.
அவர் மனைவி உயிரோடிருந்த போது எப்படி அவருக்குத் தெரியாமல் மகனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாளோ, அதேபோல இப்போதும் கொடுத்திருக்கிறாள்.
இதைவிட வேறு ஒரு சந்தேகமும் உண்டு.
தங்கப்பாண்டி உண்மையில்தான் பணத்தை உள்ளே எடுத்து வைக்க மறந்து விட்டாரா?
இதைவிட வேறு ஒரு சந்தேகமும் உண்டு.
தங்கப்பாண்டி உண்மையில்தான் பணத்தை உள்ளே எடுத்து வைக்க மறந்து விட்டாரா? (இவ்வரிகளைத் தவிர்த்திருக்கலாம். )
LikeLiked by 1 person
நேரடியாக குடிப்பதற்கு கொடுக்க முடியாது; ஆனால் மகன் மீது இருந்த இரக்கத்தால் மறைமுகமாக கொடுத்தாரோ என்ற ஒரு ஐயப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டும்..
LikeLike
இது கதையல்ல நிஜம்.
LikeLiked by 2 people
இது கதையல்ல நிஜம்
LikeLiked by 1 person
ஆம்.. நம்மில் பலரும் அன்றாடம் இத்தகைய கதைகளை கடந்து வருகிறோம்..
LikeLike