ஊரின் வடகிழக்கில் பிடாரியம்மன் கோவில். பக்கத்தில் வீடுகளேதும் இல்லை. சுற்றிலும் வயல் வெளிதான். கோவில் எதிரில் கொஞ்சம் தள்ளி ஒரு குளம். செந்தாமரை நிறைந்த குளம். அதையொட்டி பெரிய திடல். திடலுக்கும் குளத்துக்கும் இடையில் பெரிய ஆலமரம். ரொம்ப வருடமாக இருக்கிறதாம். திடலில் தான் அறுவடைக் காலத்தில் நெல் அடிப்பார்கள், வைக்கோல் போர் போடுவார்கள். பின் வைக்கோலைப் பரப்பி மாட்டை விட்டு போரடிப்பார்கள்.
அந்த தனி ஆலமரம்தான் ஊர்ப் பிள்ளைகளுக்கு விளையாடுமிடம். மாலை நேரத்திலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் மொத்த பிள்ளைகளும் அங்குதான் இருப்பார்கள்.
மாலை ஐந்து மணிக்கு மேலானால் போதும் ஊர்ப்பட்ட பறவைகள் ஆலமரத்துக்கு வரத்தொடங்கிவிடும். நார்த்தம் பிள்ளை எனப்படும் மைனா குருவியின் குரல் மட்டும் தனியாகக் கேட்கும்.
மைனா மட்டுமல்ல, காக்கா, கொக்கு,நாரை இன்னும் பெயர் தெரியாத பறவைகளும் தத்தம் சொந்த பந்தங்களோடு கொஞ்சிச் சிரித்து குதூகலிப்பது ஒரு சுவையான சிம்பொனி.
பல்வேறு இசைக்கருவிகளின், வெவ்வேறு சுருதிகளில் அமைந்த பன் மொழிப் பாடல்களாக ஒலிக்கும். அந்த கச்சேரியைக் கேட்க ஆளில்லா விட்டாலும் பல மணி நேரம் தொடர்ந்து நடக்கும்.
அவைகள் அப்படி என்னதான் பேசிக் கொள்ளுமோ?
” நீ எங்கெல்லாம் இன்னைக்கு போனே?”
” நானா, நான் மட்டுமில்ல, ஒரு பத்து பேரு சேர்ந்து கெழக்கால இருக்கிற பக்கத்து ஊருக்கே போய்ட்டோம். நீங்க ?”
” நாங்களும் பத்து பேரா சேர்ந்து மேற்கால இருக்கும் ஊருக்குப் போனோம்”
இப்படித்தான் பேசிக் கொள்ளுமோ!
ஆனால் ஒரே மரத்தில் நானாவித பறவைகள் வந்து தங்கிச் செல்வது விந்தைதான். அம்மரத்தில் அவர்களுக்கிடையே எந்த வர்ணபேதமும் இல்லை. பறவைகள் என்ற ஒற்றைச் சொல்லே அவர்களை இணைத்திருந்தது.
சுந்தரராசு தினமும் ஆலமரத்தடிக்கு வந்தாலும் யாரும் அவனை விளையாட்டில் சேர்ப்பதில்லை. அவன் ஒருவன்தான் கோவிலைத் தாண்டி உள்ள பள்ளமான தெருவில் இருந்து வருபவன்.
பறவைகளுக்கிடையே வர்ணபேதம் இல்லை; அதனால் அவை மரத்தின் மேலே தங்குகின்றன.
ஆனால் மனிதர்க்குள் வர்ணபேதம் உண்டு; அதனால் அவர்கள் மரத்தின் கீழே இருக்கிறார்கள்.
இந்த வர்ணபேதம் ஒழிய எத்தனை தலைமுறை ஆகுமோ.
மரத்தின்மீது பறவைகள் சமத்துவமாக இருப்பதைப்போல, மண்ணில் மனிதர்கள் சமத்துவமாக வாழ்வதெப்போ?
தான்தான் மாற்றவேண்டும் போலிருக்கிறது என சுந்தரராசு வேடிக்கையாக கற்பனை செய்து கொள்வான்.
சுந்தரராசுவின் அப்பா ஒரு விவசாயக் கூலி. அவன் ஒரு மிராசு வீட்டில் பண்ணையாளாக வேலை செய்கிறான். அவனுக்கென்று எந்த நிலமும் இல்லை. எல்லாரைப்போல அவனுக்கும் பட்டா இல்லாத ஒரு வீட்டு மனைதான். அதில் மழை வந்தால் ஒழுகும், வெயில் நேரே உள்ளே காயும் கூறை வீடு.
தன்னைப் போலில்லாமல் மகன் ஓரளவேனும் படித்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். சுந்தரராசுவும் கருத்தாகப் படித்து பன்னிரண்டாம் வகுப்பு தேறினான்.
சமூகப் பாடத்தில் ஒருநாள் ஆசிரியர் வீடுகள் கட்டும் முறை பற்றி விளக்கினார். ‘குடியிருப்பு வீடுகள் எல்லாம் மேட்டுப் பாங்கான இடத்தில் கட்டப்படவேண்டும்; அப்போதுதான் மழையோ வெள்ளமோ சூழாமல் குடியிருப்பு பாதுகாப்பாக இருக்கும்’ என்றார். இதைக் கேட்டதும் சுந்தரராசு துணுக்குற்றான். தங்களுடைய வீடுகள் மட்டும் ஏன் பள்ளமான இடத்தில் என்ற கேள்வியை தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
கணித ஆசிரியர் ஒன்றிரண்டு கணக்குகளை கரும்பலகையில் போட்டுக்காட்டிவிட்டு,
“மற்ற கணக்குகளை யார் வந்து போடுகிறீர்கள்”
என்று கேட்டவுடனேயே சுந்தரராசுதான் எழுந்து நிற்பான். எல்லா கணக்குகளையும் அவனே போட்டு விடுவான். கணிதப் பாடத்திலுள்ள சூத்திரங்களை பொலபொலவெனக் கொட்டுவான்.
இது போலவே தமிழ், ஆங்கிலப் பாட வகுப்புகளிலும் இலக்கணக் குறிப்புகள், செய்யுளுக்கு பொருள் கூறுதல் எல்லாமும் அவன்தான்.
இயற்பியல், வேதியல் பாடங்களையும் அவன் விட்டு வைக்க வில்லை. அந்த பாடங்களில் உள்ள ஃபார்முலா எல்லாவற்றையும் தலைகீழ் மனப்பாடமாகச் சொல்வான்.
வகுப்பில் பாடங்களில் முதல் மதிப்பெண் மானவனாக இருந்தாலும், ஒரு வகுப்பில் கூட அவன் வகுப்புத் தலைவனாகவில்லை.
படிக்கும் காலத்தில் பள்ளியில் அவனுக்கு ஒரேயொரு ஆண் நண்பனும், ஒரேயொரு பெண் நண்பியும் மட்டுமே. அவர்களும் ஊரறியாமல்தான் பழகுவார்கள். அவர்கள் ஈர்க்கப்பட்டதே அவனுடைய அறிவுக் கூர்மையால்தான்.
பெண் நண்பி மட்டும் நாள் தவறாமல் ஏதாவது திண்பண்டம் கொண்டு வருவாள். முறுக்கு, சீடை, அதிரசம் போன்றவையோடு வேற சிலவும் வரும். இரண்டாகப் பிட்டால் நூல் வரும் வடை, பிடிக் கொழுக்கட்டை, நீர் உருண்டை எல்லாம் வரும். ஓரிருமுறை பால் கொழுக்கட்டை என்ற திட்டிப்பால் மூடி போட்ட டப்பாவில் எடுத்து வந்திருந்தாள்.
இப்படி யெல்லாம் பலகாரங்கள் உண்டென்பது அப்போது அவளால்தான் தெரிந்து கொண்டான்; அதுவரை அவை பெயர்களைக் கூட அவன் கேட்டிருக்கவில்லை.
ஆறாம் வகுப்பு வரை ஒன்றுமில்லை; பின்னர்தான் அவள் கண்களில் ஏதோ ஒன்று தெரியத் தொடங்கியது. இவன் மனதிலும் ஏதோ ஒன்று மெலிதாக எரியத் தொடங்கியது.
“எதற்காக தெனமும் ஏதாச்சும் கொண்டாற”
“ஒன்ன வுட்டுட்டு சாப்ட முடியல, ராசு”
“ஏனாம்?”
“தெரியலையே”
“நான் சொல்லட்டா, என்ன மனசுக்குள்ள வெச்சு பூட்டிப்புட்ட”
“ராசு, என்னோட ஆசை நெறவேற நீதான் “
“………………”
“என்னா பேச்சையே காணோம் ?”
“நம்ப சமுதாயத்த பத்திதான் நல்லா தெரியுமே. ஆணவக்கொலை செய்யிற ஜனங்க. நான் ஒரு நல்ல வேலை தேடிக்கிட்டா ஒருவேளை நடக்கலாம்”
“அப்போ அதை சீக்கிரமா தேடு; எல்லாம் நடக்கும்”
சுந்தரராசுவும் நண்பியும் பலமுறை பேசி முடிக்கையில்,
“அப்போ அதை சீக்கிரமா தேடு; எல்லாம் நடக்கும்” என்றே பேச்சு முடிவடையும்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த உடனேயே அவளுக்கு திடீரென திருமண ஏற்பாட்டை தொடங்கி விட்டார்கள். அவள் சுந்தரராசுவிடம் வந்து நிலைமையைச் சொல்லி அழுதாள். சுந்தரராசுவுக்கும் துக்கம் பீறிட்டாலும் காட்டிக் கொள்ளாமல் பேசினான்,
“நம் எண்ணம் ஈடேற வழியில்லை. எந்த வேலையோ வருமானமோ இல்லாம நாம எந்த துணிச்சல்ல கல்யாணமுடிவு எடுக்கறது. உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்துட்டு பின்னாடி கஷ்டப்டக்கூடாது. படிக்க வேண்டும், இப்போதைக்கு கல்யாணம் வேண்டம்னு பேசிப்பாரு” என்றான்.
ஆனால் அவள் வீட்டில் கல்யாணத்தை நடத்தி முடித்து விட்டார்கள்.
சுந்தரராசு மனமொடிந்து போனான். ஊமை கண்ட கனவு.
நண்பிக்கு கல்யாணம் முடிந்த பின் சுந்தரராசுவுக்கு ஊரே பிடிக்கவில்லை. தினமும் நெடுநேரம் ஆலமரத்தினடியில் அமர்ந்திருப்பான். குளத்தினருகே போய் தாமரை மலர்களைப் பார்த்துக் கொண்டிருப்பான். திடீரென்று பச்சைத்தவளை நீரின் மேற்பரப்பினூடே ‘சளச்சள..சளச்சள’ வென அடித்துக் கொண்டு செல்லும். அது தண்ணீருக்கு மேல் பறந்து போகிறதா அல்லது நீச்சலடித்துப் போகிறதா எனத் தெரியாது.
சுந்ரராசு மரத்தடியிலே நேரத்தைக் கழித்தாலும் ஒருபோதும் அருகிலிருக்கும் பிடாரியம்மன் கோவிலுக்குள்ளே போனானில்லை.
இந்நிலையில் திருச்சியில் ராணுவத்துக்கு ஆள் எடுப்பது அறிந்து சுந்தரராசு அங்கு போனான். ராணுவத்தில்தான் சிபாரிசு, கீழ்ச்சாதியை ஒதுக்குவது எல்லாம் கிடையாதே; தகுதி மட்டும் தானே தேவை. அது அவனிடம் தேவைக்கு மேலேயே இருந்ததால் தேர்வாகி, டேராடூனோ எங்கோ பயிற்சிக்குப் போனான். அவன் அப்பா மகிழ்ந்து போனான்.
அவன் நண்பன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தான். அப்போதெல்லாம் அதுவே எளிதானதாக இருந்தது. பயிற்சி முடித்ததும் உள்ளூரிலேயே எப்படியும் ஆசிரியராக வேலை செய்யலாம்; அத்துடன் விவசாய வேலைகள் இருந்தால் அதையும் கவனித்துக் கொள்ளலாம்.
மாதந்தோறும் அப்பாவுக்கு பணம் அனுப்புவதோடு,
“வேலைக்குப் போகாதே”
என கட்டளை இட்டுப் பார்த்தான். அப்பா என்ன பட்டாளத்தானா கட்டளைக்குக் கீழ்ப்படிய ?
மூன்றாண்டுகளுக்குப் பின் ஊர் வந்தான் சுந்தரராசு.
“அப்பா, நஞ்சை நிலம் ஒரு ஏக்கர் பாரு. நல்லா இருந்தா வாங்கிடலாம்”
“வாங்கி?”
“வாங்கி, நீ பயிர்ச்செலவு பாரு. யார் கிட்டேயும் போய் பண்ணையடிக்க வேணாம்”
அப்பா செய்யமாட்டானென்று தெரியுமாதலால் நண்பன் மூலமாக ஏற்பாடு செய்து வாங்கி விட்டான்.
இப்படியே மூன்றாண்டுக்கு ஒரு முறை வரும் போதெல்லாம் நிலம் வாங்கிக் கொண்டே இருந்தான். அவன் நல்ல நேரம் அமைந்த தெல்லாம் பழைய நிலத்துக்கு அடுத்தடுத்தே அமைந்து விட்டன.
பண்ணையாளாக இருந்த அப்பா இப்போது பண்ணையாராக மாறினார்.
கடைசியாக விடுமுறையில் வந்த போது ஊரில் பெரிய பிரளயமே நடந்து விட்டது. ஊரில் படிப்பகம் கட்ட திடடமிட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கான இடமாக ஆலமரம் இருக்குமிடத்தை தேர்வு செய்து, அதை வெட்டி அப்புறப் படுத்த ஏற்பாடுகள் நடந்தன. இதை அறிந்த சுந்தரராசு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தான். பல ஆண்டு பழைமையான மரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்தான். ஊரில் அண்மைக்காலமாக வளர்ந்து வரும் ஆளுங்கட்சி உறுப்பினர் பகையானார்.
“சுந்தர்ராசு, நீ செய்யறது ஒன்னும் சரி கெடையாது; ஊருக்கு ஒத்துழைக்கனும்”
“படிப்பகம் கட்டுரதுல எனக்கு ஆட்சேபனை கெடையாது; ஆலமரத்த வெட்டுரதுதான் கூடாது”
“இந்தோ ..லீவு முடிஞ்சி நீ ஊருக்குப் போயிடுவ.”
“எங்க போனாலும் என் மூச்சு இங்க வந்துதான் போவும். ஊருக்குள்ள இருக்கிற பிள்ளையார் கோவில் பக்கத்துல பொறம்போக்கு எடம் இருக்குல்ல, அங்க கட்டிக்கலாம். என் பங்குக்கு ஐந்தாயிரம் ரூபாவை இப்பவே தலைவர்கிட்ட தந்திடறேன்” என்று உடனே ஊர் தலைவரிடம் பணத்தைக் கொடுத்தான். எப்படியோ அவன் அன்பு ஆலமரத்தைக் காப்பாற்றிவிட்டான்.
இந்த காலகட்டத்தில் அவனது நண்பி , திருவிழா, விசேடங்கள் என்று ஊருக்கு வரும் போதெல்லாம் அவளுடைய ‘ராசு’ வைப் பற்றி ஆசிரிய நண்பனிடம் விசாரிப்பாள். ஒவ்வொரு முறையும் சுந்தரராசு கல்யாணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்வதைப் பார்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பாள்.
பதினைந்தாண்டுகள் பாதுகாப்புப் பணியை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினான். இனி உள்ளூரிலேயே முன்னாள் படைவீரர் ஒதுக்கீட்டில் வேலை தேடவேண்டும்.
வடநாட்டில் பட்டாளத்தில் வேலை பார்த்தவரை சரி. ஆனால் இப்போது இங்கு வந்தபின் அந்த பேதைப் பெண்ணின் நினைவு அதிகம் வந்து வாட்டியது.
ஜாதிப் பாகுபாடு ஆத்மார்த்தமான நேசம் ஒன்றிணைய விடாமல் செய்து விட்டதே.
நண்பன், ஆலமரம், பிடாரியம்மன் கோவில்தான் இனி சுந்தரராசுவின் உறவு.
ஆசிரியராக வேலை பார்க்கும் நண்பன் ஐந்து மணிக்கெல்லாம் ஆலமரத்தினிடம் வந்திடுவான்.
சுந்தரராசு கட்டாயம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்துவான். அதுவே அவன் உணர்வில் கலந்த முன்னாள் காதலியின் விருப்பமும் என்று கூறி வற்புறுத்திக் கொண்டிருப்பான்.
ஒருநாள், “நண்பா, இதனருகிலேயே கொஞ்சம் இடம் கிடைக்குமா, வாங்கிடலாம்” என சுந்தரராசு கேட்டான்.
நண்பன், “இங்கு இருக்கும் யாரும் உனக்கு இடம் தரமாட்டார்கள். தெரியாதா உனக்கு ?” என்றான்.
“எனக்கு வேணுமே”
“எதுக்கு?”
” ஒரு இரவுப் பாடசாலை நடத்தலாம், பிள்ளைகள் படிப்பாங்க”
“சரி, எனக்கு இங்கேயே ஆறு சென்ட் இருக்கு. எடுத்துக்க”
“சும்மா வேணாம். கிரையத்துக்கு வேணும்”
“ஏன், என் மேல நம்பிக்கை அவ்ளோதானா”
” அப்படி இல்லை; கல்வியாச்சே, நாளை பின்னே ஏதும் தடை வந்துடக் கூடாதில்ல”
நண்பனின் அந்த இடத்தை வாங்கி கட்டினான். இரவுப் பாடசாலை நண்பனின் தயவில் தொடங்கி நடந்தது.
நண்பன் தன் இடத்தில் சொந்தமாகத் தொடங்கி நடத்துவதாக மக்கள் எண்ணிக் கொண்டு பிள்ளைகளை அனுப்பினார்கள்.
பதினைந்தாண்டுகளில் சமூக நீதிப் போராளிகள் தோன்றி வர்ணாசிரம வேறுபாடுகள் பெருமளவில் குறைந்திருப்பதை சுந்தரராசு கண்டு கொண்டான். இனி தன்னுடைய மனோரதம் நிறைவேறுவதில் எந்த சந்தேகமும் வேண்டாமென்று முடிவுக்கு வந்தான்.
‘ஆலமரம்’ என்ற பெயரில் ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனம் தொடங்கிடும் முயற்சியில் இறங்கினான். தன்னுடைய ஆலமரம் அமைப்புதான் இந்த மக்களுக்கு கல்வியையும், சமூக நீதியையும் போதிக்க சரியான வழி எனக் கண்டு கொண்டு அதில் தீவிரம் காட்டினான்.
சுந்தரராசுவின் அப்பா, “ஐயா ராசு, ஒனக்கும் வயசு முப்பத்தைந்தை நெருங்குது; இனிமேலயும் தள்ளிப் போடாம ஒனக்கு கல்யாணத்த பண்ணிப் பார்த்திடனும்னு எனக்கு ஆசையாயிருக்குப்பா.”
“அப்பா, புருசனை இழந்த பெண்ணை விதவைன்னு சொல்றாப்ல பொண்டாட்டிய இழந்த புருசனை தமிழ்ல என்னான்னு சொல்வோம்; எனக்குத் தெரயாது. ஆனா ஆங்கிலத்தில ‘விடோயர்’ அப்டிம்பாங்க. என்னப் பொருத்தவரை நான் ஒரு விடோயர். அதனால ஒரு விடோவை அதாவது ஒரு விதவையை முப்பது வயசுக்கு கொறையாம தேடுங்க, பண்ணிக்கலாம்” என்றான். அவன் அப்பா அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டார்.
இப்போது ஆலமரத்தின் மேலும் வர்ணாசிரமம் இல்லை;
கீழும் வர்ணாசிரமம் இல்லை.
ஏராளமான பறவைகள் தங்கிட இடமளித்தாலும்
ஆலமரமும் தனிமரம்;
சுந்தரராசுவும் தனிமரமே.
தனிமரம்

Leave a Reply