மரகதம் நிம்மதிப் பெருமூச் செரிந்தாள். எப்படியோ மகள் மைதிலி கல்யாணம் நடந்தேறப் போகிறது.
இந்தப் பாவி மரகதம், வாழ்க்கைச் சுழலில் சிக்கிச் சின்னாபின்னப் படுகிறதுக்கு முடிவு ஏற்படப் போகிறது.
மைதிலி பதினொன்றாம் வகுப்பு படிக்கையில் மரகதம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்று ஆனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தாள். இன்னும் சில ஆண்டுகளில் பேரப்பிள்ளையைக் கையிலெடுக்க வேண்டிய சூழலில் மகனா?
மைதிலியின் அப்பா இதனால் சங்கடப் படுபவர் போல் காட்டிக் கொண்டாலும், உள்ளூர மகிழ்ச்சிதான்; ஆண் வாரிசு!
மைதிலி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுதி முடித்த சமயத்தில் அவள் அப்பா டெங்கு காய்ச்சல் கண்டு படுத்தவர், எழாமலேயே போய்விட்டார். மைதிலி மேலே படிப்பதென்பது கானல்நீர் ஆனது. குடும்பத்தை காப்பாற்ற வேலை தேடினாள். ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஷெல்ப்பில் பொருள்களை அடுக்கும் வேலை. மரகதம் வீட்டிலேயே சோமாஸ், முறுக்கு தயார் செய்து அருகாமை பேக்கரிகளுக்கு வினியோகம் செய்து சொற்ப மென்றாலும் ஒரு வருமானத்தை ஈட்டினாள்.
மைதிலி தன் நிலையை நன்கு உணர்ந்த பெண். கஸ்டமர் முகத்தை தேவையின்றி நிமிர்ந்து பார்த்துப் பேசமாட்டாள். அவள் கண்களை யாரும் எளிதில் பார்த்திடவும், அதன் மூலம் அவள் எண்ணவோட்டத்தை அறிந்திடவும் முடியாது. எதிர்பாராமல் அப்பா தன் தலையில் சுமத்திச் சென்ற குடும்பச் சுமையை சுமந்து கொண்டிருக்கிறாள்.
” தம்பி நன்கு படித்து, நல்லதொரு வேலை தேடிக் கொண்டால் போதும்; அவன் அம்மாவை ஆயுசுக்கும் பார்த்துக்குவான்”
அவளது நாட்களில் அவளிடம் நட்பாக பழகியவர்களைவிட நைச்சியமாகப் பேசி வளைக்கப் பார்த்தவர்கள் தான் அதிகம்.
‘ தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்’ என பாரதியார் பாடினார்.
அதனாலென்ன, மெல்லிய மேகம் மறைத்தாலும், மறைந்திருக்கும் நிலவு நம் புத்திக்கு புலப்படுவதில்லையா? அதுபோல என்னதான் மைதிலி முகம் தவிர உடல் முழுமையும் மூடியிருந்தாலும் அவள் உடலமைப்பு ஊகங்களால் பலரையும் உன்மத்தங் கொள்ளச் செய்தது.
அவள் ஸ்டோர் மேனேஜர் முதற் கொண்டு பலரும் ஜொள் விட்டார்கள்; நூல் விட்டார்கள்; அம்பு விட்டார்கள்; இன்னும் என்னென்னவோ விட்டார்கள். மைதிலி எதற்கும் மசியாதலி யாக இருந்தாள்.
மெல்ல மெல்ல உயர்ந்து ஸ்டோருக்கு மேனேஜர் ஆகிவிட்டாள். இப்போது கடை ஊழியர்களைத் தவிர்த்து மற்றவர்களிடம் இருந்து அம்பு வந்தது. டீ ஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்டுமாக வரும் வாடிக்கையாளர்கள் வாழ்வு தரும் வள்ளல் களாக மாறப் பார்த்தார்கள். அதிலும் வழுக்கை மண்டைகாரர்கள், குங்குமப் பொட்டு வைத்தவர்கள், சந்தனக் கீற்று இட்டுக் கொண்டவர்கள் தாம் அதிக தாராளப் பிரபுவாக இருந்தார்கள். இது எதுனாலும் மைதிலியின் தவத்தைக் கலைக்க முடிய வில்லை.
மைதிலியின் தம்பி விடுமுறை நாட்களில் வேலைக்குச் சென்று கொஞ்சம் சம்பாதித்து வருவான். சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற சமையல்கார் கணேசனின் மகன் ராஜகோபாலிடம் சமையல் வேலைக்குப் போவான்.
ராஜகோபால் சிறந்த சமையல் கான்ட்ராக்டர். அப்பா கணேசன் விட்டுச் சென்ற கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுள்ளான். மூன்று தங்கைகளை படிக்கவைத்து கரைசேர்த்து விட்டான்.
தன்னை மூன்று பெண்களுக்கு அப்பாவாகப் பாவித்துக் கொண்டு வாழ்ந்தானே தவிர, ஒரு ஆடவனாகவோ, அதிலும் ஒரு வாலிபனாக எண்ணவே இல்லை. கர்மவீரன்.
மைதிலியின் தம்பி பி காம் முடித்து விட்டான், நல்ல புத்திசாலி. வயது அதிகமான பெற்றோருக்கு பிறக்கும் பிள்ளைகள் அதிபுத்திசாலிகளாக இருக்கும் என்பது உண்மைதான் போலும். கேம்பஸ் இன்டர்வியூவில் கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைத்திட்டது.
“மைதிலி, உன் குறிக்கோள்படி தம்பி வேலைக்குப் போய் விட்டான். என்னை பார்த்துக் கொள்வான்” இது அம்மா மரகதம்.
“அது சந்தோஷம் தானே அம்மா” இது மைதிலி.
” உன் பாரம்தான் இறங்கிடிச்சே. இப்பவாவது வரன் தேடலா மில்லியோ”
” என் வயசு இப்போ முப்பத்தேழு. சமவயசுன்னு பார்த்தாலும் வரனுக்கு இரண்டாம் தாரமாத்தான் வாழ்க்கைப் படவேண்டியிருக்கும்”
” கிச்சா மாமா சொன்னார், அதன் மேல் விவரம் கேட்கட்டுமா”
” இதுவரை உனக்கு பிரயோஜனமா இருந்த நான், இப்போ பாரமாத் தெரியரனாம்மா”
“ராமா..ராமா..ஏன்டி இப்படி பேசரே”
” அம்மா,கல்யாணம் வேண்டுமா வேண்டாமா என்பதல்ல கேள்வி. கட்டிக்க யார் வருவாரென்பது தான்”
“மைதிலி, இயற்கை இன்னாருக்கு இன்னாறென்று தீர்மானித்துதான் வைத்திருக்கும். நான் கிச்சாவிடம் பேசறன்”அந்த சம்பாஷனை முற்றுப் பெற்றது.
‘மிக அதிக வயதான பிறகு கல்யாணம் செய்து கொண்டால் பிள்ளைப் பேறு அமைவது கஷ்டமாமே. கல்யாணம் என்ற குறை தீர்ந்தாலும் குழந்தைப்பேறு என்ற குறை வந்து நிற்கும் போலும். எனக்குத்தான் பெறாத பிள்ளையாக என் தம்பி இருக்கிறானே’இவ்வாறு மைதிலி மனம் எண்ணமிட்டது.
பாலச்சந்தர் இயக்கிய படம் அவள் ஒரு தொடர் கதை. அதில் கதைநாயகி பாடும் பாடல்,
“கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்..”
இதைத்தான் மைதிலி மொபைல் ஹெட்போனில் அடிக்கடி கேட்ட வண்ணமிருப்பாள்.
ஆமாம்! அவள் கொண்ட நெருப்பு அணைத்திடும் நெருப்பு; யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு. அவளுக்காகவே எழுதப்பட்ட பாடல் போன்றே இருக்கும்.
கிச்சா மாமா ராஜகோபாலை அழைத்துக் கொண்டு வந்தார். வீட்டில் மரகதம், மைதிலி, தம்பி மூவருமிருந்தார்கள். ஸ்வீட், காரம், காஃபி சாப்பிட்டார்கள்.
கிச்சா மாமா, “மரகதம் அக்கா, இப்போதைக்கு தேவை ரெண்டு பேரோட சம்மதம் மட்டுமே. மத்தபடி ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்க்கக் கூடிய காலகட்டமெல்லாம் தாண்டியாகிவிட்டது. இத்தனை வயசுக்கு மேல மனப் பொருத்தம் மட்டும் போதும்”
மரகதம், “எனக்கும் அதுதான் கிச்சா அபிப்பிராயம்”
“ராஜகோபால் கெட்ட பழக்கம் ஏதுமில்லாதவன். வைராக்கியமா இருந்து மூனு தங்கைளை படிக்க வைச்சு நல்லபடியா கல்யாணமும் செய்ஞ்சு வைத்தவன். கடமைகளை முடித்து இப்பத்தான் தன்னைப் பற்றி யோசிக்கறான்”, கிச்சா.
இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே மைதிலி வழக்கத்தை மீறி முதன் முறையாக முகத்தை உயர்த்தி
ஒரு ஆடவனை-
ராஜகோபாலை – நேருக்கு நேர் கண்களால் பார்த்தாள்.
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் ….!
அருமை… கதை மிகவும் சுவாரஷ்யமாக போகிறது…படிக்கும் போது அலுப்பு தட்ட வில்லை.. அடுத்து என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது…வாழ்த்துக்கள்💐
LikeLiked by 1 person
ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி திரு. மணிமாறன்.
LikeLike