என் மூச்சுக் காற்று

(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
சென்னை தியாகராய நகர், டாக்டர் நாயர் ரோடு. பாண்டி பஜாரில் இருந்து இடப்புறம் திரும்பியதும் இடப்புறம் உள்ள பெரிய அப்பார்ட்மென்ட்.  முதல் மாடியில் ஜன்னல் அருகில் நான் ஈசி சேரில் உட்கார்ந்து சூடான காஃபியை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் எதிரே ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் தெரியும். நாயர் ரோடு போக்குவரத்தில் பரபரப்பாகவே இருக்கும். 

ப்படி ஓய்வாக அமர்ந்து காஃபி குடிப்பது எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால் எனக்கு காபி பிடித்திருந்தாலும், அதனோடு தொடர்புடைய நினைவுகள்தான் பிடிக்காது. நாற்பதாண்டுகள் முன் நடந்தது , இப்போதும் என் புருவ மத்தியில் நின்று வதைக்கிறது.

தெருவைப் பார்த்தாற்போல் ஈசி சேரில் அப்பா. இந்தியன் படத்தில் சேனாபதிக் கவுண்டர் போலிஸ் அதிகாரியை சந்திக்கும் போது உட்காரந்திருப்பாரே , அது மாதிரி சகல வசதியும் உள்ள ஈசிசேர். கைப்பகுதியில் இணைத்திருக்கும் கட்டைகளை நீட்டி விட்டால் கால் நீட்டி படுத்துக் கொள்ளலாம். அல்லது தாராளமாக சப்பனமிட்டு உட்கார்ந்து கொள்ளலாம். வலப்புறம் கதவு திறந்த ஜன்னல். அம்மா கொடுத்த மூக்கைத் துளைக்கும் அரோமா காஃபியை டம்ளரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக டபராவில் ஊற்றி ஊற்றி உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு இடப்புறம் கொஞ்சம் தள்ளி மரப்பெஞ்சில் நான். அம்மாவோ அடுப்படியில், ஆனால் காதுகள் மட்டும் இங்கே. ஓசை யெழுப்பாமல் டிபன் வேலை நடக்கிறது. ஓசை வந்தால் நாங்கள் பேசுவது தெளிவாகக் காதில் விழாதல்லவா. சிறு சப்தம் கேட்டாலும் வேலையை நிறுத்திவிட்டு பேசுவதைக் கவனிப்பாள்.

அப்பா காஃபியை குடித்து முடிக்குமட்டும் காத்திருந்தேன். ஒருவழியாக தன்னுடைய காலைக்கடன் – அவரைப் பொறுத்த வரை காஃபிதான் – குடித்து முடித்து டபரா டம்ளரை ஜன்னலில் வைத்தார். கண்ணாடியைக் கழற்றி மெல்லிய துணியால் துடைக்க ஆரம்பித்தார். எனக்கு இதுவே தருணமாகப் பட்டது. என் சித்தப்பாவின் மகனுக்கு திருமணம் இப்போதுதான் இனிதே முடிந்து விட்டிருந்தது. இனி இந்த ஊரில் நாங்கள் கட்டாயம் கலந்துக்க வேண்டிய விசேடம் ஏதுமில்லை. மெல்ல பேச்சுக் கொடுக்க யத்தனித்தேன்.
“அப்பா, நான் சொன்னதை யோசித்துப் பார்த்தீங்களா. என்ன சொல்றீங்க? அது சரிதானே ?”

மௌனம்; கொஞ்சம் அதிகமாக நீடித்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு அப்பா பேசத் தொடங்கினார்,
” நீ சொல்றதை மேலோட்டமாப் பார்த்தா சரியாகத்தான் தெரியும். ஆனால் சரிப்படாது “

” என்னப்பா சொல்கிறீர்கள் ? இங்கே நீங்க ரெண்டு பேரும் தனியே இருந்து கஷ்டப் படுவானேன்; அதும் இந்த வயசான காலத்தில. மருத்துவ வசதியும் கொறச்சல்தான?”

” அதென்னவோ வாஸ்தவம்தான். எல்லாத்துக்கும் மேல மனசு திருப்தின்னு ஒன்னு இருக்குதே ! அது இங்கதான் கெடைக்கும். சரி, இப்போதைக்கு வேணாம்; பிற்பாடு பார்த்துக்கலாம். காலம் எப்படி நெட்டித் தள்ளுதோ அப்படி “

” அப்பா,உங்க மனத்திருப்தி போல எங்களோட மனத்திருப்தியும் முக்கியமா படலையா? அந்த நிம்மதிய ஏன் தரமாட்டேன்கறீங்க ?”
பதிலில்லை. நீண்ட மௌனம்.

இதற்குமேல் இங்கு எதுவும் நடக்காது. அம்மாவிடம் சென்றேன். சமையலறை கதவருகில் கையில் கரண்டியுடன் நின்றிருந்த அம்மா நான் வர்ரதைப் பார்த்ததும்  சரேலென அடுப்பை அடைந்து சாம்பாரைக் கிண்டி விட்டுக் கொண்டிருந்தாள். நான் உள்ளே வந்ததை கவனித்தும் கவனிக்காதவள் மாதிரி தர்ம சங்கடமாக நெளிந்தாள். நானே ஆரம்பித்தேன், 

“அம்மா, நீயாவது சொல்லேன் “
உடனே பதிலில்லை. சிறிது நேரம் கடத்தினாள். அவள் என்ன சொல்லப் போகிறாள். இருபத்தியெட்டு ஆண்டுகளாக அவள் சுயமாக எதைத்தான் பேசியிருக்கிறாள், இப்போது பேசுவதற்கு?.

” நீயே எடுத்துச் சொல்லடா கண்ணா. பிடிவாதம் பிடித்தா இப்போ விட்டுட்டு கொஞ்ச நாள்ள மறுபடியும் பேசு. அதுவரை அவங்களும் சீர் தூக்கி பார்க்கட்டும்.” எந்த கமிட்மென்டும் இல்லாமல் அம்மா. 

” தோட்டத்தில ஹேமாவும் அருணும் இவ்ளோ நேரமா என்ன பண்ராங்கன்னு போய்ப் பார் ” அம்மா மெல்ல என்னை அங்கிருந்து நகர்த்துகிராள். இந்த சாமர்த்தியமே அவளை இருபத்தியெட்டு ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்துள்ளது.

சமையலறை யிலிரு ந்து ரேழிக்கு செல்லும் கவைத் திறந்து கொண்டு சென்று கொல்லைக் கதவை யடைந்தேன். கிணற்றடியில் என் மனைவி ஹேமாவும், ஒன்றரை வயது மகன் அருணும் எதையோ ஒரு குச்சியால் விரட்டிக் கொண்டிருந்தார்கள். பின் தாழ்வாரத்தில் இருந்து பத்து படிகள் இறங்கி மண் தரைக்கு வந்தேன்.
” ரெண்டு பேரும் என்ன செய்றீங்க ” என்று கேட்டபடியே அவர்களை நெருங்கினால்,ஒரு தவளையை அருண் விரட்டிக் கொண்டிருந்தான், “போ…போ…”

தொங்கிப்போன என் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலே ஹேமா தெரிந்து கொண்டு விட்டாள்; இம்முறையும் தோல்விதான். நானும் சற்றும் தன் முயற்சியில் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல எத்தனை முறைதான் முயல்வது. அப்பா வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக் கொள்கிறது.

ஹேமா, ” சரி…சரி.. இன்னும் காலம் கனியவில்லை, விட்டுப் பிடிப்போம். விடாப்பிடியா நின்னா அவரும் பிடிவாதம் பிடிப்பார்” என்றாள். அதென்னவோ உண்மைதான்.

சிரியராக வேலை பார்த்து ரிடையர்டு ஆனாலும் பழைய மணவர்கள், வெளியூர் களிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் வரும் போது அப்பாவை கட்டாயம் பார்த்துச் செல்வார்கள். அதுகூட அவரின் முடிவுக்கு ஒரு காரணமாகும்.

மாலையே 110 ரயிலில் சென்னைக்கு புறப்பட்டோம். வழக்கம் போல அம்மா அவள் பங்குக்கு ஒரு குறையும் வைக்க வில்லை. மோர் மிளகாய், சுண்ட வத்தல், கொத்தவரை வத்தல், கூழ் வடாம், தாளிக்க கருவடகம் இத்யாதிகளை சிறுசிறு பாலித்தின் கவர்களில் போட்டு , வாயை ரப்பர் பேண்டு போட்டு சுற்றினாள்.
” ஊருக்கு போனதும் ஏர் டைட் டப்பாவுல மாத்திடுங்க”

மாலை 6 மணிக்கு பாபநாசம் போய் ரயிலைப் பிடித்தால் விடியற்காலை 5 மணிக்கெல்லாம் மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கிடலாம் லேட் இல்லை யென்றால்.

இதற்குப் பின்னும் பல முறைகள் பலனளிக்காத முயற்சிகள். எல்லா நேரத்திலும் அப்பா பிடிவாதமா மறுத்து விட்டார். அவர் எண்ண வோட்டத்தை நான் நன்கறிவேன்.
அவர் அப்பாவும், அம்மாவும் சென்றடங்கிய காவிரிக் கரையிலேயே தானும் சென்றடங்க வேண்டும் என்பதுதான் அது. இதை அவர் பல ஆண்டுகள் முன்பே ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லி யிருக்கிறார். நிச்சயம் அவர் வர மாட்டார்.

யசானவர்கள் எல்லாருமே அவர்களின் இளமைக் கால நிகழ்வுகளில் மூழ்கிப் போகிறார்கள். அப்படி மூழ்கியதால்தான் அவர் வரவில்லை.

வராமலேயே இருந்து விட்டார், அம்மா போன பின்னும். 
ஊரிலே அது பெரிய இரண்டு கட்டு வீடு. பின்கட்டில் ஒரு குடித்தனத்தை ஏற்பாடு செய்து வைத்தேன். மூப்பனார் சத்திரத்தில் சமையல் வேலை செய்யும் மணி அய்யரை குடியமர்த்தினேன். அவர், மனைவி, 9 வயது பெண் என மூவர் அடங்கிய திட்டமிட்ட குடும்பம்.

அப்பாவின் சாப்பாடு பிரச்சனை தீர்ந்தது. மணி அய்யர் தானே சமைத்து கொடுத்திடுவார். எல்லாம் அப்பாவின் விருப்பத்தை அறிந்து பூர்த்தி செய்யும் விதமாக செய்திடுவார்.

மெல்ல மெல்ல நரை, திரை, மூப்பு என்று வந்து கடைசியில் சாக்காடும் வந்து விட்டது. 
எல்லா காரியத்தையும் நிறைவேற்றிவிட்டு , ஊருக்கு வரும் போது மணி அய்யரிடம் சொல்லி வந்தேன், 
” அண்ணா, காலியா இருக்கிறதேன்னு முன் கட்டை யாருக்கும் வாடகைக்கு தர வேண்டாம். அது முழுக்க அப்பாவோட மூச்சும், வாசமும் நெறைஞ்சு கெடக்குது.”


ருண் வளர்ந்து விட்டான். என்ஜினியரிங் முடித்து யு எஸ் ஸில் வேலை. 15 ஆண்டுகளில் கிரீன் கார்டும் வாங்கி விட்டான். அவன் மனைவியும் அங்கே வேலை செய்கிறாள். ஓகோ என்ற சுக ஜீவனம்.

அருண் நேற்றுதான் பிறந்தது போல இருக்குது. அவனுக்கு நாப்பத்திரெண்டு வயசாகிட்டது. அவன் பிள்ளைக்கு பன்னிரண்டு , பெண்ணுக்கு ஒன்பது வயசாகுது. சரியான குடும்பி யாகி விடடான்.

அவன் இனி இந்த மண்ணுக்கு வர்ரது நடக்காதது. அவனை எதிர்நோக்கி காத்துக் கெடப்பதுவும் பலனளிக்காது.

இருபது நாள் லீவில் அருண் குடும்பத்தோடு வந்திருந்தான். எனக்கும் ஹேமாவுக்கும் பொற்காலமாக பொழுது போனது. எங்களிருவரையும் யு எஸ் வரும்படி அழைப்பு விடுத்தான். டூரிஸ்ட் விசா ஏற்பாடு செய்கிறானாம். நான் முடிவேதும் சொல்ல வில்லை. வந்தவர்கள் நேற்றே கிளம்பி விட்டார்கள். எங்களுக்கு பொற்காலம் போய் கற்காலமாகி விட்டது. எங்களுக்குள் பேசிக்க எதுவுமே இல்லாமல் போய்விட்டது.


சென்னையிலிருந்து 109 ரயிலில் சொந்த ஊர் நோக்கி போய்க் கொண்டிருந்தோம். 
ரயிலில் படுத்தபடியே இன்றைய நிகழ்வுகளை அசை போட்டேன்.

காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால் புரோக்கர். ஒரு கேரி பேக்கில் பணம் கொடுத்து சரி பார்க்கச் சொன்னார். எண்ணிப் பார்த்து , 
” சரியாயிருக்கு ” என்றேன். 
ரெண்டல் அக்ரிமென்ட் கொண்டு வந்திருந்தார்; கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். 

அவர் போனதும் பெயிண்டர் வந்தார். ” ரெண்டுநாளில் முடித்து சாவியை புரேக்கரிடம் கொடுத்து விட்டு பாக்கிப் பணம் வாங்கிக்க” ச் சொன்னேன். 

சிறிது நேரத்தில் பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸில் இருந்து ஆட்கள் லாரியுடன் வந்திருந்தார்கள். அவர்கள் வேலையை முடித்து மாலையே கிளம்பி விட்டார்கள்; விடியற்காலை ஊரில் இருப்பார்கள். 

நானும் ஹேமாவும் ஒரு ட்ராலி பேக்குடன் இரவு 109 ரயிலில் கிளம்பினோம்; கபிஸ்தலம் நோக்கி. 

ன் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா எல்லாரும் அடக்கமான காவிரிக் கரையில் அடங்கிட.
—————————————————————————–
என் அப்பாவின் வாசத்தை முகர்ந்திடவும், சுவாசத்தை உணர்ந்திடவும்.
———————————————————–

Advertisement

2 thoughts on “என் மூச்சுக் காற்று

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: