கோடைக் காலங்களில் சிலர் வீடுகளில் இருக்கும் விருதா மாடுகள் (பால் கறவை நின்றுபோனவை), மற்றும் மேய்க்க ஆளில்லாதவை, தீவனப்பற்றாக்குறை உள்ளவை என எல்லாவற்றையும் உரிமையாளரிடம் பேசி வாங்கி வந்து பெரிய மந்தை ஆக்குவார்கள். அவற்றின் கழுத்தில் பெரும் ஒலி யெழுப்பும் மணிகளை கட்டிடுவார்கள். மணியோசை மைல் கணக்கில் கேட்கும். நில உரிமையாளர் களிடம் பேசி அவரின் நிலங்களில் கிடை போடுவார்கள். மாடுகளின் சாணம், சிறுநீர் அந்த நிலத்துக்கு இயற்கை உரமாகக் கிடைக்கும். கிடைகாரர்களுக்கு தலைக்கு நாளொன்றுக்கு ஒரு படி அரிசியும் படிக்காசும் கொடுப்பார்கள். ஊர் முழுவதுமுள்ள வயல்களில் கிடை போட்டபின் வேறு இடம் போவார்கள். வசதியுள்ளவர்கள் அப்போதே பணம் அல்லது நெல் கொடுத்து விடுவார்கள். மற்றவர்கள் அறுவடைக்குப்பின் நெல் கொடுப்பார்கள். பெரிய சாட்டை கொண்டு மாடுகளை வழிநடத்துவார்கள். சாட்டையைச் சொடுக்கும் போது துப்பாக்கி வெடிப்பது போல சத்தம் மட்டுமே வரும், மாட்டுக்கு அடி விழாது. இந்த கிடைமாடுகள் இப்போது அருகிவிட்டன.
கிடைப் பருவம் முடிந்ததும், மாடுகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் போது விருதா மாடுகள் எல்லாம் அநேகமாக பலன் பட்டு(சினையாக) இருக்கும். காரணம் கிடையில் சில பொலி காளைகளை வைத்திருப்பார்கள். மாட்டு உரிமையாளர்களும் அவர்களுக்கு சன்மானம் கொடுப்பார்கள்.
மனுநீதி என்ற திரைப்படத்தில் வடிவேலுவை துரத்தும் கூட்டத்தை குறித்து ” இது என்ன கிடை மாடுகள போல இந்த ஓட்டம் ஓடுறானுக” என்ற வசனம் பேசுவார்.
இது போலவே கிடை ஆடுகளும் உண்டு.