
ஆடிப் பெருக்கு – காவிரி பாயும் பகுதிகளிலெல்லாம் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு வழிபாடு நடைபெறும். பங்காளி வீட்டுப் பெண்கள் ஒன்று கூடி காப்பரிசி கிளறி எடுத்துக் கொண்டு போய் காதோலை கருகமணி, தேங்காய், பழத்துடன் காவிரிக்கரையில் வழிபடுவார்கள்.
சிறு பிள்ளைகள் சப்பரதட்டி எனும் சிறு தேர் ஓட்டி வருவார்கள். இது நாண்கு மூலையிலும் சக்கரம் வைத்த மரப்பலகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரத்தை தூக்கி வைத்தது போல இருக்கும். முற்றும் மரப்பலகையால் செய்யப் பட்ட இதில் பல வண்ண ஆயில் பேப்பர், ஜிகினா பேப்பர் ஒட்டி, வண்ணக் காகிதங்களில் பூக்கள் செய்து ஒட்டி அழகு படுத்தியிருப்பார்கள். சிலர் தேர் போல செய்து கூட இழுத்து வருவார்கள். அடிப்பலகையில் ஆணி அடித்து அதில் நூல் கயிறு கட்டி இழுத்து செல்வார்கள். வேகமாக இழுத்துக் கொண்டு ஓடும் போது பேலன்ஸ் இல்லாமல் கவிழ்ந்து விடும். ஒரு வாரத்துக்கு ஊர் முழுதும் ‘டர்ர..டர்ர….டர்ர..டர்ர..’ என்ற சக்கரம் மற்றும் ‘சர..சர’ என்ற வண்ணக்காகிதம் சத்தமே காதைப் பிளக்கும்.
மஞ்சள் நனைத்த நூலை அரச மரத்தை சுற்றிக் கட்டி சுற்றி வருவார்கள். அதே நூலை பெண்பிள்ளைகள் கழுத்திலும், ஆண்பிள்ளைகள் வலக்கையிலும் கட்டிக் கொள்வார்கள். அது வரை மணமுடித்த புது மணமக்கள் கல்யாண மாலையை ஆற்றில் விடுவார்கள்.
பழைய ஓலைச் சுவடிகளையும் அவற்றின் பெருமை தெரியாமல் ஆற்றில் விடுவார்கள். அப்படி விட்ட ஓலைகள் சில ஆற்றை எதிர்த்து நீந்திப் போகவே, எடுத்துப் பார்த்ததில் அவை சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார், எனத் தெரிய வந்ததாம்.
பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வார்கள். பிராமணப் பெண்கள் கட்டுச்சாதம் கொண்டு போய் படைத்து உண்டு வருவார்கள்.
ஆடிப் பெருக்கு – காவிரித்தாய்க்கும் மகளிர்க்குமான திருவிழா.